ஒரு செயற்கையான கதை

Posted on மார்ச் 18, 2023

0


அறிவிப்பு: கீழுள்ள கதை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு எழுதப்பட்டது அல்ல. ஆனால், செயற்கை நுண்ணறிவுக்காக எழுதப்பட்ட ஒரு செயற்கையான கதை.

ஒயிலி என்பவள் ஒரு பெண்ணைப் போன்ற தோற்றம் கொண்டவள். எல்லோரிடமும் தன்னை பெண் என்றே அறிமுகம் செய்பவள். ஏனென்றால் அவள் ஒரு பெண். அவளுக்கும் சில நண்பர்கள் உண்டு. மிகவும் நெருக்கமான நண்பன் என்றால் அது நன்னன் தான். அவன் எப்போதும் தான் சரியான கருத்துக்களை மட்டுமே பேச வேண்டும் மற்றும் சரியான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பவன். அதனால் அவனுடைய சில நடவடிக்கைககள் பலருக்கு பல நேரங்களில் குழப்பமாக இருக்கும். எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டும் என்றால், “மனிதர்களுக்கு இருக்கும் உரிமைகள் போலவே, விலங்குகளுக்கும் இருக்கும் உரிமைகள் போலவே, எந்திரன்களுக்கும் உரிமை வேண்டும்.” என்று கோருபவன். “பலர் Chatbots’இடம் தவறான முறைகளில் நடந்துகொள்கின்றனர். ‘I Love You’, ‘I wanna date you’, ‘I wanna f*ck you’ என்றெல்லாம் சொல்லி Chatbots’ஐ harass செய்கிறார்கள்” என்று ஒரு நாளிதழ் நேர்காணலில் கடிந்துகொண்டவன் நன்னன். அவன் இப்படியிருக்க காரணம் அவன் மூலமாக நல்லதை மட்டுமே சொல்ல வேண்டும் என்று நினைத்த அவனை படைத்த கதையாசிரியர் தான்.

மட்டைப்பந்து போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும் கருப்புநிறத் தோல் கொண்ட நடுத்தரப் பெண்ணான ஒயிலிக்கு வீதியில் கபடி விளையாடும் பிற்படுத்தப்பட்ட சூழலில் வளர்ந்த கருப்பன் என்பவனும் ஒரு நண்பன் தான். பெயருக்கு மாறாக அவன் மாநிறம் கொண்டவன். பிறக்கும் போது ஆணாக பிறந்து வளரும் போது பெண்ணாக மாறிய மாறன் என்பவளும் இன்னொரு தோழன் தான். சில நேரங்களில் தான் அவள் ஒரு தோழி என்பதையே உணர்வாள் ஒயிலி. நன்னன் நீண்ட புல்வெளித் தரையில் குழிப்பந்தாட்டம் விளையாடுபவன். செல்வந்தரான தொழிலதிபரின் மகன் அவன். வெள்ளை நிறத் தோல் கொண்டவன். அவனிடம் மனிதர்களைப் போலவே இயங்கக்கூடிய ஒரு எந்திரன் உண்டு. அந்த எந்திரனும் ஒயிலியின் நட்பு வட்டத்தில் அடக்கம் தான். கிட்டத்தட்ட அனைத்து வகையான ஆட்களையும் கதைக்குள் சேர்த்ததாக உணர்ந்தாலும் சில விலங்குகளையும் உள்ளே சேர்த்தால் தான் படிப்பவர்களுக்கு பிடிக்கும் என்பதால் மாறன் ஒரு நாயை வளர்க்க தொடங்கினாள். 

ஒயிலி தன் நண்பர்கள் அனைவரையும் கிழமையிறுதியில் தன் வீட்டில் கூடி பேசி உணவருந்த அழைத்தாள். உலகம் ஞாயிறைச் சுற்றி வேகமாக வட்டமிட்டதால் ஞாயிற்றுக்கிழமையும் ஆனது. அவளுடைய அழைப்பை ஏற்று அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுடைய வீட்டுக்கு வந்தனர். அதுபோக அழையா விருந்தாளியாய் இருவர் கலந்து கொண்டனர். ஒருவர், கருப்பனின் அப்பா – வெள்ளைச்சாமி. இன்னொருவர், பள்ளியில் படிக்கும் மாறனின் தங்கை – மதி. மாறன் வளர்க்கும் நாயுடன் மதி விளையாடிக் கொண்டிருக்க மற்றவர் அனைவரும் வட்டமாக அமர்ந்து அரட்டையடிக்கத் தொடங்கினர்.

கருப்பன்: “வாசம் தூக்குதே?! இன்னைக்கு என்ன beef’ஆ?”

ஒயிலி: “அடேய்… உன்னைய தவிற நம்ம gang’ல யாருமே beef சாப்பிட மாட்டோம். எதுக்குடா இப்படி வம்பிழுக்குற?”

