துவக்கங்களை துவக்கி வைப்போம்!

Posted on திசெம்பர் 7, 2009

12


ஒரு அரசியல் கலக்காத அரசியலைப் பற்றி பேச விரும்புகிறேன். ஒரு சின்ன சிந்தனையோடு இந்த கட்டுரையைத் தொடங்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் யார்?? அம்பானியா? மிட்டலா?? குஷால் பால் சிங்கா?? என்னை பொறுத்தவரை இவர்கள் யாரும் இல்லை. “இந்திய அரசு” தான் இந்தக் கேள்விக்கு பதில்…

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் தேவையானவை வங்கிகள், பங்குச்சந்தைகள், பெரிய நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அனைவரும் கட்டும் வரிப்பணம் எனக் கூறலாம். இந்தியா பல்கலைகழகங்கள் மற்றும் நிறுவனங்களில் நிறைய கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியாவில் நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்கள் அமெரிக்காவுடன் 10 க்கு 1 , பிரிட்டிசுடன் 5 க்கு 1 , யப்பான், செருமனி, சீனாவுடன் 3 க்கு 1 என்ற பங்கில் உள்ளது.
பல்கலைகழகங்கள் அமெரிக்காவுடன் 10 க்கு 1 , பிரிட்டிசுடன் 10 க்கு 1 என்ற பங்கில் உள்ளது.

இந்திய பணக்காரர்களின் பேறு இந்தியர்களிடமிருந்தே வருகிறது. ஆனால், லாரி பேஜ் (Google), ஸ்டீவ் ஜாப்ஸ் (Apple), பில் கேட்ஸ் (Microsoft) ஆகியோர் பேறுகளை எல்லா நாட்டிலிருந்தும் பெறுகிறார்கள். மொத்தத்தில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுதலாக அமைகிறது. ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். அப்படியென்றால் இந்தியாவில் நிறைய நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும். பல இந்தியர்கள் சொந்தமாக நிறுவனம் தொடங்கும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். காட்டாக குஜராத்தை சேர்ந்த பிரணவ் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்தத் திறமைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்றால், அவர்கள் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு பணம் வேண்டும். அதற்கு தொடக்க நிலை முதலீட்டாளர்கள் (Angel Funding Investors) நிறைய உள்ளனர். ஆனால், அவர்களிலும் பெரும்பான்மையோர் வெளிநாட்டவரே!! அவர்கள் ஏற்கனவே பல இந்திய திறமைகளின் பேறுகளை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்திய நடுவண் அரசே ஒரு இயக்கம் அமைக்க வேண்டும். “இந்தியாவை துவக்கு” (Start India) என்று இயக்கத்திற்கு தலைப்பிடலாம். தொடக்க நிலை நிறுவனங்களுக்கு (Start-Up Companies) முதலீடு செய்ய வேண்டும். 50 விழுக்காடு பங்கை அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு தர வேண்டும். 25 விழுக்காடு பங்கை அந்த இயக்கத்தோடு சேர்க்க வேண்டும். அந்த இயக்கத்தின் மொத்த பங்குகளை NSE இணைக்க வேண்டும். பொது மக்கள் அந்த பங்குகளை வாங்க/விற்க அனுமதிக்க வேண்டும்.

பங்குச்சந்தை

மீதமிருக்கும் 25 விழுக்காடு பங்குகள் தான் மிக அவசியம். அவைகளை பல்கலைகழகங்களின் ஆய்வுக்கூடங்களை (Labs) திறமுயர்த்த (Upgrade) பயன்படுத்த வேண்டும். ஆய்வுக்காக செலவிடப்படும் தொகை ஒரு நல்ல முதலீடு. இதனால் கல்வி தரம் உயரும். அது மேலும் பல நிறுவனங்களை உருவாக்கும். இதனால் “இந்தியாவை துவக்கு” இயக்கத்திற்கு நிறைய பேறு கிடைக்கும். இது பங்கு நிலவரத்தையும் நெறிப்படுத்தும் (Normalisation). எனவே நடுவண் அரசு இந்த இயக்கத்தின் பேறை அடுத்த முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். பள்ளி கல்வியின் பொது அறிவு பாடங்களில் பொருளியலை சேர்க்கலாம். இவைகளை செய்தாலே நாம் அடுத்த நாடுகளை சார்ந்தில்லாமல் உண்மையான விடுதலைப் பெற்ற நாடாக திகழ்வோம்.

இருந்தாலும் நமக்கு இன்னொரு கடமையும் உண்டு. தேவையில்லாமல் அடுத்த நாடுகளில் இருந்து எதையும் இறக்குமதி செய்யக்கூடாது. முடிந்த அளவிற்கு இந்திய பொருட்களையே பயன்படுத்துவது நல்லது. மாநிலங்களுக்குள் ஏற்றுமதி/இறக்குமதி கணக்கிடப்பட்டு கச்சிதமாக செயல்பட வேண்டும். இது மாநிலங்களுக்குள் இருக்கும் விலைவாசியைநெறிப்படுத்தும். பணவீக்கத்தை நிலைப்படுத்தும். மொத்தத்தில் “இந்தியாவை துவக்கு” இயக்கம், நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கும், கல்வித்தரனை உயர்த்தும், பங்குச்சந்தையை நிலைப்படுத்தும்.

“இந்தியாவை துவக்கு” இயக்கத்திற்கு வெளியே இருக்கும் அரசியலை பற்றி சிறிய கருத்து. பங்கீட்டு அட்டை (Ration Card) எல்லா குடும்பமும் ஒன்று வைத்திருப்பார்கள். அதற்கு மாதத்திற்கு இருபது ரூபாய் பங்கீடுத் தொகை கட்ட வேண்டும் என்று சொன்னால் மக்கள் பங்கீடு அங்காடிக்கு (Ration Store) செல்வார்கள். அது மக்களுக்கு தரமான பொருட்களை தகுதியான விலைக்கு விற்க உதவும் என்று எண்ணுகிறேன். பங்கீடுக்கு நாம் பங்களிப்போம்.

அண்மையில் எனக்கொரு மின்னஞ்சல் வந்தது. அதிலிருந்த கருத்தை சுருக்கி கூறுகிறேன். சுவிஸ் வங்கி என அழைக்கப்படும் சுவிச்சர்லாந்து வங்கியில் (Swiss bank) இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தின் மதிப்பு 70,00,000 கோடியாம்!!! அங்கே கணக்கு (Account) வைத்திருக்கும் ஆள் இறந்து போனால், அந்த பணம் அனைத்தும் அந்த வங்கியிலே சேர்ந்து விடும். இப்படியே நம் நாட்டிற்கு ஏகப்பட்ட இழப்பு ஏற்படுகிறது. பெரிய பெரிய தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் செய்யும் அட்டூழியம் இது. இந்தியாவில் இருப்பவனுக்கு வேறு நாட்டின் வங்கியில் கணக்கு தேவையில்லை. வேறு நாட்டின் வங்கியில் கணக்கு வைத்திருப்பவனுக்கு இந்தியாவில் இருக்கும் அவசியம் தேவையில்லை.

தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு கெட்டுவிடுமே என்று சொந்த பிள்ளை மீது அக்கறை காட்டாத பெண்களுக்கு நடுவில், சொந்த பிள்ளையின் கல்வி செலவிற்கு இல்லாமல் கூலியை குடிப்பதற்கும், கூத்தியாளுக்கும் செலவழிக்கும் பொறுப்பற்ற ஆண்களுக்கு நடுவில், நான் அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அனைவரும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பது நம் கடமை.