உடன்பிறப்புகளே குறும்படம் உருவான கதை

Posted on ஜூன் 22, 2012

0


பெங்களூரில் ஒரு டுவீட்டர் சந்திப்பு நடந்தது. அன்று வந்தவர்கள் எல்லோருமாக சேர்ந்து ஏதாவது குறும்படம் எடுக்கலாம் என்று கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டது. நானாகவே முன்வந்து கதை எழுதுகிறேன் என்று சொன்னேன். பின்பு ஒரு திங்கள் இடைவெளிக்குப்பின் கதைச்சுருக்கம் ஒன்றை அரவிந்துக்கு மின்மடலில் அனுப்பினேன். அவரும் இந்தக் கதையையேக் குறும்படமாக எடுக்கலாம் என்று சொன்னார். பின்பு மீண்டும் ஒரு திங்கள் இடைவேளையில் முழுத் திரைக்கதையையும் வசனங்களோடு எழுதி முடித்தேன். தொடர்வண்டியில் பயணம் செய்யும் பொழுது முதல் காட்சி எழுதினேன். அதனால் தான் எழுத்துக்கள் விபத்துக்குளாகி தடம்புரண்டுவிட்டதோ என்று எண்ணவேண்டாம். பொதுவாகவே என் எழுத்துக்கள் என் எண்ண ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இப்படித்தான் சிதறிவிழும்.

உங்கள் பார்வைக்கு – உடன்பிறப்புகளே திரைக்கதை

இந்தக் குறும்படம் எடுக்கும் பொழுது நான் கற்றுக் கொண்டவைகளை இங்கேப் பகிர்ந்தால் புதிதாக எடுக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். திரைக்கதையை எழுதிமுடித்தவுடன் கதைமாந்தர்களைத் தேர்வுசெயதேன். தேர்வு செய்த நடிகர்களை ஒரு இடத்துக்கு அழைத்து திரைக்கதையைக் கலந்துரையாடினேன். திரைக்கதை மெருகேறியது. அதற்குப் பின் வசனங்களை எழுதி முடித்தேன். படப்பிடிப்புக் கருவி, அதன் தாங்கி, படத்தொகுப்பு மற்றும் ஒலிப்பதிவு செய்வதற்கான மென்பொருள் எல்லாமே ஏற்கனவே என்னிடம் இருந்தன(‘பெங்களூர்’ படம் எடுக்கும்போதே வைத்திருந்தவை தான்.). இதற்கடுத்து எனக்கிருந்த பெரிய வேலை திட்டமிடுதல் தான். வாரயிறுதிகளில் மட்டும் தான் குறும்படம் எடுக்கமுடியும் என்ற நிலையில் யார் யாரை என்னென்ன வேலை வாங்கவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டு மின்மடல் அனுப்பிவிட வேண்டும். சிலருக்கு மின்மடல் அனுப்பினாலும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு “மின்மடல் பாருங்கள்!” என்று சொல்லவேண்டும்! 🙂
ஏட்டில் எழுதியவை அனைத்தையும் அப்படியே திரையில் கொண்டுவர முடியாது என்பதை நன்றாக உணர்ந்தேன். அதுபோக ஒரு இடத்திற்கு சென்று எடுக்கும் பொழுது ஏட்டில் எழுதியவைகளைவிட புதிதாக நிறைய தோன்றும். மாறுதல்களுக்கு மனதைத் தயார் செய்துக் கொள்ள வேண்டும். வெளியிடத்தில் படம் எடுக்கும் பொழுது நிறைய சிக்கல்கள் வரலாம். கூட்டம் கூடி வேடிக்கை பார்ப்பார்கள். வானிலை சொதப்பலாம். சில இடங்களில் எடுக்க அனுமதி கிடைக்காது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தொகுப்பு வேலையில் இறங்கியாயிற்று. படத்தொகுப்பு முடிந்திருந்த வேலையில் சென்னைக்கு சென்று இசையமைப்பாளரிடம் அதைக் கொடுத்தேன்(இசை எப்படி அமைப்பது என்று அவன் சிந்திப்பதற்காக!). பின்பு பின்குரல் சேர்ப்புவேலை நடந்தது. பின்குரல் சேர்ப்பு முடிந்தவுடன் அதை Dropbox மூலம் இசையமைப்பாளருக்கும், அரவிந்துக்கும் அனுப்பிவைத்தேன். இப்பொழுது ஒரு குழுவாக இயங்குவதற்கு தொலைவு ஒரு சிக்கல் இல்லை, இணையம் நம்மை இணைத்து வைக்கிறது. இசையமைப்பாளன் இசை அமைத்துக் கொண்டிருந்த வேளையில் அரவிந்த் ஆங்கில அடிவரிகள் சேர்த்தார். அதே நேரத்தில் நானும் சரவணா ராம் குமாரும் படத்தொகுப்பை மெருகேற்றினோம். இந்த மூன்று வேலைகளையும் ஒன்றிணைக்கும் பொழுது பல திருத்தங்கள் தேவைப்பட்டன. திருத்தங்கள் செய்து முடித்ததும் ‘உடன்பிறப்புகளே’ குறும்படம் உருவாகிவிட்டது. 🙂