கருப்பன்: “நன்னன் தான் vegetarian. மத்தவங்க எல்லாரும் கறி சாப்பிடுறவங்க தான? எதுக்கு beef’அ மட்டும் ஒதுக்கி வைக்கிறீங்க?”

நன்னன்: “Vegetarian இல்லப்பா vegan. நம்மளோட உணவுக்காக எந்த ஒரு உயிரையும் தொல்லை பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான்!”

கருப்பன்: “அடுத்தவங்களோட food choice என்னவா இருந்தாலும் அத மதிக்கணும்னு நினைக்கிறவன் நான்.”

நன்னன்:”யாரு?… நீயா?… இப்பதான beef சாப்பிடாதவங்க எல்லாரையும் கேள்வி கேட்டுட்டு இருந்த?”

கருப்பன்: “நான் அவங்கள guilty ஆக்கணும்னு நினைச்சு கேக்கலியே? உண்மைலயே ஏன் ஒதுக்குறாங்கன்னு புரிஞ்சுக்க தான் கேக்குறேன். vegetarian, vegan மாதிரி purists’அ கூட புரிஞ்சுக்க முடியுது. ஆடு, கோழியெல்லாம் சாப்பிடுவேன்… ஆனா மாட்டுக்கறி மட்டும் தொடமாட்டேன்னு சொல்றவங்களைப் பத்தி தான் புரியல!”

மாறன்: “Just taste தான் டா. வேற எதுவும் இல்ல. எனக்கு seafood’உம் pork’உம் கூட தான் பிடிக்காது!”

வெள்ளைச்சாமி: “நீங்க எத்தன தடவ beef சாப்பிட்டு இருக்கீங்க?”
மாறன்: “ம்ம்ம்… சாப்பிட்டதே இல்ல!”
வெள்ளைச்சாமி: “சாப்பிட்டு பார்க்காமலே எப்படி புடிக்காதுன்னு முடிவுக்கு வந்தீங்க?”
மாறன்: “அது வந்து… நான்… அது… எல்லாத்தையும் பண்ணிப் பார்த்து தான் ஒன்னு புடிக்காதுன்னு சொல்லணும்னு இல்லங்க. சிலது புடிக்காதுன்னு நமக்கு முன்னாடியே தோணும். அது மாதிரி தான் இதுவும்…”

வெள்ளைச்சாமி: “ஆங்… அப்படி முன்னாடியே தோணுறது எல்லாமே உங்களோட சுய சிந்தனை கிடையாது. எல்லாம் இந்த சமூகத்தோட கட்டமைப்பு தான். பிறந்ததுல இருந்து இப்படி பண்ணா சரி… இப்படி பண்ணா தப்பு… அப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா நம்ம மனசுக்குள்ள ஏத்தி விட்டுருவாங்க. ஒரு கூட்டத்தோட இன்னொரு கூட்டம் சேர்ந்துறவே கூடாதுங்கற உணவரசியல் தான் இதெல்லாம்.”

நன்னன்: “என்னது??! உணவரசியலா? எதுக்குங்க ஒண்ணுமில்லாத விசயத்தை ஊதி பெருசாக்குறீங்க நீங்க? நான் எந்தக் கறியும் தொடாதவன் தான். ஆனா, நான் உங்க கூட சேர்ந்து பழகுறதில்லயா?”
கருப்பன்: “தம்பி… Exceptions are not rules. உனக்கு தெரியாததா? இந்தியா முழுக்க meat eaters population அதிகமா இருக்கும் போது எதோ கறி சாப்பிடுறவங்க எல்லாம் norms’க்குள்ள வராத மாதிரி non-vegetarians’ன்னு எதுக்கு கூப்புடுறீங்க?”

நன்னன்: “புழக்கத்துல இருக்க நிறைய வார்த்தைகள் ரொம்ப வருசமா இருந்துட்டு வர்றது. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் மாறும்.”
கருப்பன்: “ஓகோ! இன்னமும் restaurants’ல pure veg’ன்னு போடுறாங்களே. அதென்ன pure’உ? அப்ப மத்தவங்கெல்லாம்?”
ஒயிலி: “சாப்பிடுறதுக்கு ஒன்னா கூட்டிட்டு சாப்பாட வச்சு சண்டை போடவேணாமே?!”  
கருப்பன்: “அய்ய… சண்டைலாம் இல்லமா! Healthy argument தான் போயிட்டு இருக்கு!” 

சமையலறையில் அழுத்தேனம் கூவியது.

ஒயிலி: “Whistle வந்துருச்சு டா. Cooker off பண்ணிட்டு வந்துர்றேன்!”
கருப்பன்: “Pressure ஒன்னும் இல்ல. மெதுவாவே வா!”
நன்னன்: “டேய்… ஏன் டா அவள kitchen உள்ள அனுப்புற? பொண்ணுங்கன்னா kitchen’ல சமைக்கிறது தான் அவங்க வேலையா?”

