வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா!

Posted on மே 1, 2010

37


என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வின் பகிர்வு இது…..

கல்லூரியில் நான் ‘படிக்கும்’ போது இருந்த தன்மையை பற்றி முதலில் சுருக்கமாக விளக்கிவிடுகிறேன்! எனக்கு எப்பயுமே என்னை சுற்றி ஒரு ‘நண்பர்கள் வட்டம்’ இருக்கும்… அந்த வட்டத்தோட சுற்றளவு அடுக்கேற்ற வளர்ச்சி(Exponential growth) அடைந்து கொண்டே இருக்கும்!(சத்தியமா காசு கொடுத்து சேக்கல!) நான் மற்றவர்களை ‘கிண்டல்’ செய்யும் வழக்கம் கொண்டவன். இருந்தாலும், என் பேச்சில் இருக்கும் நகைச்சுவை உணர்வு(அப்டிதான் வெளில பேசிக்கிட்டாங்க!) ‘கிண்டல்’ பெறுபவர்களையும் சிரிக்க செய்தது! இதெல்லாம் போக எனக்குள்ள ஒன்று இருந்தது… துடிப்பு(‘கெத்து’, ‘திமிரு’, ‘தெனாவெட்டு’, ‘ரௌடித்தனம்’ என்றும் அழைக்கப்படும்!)…

கல்லூரிக்குள் எனக்கு எப்படி நேரம் போகிறதென்றே தெரியாது… இந்த பக்கம் கொஞ்சம் ‘காதல்’ அந்த பக்கம் கொஞ்சம் ‘மோதல்’ என்று போய்க்கொண்டே இருந்தது… வகுப்பில் பேசுவதால் வெளியேறுவது… கடைசி நேரத்தில் வேலைகளை முடிப்பது( 66% முடிக்காமல் விட்டுவிடுவேன்!) எனக்கு வழக்கம்…இளநிலையர்(Junior), மூத்தவர்(Senior), உடன்பயில்பவர்கள்(Classmates), அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என்று பாகுபாடின்றி ‘ஓட்டி’க்கொண்டிருந்த காலம் அது…

கல்லூரி வாழ்க்கையில் மூன்றாம் ஆண்டு….
வெறி பிடித்து சீனியர்களை(Seniors) வம்பிழுக்க தொடங்கிய ஆண்டு….

கல்லூரியில் எனக்கு ‘எதிரிகள்’ என்று நான் குறிப்பாக யாரையும் கருதியது கிடையாது. ஆனால், என்னால் மிகையாக ‘ஓட்டப்படுபவர்கள்’ எனக்கு எதிரிகளாக மாறிவிடுவர். அது போக, எனக்கு பிடித்த ஒரு ‘பெண்ணிடம்'(தோழி?) வம்பிழுப்பவர்கள் மடிந்தார்கள்… அவ்வளவு கோபம் வரும்… அளவுக்கதிகமான நொதி(Hormones) சுரக்கும் என்று நினைக்கிறேன்! அவர்களை எப்படி ‘கவனிக்க’ வேண்டுமோ, அப்படி கவனிப்பேன்!

நான் என் நண்பர்கள் கூட்டத்துடன்(“Gang” என்று செல்லமாக அழைக்கப்படுவர்!) மதியவேளையில் மட்டைப்பந்து விளையாடுவது ஒரு வழக்கம்(வகுப்பு இருந்தாலும்…!). நாங்கள் மொத்தமாகவே 8 பேர் தான் அந்த நேரத்தில் விளையாடுவோம். எனவே ஒரு சிறிய இடத்தை ‘பிடித்து’ வைத்திருப்போம். அன்று நானும், என்னுடைய 3 நண்பர்களும் மட்டும் முன்கூட்டியே அந்த ‘ஆடுகளத்திற்கு’ வந்துவிட்டோம். அன்று எதிர்பாராத விதமாக வேறு துறை(Department) ‘சீனியர்கள்’ எங்கள் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே விளையாடுவது எங்கள் ‘களத்திற்கு’ தடை இல்லை. எனவே நானும் என் நண்பர்களும் மற்ற நண்பர்களின் வருகைக்காக காத்திருந்த படி ‘சீனியர்களின்’ விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தோம்.

நாங்கள் வந்து எங்கள் இடத்தில் அமரும் முன்னரே எங்களுக்கும் ‘சீனியர்களுக்கும்’ ஒரு சின்ன ‘உராய்வு’ ஏற்பட்டது! அதனால் விளைந்த ‘தீப்பொறி’ மட்டும் என் மனதில் ஒரு ஓரத்தில் தங்கிக் கொண்டிருந்தது. அதை மறைத்து கொண்டு அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்! அப்பொழுது ‘இலக்குமுனைக் காப்பாளர்'(Wicket keeper!) விட்ட பந்து என் காலில் வந்து பட்டது. உடனே அந்த பந்தை எடுத்து ‘அவனுக்கு’ தூக்கி போட்டு, “பந்த ஒழுங்கா பிடிங்க…” என்று சொல்லிவிட்டு முறைத்தேன்… பதிலுக்கு அவனும் முறைத்தான்… மீண்டும் அவர்கள் விளையாட தொடங்கினர்…

