மாற்றம் ஒன்றே மாறாதது

Posted on ஜனவரி 12, 2015

2


அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

சில திங்களுக்கு முன்பு என்னுடைய முதல் Android செயலி ஒன்றை Google play store’இல் வெளியிட்டேன். அதன் பெயர் தான் Crispify. அந்த வெளியீடு பற்றிய கட்டுரை இது.

இப்பொழுது பல மாற்றங்கள் செய்து மீண்டும் வெளியிட்டிருக்கிறேன். இந்த வெளியீட்டில் என் நண்பர்கள் சிலரின் உழைப்பு பெரும் பங்கு உண்டு. அவர்களுடைய உதவியில்லாமல் என்னால் இந்த வெளியீட்டை நினைத்த நேரத்தில் நடத்தியிருக்க முடியாது.

இந்த முறையும் இந்தச் செயலியை உருவாக்கி வெளியிடுவதில் பல தடைகளைச் சந்தித்தேன். அவைகளைத் தாண்டி இதை வெளியிட்டதில் நிறைய பட்டறிந்தேன். அவைகளை இங்கே அனைவருக்கும் பகிர விரும்புகிறேன்.

நான் நிகழ்படங்களை நெறியமைக்கும் படிமுறைகளை கற்றறிந்து அவற்றில் மட்டுமே நிறைய வேலை செய்திருக்கிறேன். எனவே, Android செயலி உருவாக்குவது எனக்கு ஒரு புதிய முயற்சியே. இதுவே நான் தொடங்குவதுக்கு முதல் தடை.

Promo2

N.G.கார்த்திகேயன்:

என்னுடைய கல்லூரி கால நண்பனான N.G.கார்த்திகேயன் வீட்டுக்கு இரவு சென்று விடியும் வரை வேலை பார்ப்பேன். பகலில் அவன் அவனுடைய அலுவலகத்துக்கு செல்ல வேண்டியிருக்கும். நான் பகலில் தனியாக என் வீட்டில் வேலை செய்வேன். ஒரு திங்களில் 20 நாட்களாவது இரவு முழுவதும் அவன் வீட்டிலேயே தங்கி வேலை செய்திருப்பேன். அவன் என்னை ஒரு இடைஞ்சலாகக் கருதாமல் எனக்கு நிறைய கற்று தந்தான். அப்படித்தான் இந்தச் செயலிக்கான வேலை தொடங்கியது. எனக்கு எழும் பல ஐயங்களை மிகவும் பொறுமையாக தீர்த்து வைத்து ஒரு வழிகாட்டியாய் ஊக்கம் கொடுத்தான்.

AppScreenshot2

சரவண ராம் குமார்:

என்னுடைய நெருங்கிய நண்பனான சரவண ராம் குமார் சென்னையில் தங்கியிருக்க வேண்டிய சூழலில் இருந்தான். ஆனால், எனக்காக ஒரு திங்கள் முழுவதும் பெங்களூருக்கு வந்து தங்கி செயலி உருவாக்காத்தில் உதவி செய்தான். நிகழ்ப்படங்களைத் தானாகவே நெறியமைக்கும் படிமுறையை நான் C என்னும் கணினி மொழியில் உருவாக்கியிருந்தேன். அதை Android’க்கு புரியும் படியாக Java மூலம் தொடர்பு கொள்ளும் வேலைகளை (JNI) எனக்கு செய்து கொடுத்தான். அது போகவும் செயலிக்கு தேவையான சில உதவிகளைச் செய்தான்.

AppScreenshot3

P கார்த்திக்:

நான் வெளியிடுவதற்கு முடிவு செய்த இரண்டு நாட்களுக்கு முன் எதிர்பாக்காத படி என்னுடைய மடிக்கணினி திடீரென்று வேலை செய்யாமல் போய் விட்டது. இது தான் நான் சந்தித்ததில் பெரிய தடை. பழுதான என் மடிக்கணினியைச் சரி செய்வதற்கு 2-3 நாட்கள் ஆகும் எனத் தெரிந்தவுடன் துவண்டு போனேன். அப்போது தான் என்னுடைய கல்லூரி தோழன் கார்த்திக்கை தொடர்பு கொண்டு நடந்தவற்றைச் சொன்னேன். எனக்கு அவனுடைய மடிக்கணினியைக் கொடுத்து உதவியது மட்டுமல்லாது இறுதி நேரத்தில் நான் சந்தித்த பல தடைகளை கூட இருந்து இரவு (அல்ல காலை) 3 மணி வரைக்கும் விழித்து வேலை பார்த்தான். பல படபடப்புக்களுக்கு பிறகு ஒரு வழியாக அவன் அறையில் இருந்து தான் இதை வெளியிட்டேன்!

AppScreenshot5 (1)

K இராசேசு:

இவர் எனக்கு துவிட்டர் மூலம் தான் அறிமுகம். எனக்காக பல முறை Photoshop வேலைகள் செய்து கொடுத்திருக்கிறார். இந்த புது இலச்சினை (logo) மற்றும் படவுருக்கும் (icon) நிறைய உதவி செய்தார்.

AppScreenshot6

அருண் கார்த்திக் பாபு:

என்னுடைய அண்ணியின் தம்பி இவர். திறமையாக ஒளிப்படங்கள் எடுக்கக்கூடியவர். அவருடைய இரண்டு ஒளிப்படங்களை அவர் அனுமதியோடு என் செயலியில் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த ஒளிப்படங்கள் செயலியின் தோற்றத்தை அழகாக்கியது என்று சொன்னால் அது மிகையாகாது.

google_play

என்னுடைய எல்லா நண்பர்களும் தொடர்ந்து எனக்கு ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். முகமறியாத துவிட்டர் நண்பர்களும், நிறைய பேசுபுக்கு நண்பர்களும் கூட தொடர்ந்து துணையாக நிற்கின்றனர். என் செயலியைப் பற்றி செய்திகளை துவிட்டர், வாட்டுசப் போன்ற இடங்களில் பரப்பி உதவி செய்கின்றனர்.

எனக்கு உதவி செய்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பெரிய நன்றி.

Crispify Android செயலியை இங்கிருந்து தரவிறக்கி பயன்படுத்தலாம்!