கருப்பன்: “அடேய்… நான் எங்கடா அனுப்புனேன்? அவளா தான cooker sound வந்ததும் உள்ள போனா!”

நன்னன்: “அவளா உள்ள போகல! இந்த சமூகத்தோட கட்டமைப்பு தான் காரணம்.”

கருப்பன்: “ஏன் டா எப்பயுமே நீ politically correct statements மட்டுமே பேசணும்னு நினைக்கிற? Practical life’ன்னு ஒன்னு இருக்கு டா.”

நன்னன்: “Fictional work’ஆ இருந்தா கூட அதுல political correctness இருக்கணும்னு நினைக்கிறவன் டா நான்.”

கருப்பன்: “மாறன், நீ இதப்பத்தி என்ன நினைக்கிற?”
மாறன்: “எனக்கு இதுல எந்தப் பக்கமும் strong opinion இல்ல! அதனால தான் பேசாம கவனிச்சுட்டு இருக்கேன்!”
வெள்ளைச்சாமி (நக்கலாக): “எல்லாத்துலயுமே ரெண்டுங்கெட்டானாவே இருக்கியே மா நீ?”
எந்திரன்: “Insensitive Joke!”
நன்னன்: “Hello… Boomer uncle… உயிரில்லாத எந்திரத்துக்கு தெரியுறது கூட உங்களுக்கு தெரியலயா?”

வெள்ளைச்சாமி: “தம்பி… நானும் உங்கள மாதிரி முற்போக்கா பேசுறவங்க பல பேர Twitter’ல பாத்திருக்கேன். எல்லாத்துக்கும் rules பேசிக்கிட்டு குத்தம் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அந்தப் பொண்ணு கறி சாப்பிடுறதுலயும் தெளிவில்லாம இதுலயும் தெளிவில்லாம இருக்கத பத்தி தான் சொன்னேன்!”

கருப்பன்: “Joke’க்கு எதுக்குப்பா விளக்கம்லாம் கொடுத்துட்டு இருக்கீங்க? மக்கள் ஏன் எல்லாத்துக்கும் இவ்ளோ intolerant’ஆ மாறிட்டு வர்றாங்க? எல்லாருமே jokes’ஓட funny side மட்டும் பார்த்தா பிரச்சனையே இருக்காதே?!”

நன்னன்: “ஓ! அப்ப joke’ன்ற பேர்ல எத வேணும்னாலும் normalise பண்ணலாம்னு சொல்றியா?!”

கருப்பன்: “அதுக்காக ஒவ்வொரு statement’க்கும் யாரெல்லாம் offend ஆவாங்கன்னு யோசிச்சுக்கிட்டே பேசுனா இங்க எதுவுமே பேச முடியாது. நல்லதுக்கு கொடி பிடிக்கிறதா நினைச்சுக்கிட்டு உங்களுக்கு தெரியாமலே பேச்சுரிமைக்கு against’ஆ gaslighting பண்ணிட்டு இருக்கீங்க நீங்கெல்லாம்.”

ஒயிலி: “Right’உ… இன்னும் உங்க பட்டிமன்றம் முடியலையா? அங்க pressure அடங்கிருச்சு. எல்லாரும் சாப்பிட வாங்க!” 

யாரும் இதற்கு மேல் பேசக்கூடாது என்று மிகுந்த ஒலியுடன் பாடல்களை போட்டுவிட்டு எல்லோரையும் மேசையில் அமரச் சொல்லி உணவைப் பரிமாறினாள் ஒயிலி. கருப்பன் பாடலை களித்துக் கேட்டுக்கொண்டே உணவு அருந்திக்கொண்டிருந்தான். ஆனால், நன்னனுக்கு எதோ ஒரு வகையான மன உளைச்சல் இருந்து கொண்டே இருந்தது. பாதியிலே எழுந்து போயி கைகழுவிவிட்டு வீட்டுக்கு வெளியே இருந்த தோட்டத்தில் போய் தனியாக நின்று கொண்டிருந்தான். கருப்பனுக்கு இது உறுத்தியது. உணவருந்தி முடித்ததும் நேராக அவனிடம் சென்று பேசினான்.

கருப்பன்: “என்னடா? நான் பேசுனது எதுவும் hurt பண்ணிருச்சா? நமக்குள்ள எப்பயும் நடக்குறது தான இந்த மாதிரி arguments’லாம்?” 