நாங்கள் மற்ற நண்பர்கள் வருவதற்காக காத்துக்கொண்டே இருந்தோம். அப்பொழுது எங்கள் துறை ‘சீனியர்கள்’ பெரிய ஆடுகளத்திற்குள் வந்தனர்(அதாவது இன்னும் கொஞ்சம் தள்ளி உள்ள பெரிய இடத்தில்…). எங்கள் துறை சீனியர்களுக்கும் எனக்கும் ‘ஏற்கனவே’ ஆகாது! நான் ஒரு ‘சீனியரை’ மிகையாக ஓட்டி அவன் அழுகும் அளவிற்கு போயிருக்கிறான்(காமெடி பீஸ்)! என் நண்பர்கள் வரும்படியாக தெரியவில்லை… அதனால் நாங்கள் நால்வரும் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தோம்… நான் என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை, அந்த ‘தீப்பொறி’ தீயாக வெளியே வந்துவிட்டது!

“ஆமாடா… நம்ம இங்க இருந்து கிளம்புவோம்… இல்லனா இந்த …… …..(தணிக்கை செய்யப்பட்டுள்ளது!) மவனுங்க தொல்ல தாங்க முடியாது!” என்று அந்த ‘சீனியர்களை’ பார்த்த படியே சொன்னேன்!

விளையாட்டில் ஈடுபட்டிருந்த ‘சீனியர்கள்’ யாரும் இதை கவனிக்கவில்லை. கீழே அமர்ந்திருந்த ஒரு ‘மங்குனி அமைச்சர்'(அவன் இதை வெளியே சொல்ல பயந்து மற்ற ‘சீனியர்களிடம்’ காதில் போய் ஓதியதை வைத்து சொல்கிறேன்!) மட்டும் இதை பார்த்து விட்டான்! இதையறிந்த ‘சீனியர்கள்'(சுமார் 15 பேர்கள்) சீறி எழுந்தார்கள். கடுங்கோபத்துடன் எங்களை நோக்கி வந்தார்கள்.

எங்கள் நான்கு பேர்களையும் வெறித்து பார்த்த ‘சீனியர்களின் தலைவன்’, “இதுல யாரு டா??” என்று அந்த ‘மங்குனி அமைச்சரிடம்’ வினவினான்.

அவன் என்னை நோக்கி கைகாட்டிவிட்டு, “நம்மள பாத்து தான் ஏதோ திட்டினான்… ஆனா என்ன சொன்னான்னு தெரியாது!” என்று பின்வாங்கினான்.

உடனே பல ‘லகுட பாண்டிகள்’ என்னை சுற்றிவளைத்தபடி வெவ்வேற திசைகளிலிருந்து, “என்ன டா சொன்ன? என்ன டா சொன்ன?” என்று எதிரொலித்தார்கள்!

“ஆமா… இப்ப உங்களுக்கு என்ன பிரச்சன?…” என்ற தோற்றத்தை என் பார்வையில் புகுத்திக் கொண்டு, “நான் உங்கள எதுவும் சொல்லல… என்னோட ஃபிரண்ட தான் சொன்னேன்!” என்று அருகில் இருந்த நண்பனை சுட்டினேன்!

நம்ப மனம் வரவில்லை அவர்களுக்கு.

“ஹாஸ்டலா?”
“இல்ல…”
“ஹாஸ்டலுக்கு வா… உனைய அங்க வச்சு விசாரிப்போம்!” என்று சொல்லி ஒருவன் என் கையை பிடித்து இழுத்தான்!
“ம்ம்ம்… சரி!” என்று நானும் நடக்க தொடங்கினேன்! அதைப் பார்த்தே அவர்களின் வேகம் தளர்ந்தது! அந்த நேரத்தில் நானே எதிர்பாராத விதமாய் என்னுடைய இன்னொரு ரெண்டு நண்பர்கள்(அவர்களுக்கு அப்பொழுது அங்கு என்ன நடந்ததென்றே தெரியாது!) வந்து சேர்ந்தனர். அதில் ஒருவன் திடீரென்று அவனுடைய இடைவாரை(Belt) கழட்டி ‘சீனியர்களுக்கு’ நேராக காட்டி மிரட்டினான். ‘சீனியர்கள்’ அதிர்ந்து போயினர். உடனே என்னை சுற்றி என் நண்பர்கள் 6 பேரும் பாதுகாப்பாக நின்று கொண்டு என்னை அவர்களுடன் போக அனுமதிக்கவில்லை. உடனே அவர்கள் முடிவை மாற்றிக் கொண்டு என்னை அங்கேயே வைத்து உசாவுவதாக தெரிவித்தனர். ஆனால் நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது! என் நண்பர்கள் ஒரு 50 அடி தொலைவில் இருந்து ‘வேடிக்கை’ பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எந்த டிபார்ட்மன்ட் டா நீ?” – அவர்களின் கேள்வி
“ஈ.சி.ஈ (ECE)” – என் பதில்

“ஓ… அங்க விளையாடுறது உங்க சீனியர்ஸ் தான?!!” – என்றொருவன் எங்களுடைய ‘சீனியர்களை’ நோக்கி கைகாட்டி என்னை பயமுறுத்த முயற்சித்தான்!

“ஆமா…” என்றேன் அழுத்தமாக…. கொஞ்சம் கூட அவர்களுக்கு அசைவு கொடுக்கவில்லை…

உடனே என்னை நேராக அழைத்து எங்களுடைய ‘சீனியர்கள்’ முன்னால் போய் நிறுத்தினர்.

ஆடுகளத்தின் நடுவில் நான்… என்னை சுற்றி கோபத்துடன் 30 ‘சீனியர்கள்’… 200 அடி தொலைவில் என் 6 நண்பர்கள்…

‘டரியல்’ தொடங்கியது!

இந்த நேரத்தில் படபடத்து கொண்டிருத்த ஒரு ‘நலம்விரும்பி சீனியர்’ பி.டி.மாஸ்டரை(P.T Master) அழைக்க சென்றுவிட்டார்!

எங்கள் ‘சீனியர்களில்’ இருந்த ஒருவன், “இவனா?! இவன் எங்களையும் வம்பிழுப்பான்!” என்று விளக்கவுரை கொடுத்தான்!

அதை கேட்ட மற்ற துறை ‘சீனியர்கள்’,” இவங்க ரொம்ப கேவலமான அடிமைங்க போல…” என்பது போன்ற பார்வை பார்த்தனர்!

உடனே அந்த குழுமத்தில் இருந்த ஒரு ‘முரட்டு சீனியர்’ வேகமாக என்னை நோக்கி வந்து என் நெஞ்சில் கை வைத்து வேகமாக தள்ளினான்!

“நீ என்ன பெரிய ரௌடியா டா?!” என்று கேட்டுவிட்டு கடுமையாக முறைத்தான் அந்த ‘முரட்டு சீனியர்’.
நான் அவனை முறைத்தேன். பதில் பேசவில்லை.

உடனே கூட்டத்தில் மறைந்திருந்த ஒரு ‘பாலபத்திர ஓணாண்டி’, ” அவன் யாரு டா? சீனியருக்கு முன்னாடி பெல்ட்ட கழட்டி காட்டுறான்!” என்று கேட்டான்.

“என்னோட ஃபிரண்டு…”

“யாருடா அது?” – என்னோட சீனியர்
“கெவின்(Kevin)”
“அவனா?! அவன் இவனைவிட மோசமானவானாச்சே!” – என்னோட சீனியர்

ஆமா… கெவின் ஒரு பெரிய ‘பருப்பு’… நான் ஒரு சின்ன ‘பருப்பு’… அவ்வளவுதான்…

இந்த நேரத்துக்குள்ள அந்த ‘நலம்விரும்பி சீனியர்’ பி.டி.மாஸ்டரை(உடற்பயிற்சி ஆசிரியர்) அழைத்து வந்துவிட்டார்!

“என்னப்பா? என்ன பண்ண?” – சிரித்த முகத்துடன் பி.டி.மாஸ்டர்!
“சார்…” நான் சொல்லத் தொடங்கினேன்(பொய் தான்… வேற என்ன?)! அதுக்குள்ள ஒரு ‘தலைமை ஒற்றன்’ உள்ளே புகுந்து, “சார்… இவன் சீனியர்ஸ கெட்ட வார்த்தைல திட்டுறான் சார்!” என்றான்!

“ம்ம்ம்ம்….” பெருமூச்சு விட்டார் பி.டி.மாஸ்டர்.
“என்னோட இத்தன வர்ஷ சர்விஸ்ல(பணி காலம்) இப்படி ஒரு கேச(வழக்கு) பாத்ததில்ல…!” என்றார்.
“இவர் பி.டி.மாஸ்டர் தான?!, கோர்ட் ‘டவாலி’ மாதிரி பேசுறாரு..!” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தேன்!

என்னை ‘மன்னிப்பு மடல்'(Apology Letter) எழுதுமாறு தீர்ப்பளித்தார் பி.டி.மாஸ்டர்!

அந்த ‘நலம்விரும்பி சீனியரின்’ உதவியோடு முதன் முறையாக ‘மன்னிப்பு மடல்’ ஒன்று எழுதினேன்(பெறுனராக தலைமை ஆசிரியர்!).

சங்கத்தை உடனே கலைத்துவிட்டோம்!

பொறுமையின்மை, கோபம், துடிப்பு எல்லாம் இளம்பருவத்தில் இருப்பது இன்றியமையாதது! ஆனால், அது நமக்கு கற்றுத் தரும் பாடங்களை சரியாக கற்க வேண்டும்!

பின்குறிப்பு: “நீ ராமனா? ராவணனா?” , “நீ பாதாம் பருப்பா? இல்ல முந்திரி பருப்பா?” போன்ற பின்னூட்டங்களை தவிர்க்கவும்!