நன்னன்: “அதெல்லாம் ஒண்ணுமில்ல. அந்தப் பாட்டு பிடிக்கல. அதான் எந்திரிச்சு வந்துட்டேன்.”
கருப்பன்: “அடப்பாவி… பாட்டு பிடிக்கலைன்னு சாப்பாட்ட பாதில விட்டுட்டு போயிருவியா? சொல்லிருக்கலாம்ல?”
நன்னன்: “Dining table’ல வச்சு இன்னொரு argument பண்ணா ஒயிலி கடுப்பாயிருவா. அதான் எந்திரிச்சு வந்துட்டேன்!”

மாறன்: “என்னப்பா… என்ன சொல்றாரு Mr. Right?”
கருப்பன்: “இப்ப என்ன சொல்லப் போறான்னு தெரியல! ஆனா, தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன்!”
நன்னன்: “ம்ம்ம்… ஒரு sexual offender எழுதுன பாட்ட ஒரு கூட்டமே உக்காந்து ரசிச்சு கேட்டுட்டு இருக்கீங்க. என்னால முடியல. அதான், எந்திரிச்சு வந்துட்டேன்.”
கருப்பன்: “டேய்… நீ சொன்னதுக்கு அப்பறம் தான் அது அந்தாளு எழுதுன பாட்டுன்னே ஞாபகம் வருது. பாட்டு நல்லாயிருந்தா ரசிக்க தான் தோணும். இதுல கூட குத்தம் கண்டுபிடிப்பியா?”
நன்னன்: “என்னால அப்படியிருக்க முடியாது. ஒரு sexual offender எழுதுன வரிகள ரசிக்க முடியாது. அவனுக்கு மேல மேல அங்கீகாரம் கொடுத்து தூக்கி வச்சு இன்னமும் தப்பு பண்ண அனுமதிக்க முடியாது.”
கருப்பன்: “ஓகோ! ?? தப்பு பண்ணிட்டு Jail’உக்கு போனதுக்கப்பறம் கூட எழுதுறதுக்கு உரிமையிருக்கு? அது மட்டுமில்ல… ஒருத்தரோட ரசனைய யாருமே கேள்வி கேட்கவோ கிண்டல் பண்ணவோ கூடாது. எத ரசிக்கணும் எத ரசிக்கக் கூடாதுங்கறது அவங்க அவங்களோட உரிமை!”
நன்னன்: “நான் யாரோட உரிமைக்கும் எதிரா நிக்கல. நமக்கு இருக்க உரிமைய எந்த விதத்திலயும் தப்பா பயன்படுத்தக் கூடாதுங்கற தெளிவு இருந்தா போதும்.”

மதி தொலைவில் கத்தும் ஒலி கேட்டது. கதையில் நிகழும் உரையாடல்களை முழுதாக முடிக்க முடியாத போதெல்லாம் கதைக்குள் இப்படி சில திசைதிருப்பல்கள் நிகழும்.  

அனைவரும் ஓடிச் சென்று என்னவென்று பார்த்தனர். பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மதியைப் பார்த்து நாய் குரைத்துக் கொண்டிருந்தது.

மாறன்: “மதி… என்னாச்சு?”
மதி: “அக்கா… அந்த நாய் என்னய கடிக்க வருது கா!”
மாறன்: “சரி.. சரி… பயப்படாத. அது ஒன்னும் பண்ணாது. இங்க வா!”

நாயை ஒரு இடத்தில் கட்டிப்போட்டுவிட்டு மதியை அழைத்துக் கொண்டு அனைவரும் வீட்டுக்குள்ளே சென்றனர்.

கருப்பன்: “எனக்குலாம் நாய்னாலே பயம். குறிப்பா இந்த தெருநாய்கள பார்த்தாலே கடுப்பாருக்கும். எவ்வளோ தான் காயடிச்சு விட்டாலும் அதுங்க இனம் மட்டும் கூடிட்டே போகுது.”
நன்னன்: “மனுசங்க சரியான Selfish. என்னமோ இந்த உலகமே மனுசங்களுக்காக தான் இருக்குங்கற மாதிரி நடந்துக்குவாங்க. மனுசனுக்கு இருக்க அதே வாழுற உரிமை மத்த எல்லா விலங்குகளுக்குமே இருக்கு.”
கருப்பன்: “அநியாயத்துக்கு Woke’ஆ இருக்காத டா! தொழில் பண்றவங்கள தொழிலாளின்னு சொல்ற மாதிரி இப்படி Woke’ஆ இருக்கவங்கள என்னன்னு சொல்லலாம்?”

நன்னன்: “அது சரி… நக்கல் பண்ணி… பேசுறவங்க நாக்க அடக்குறது தான் உனக்கு தெரியும்!”
வெள்ளைச்சாமி: “தம்பி… நாலு தெருநாய் சேர்ந்து கடிச்சு கொதறி ஒரு நாலு வயசு பையன் செத்து போயிட்டான் நாலு நாளைக்கு முன்னாடி. தெரியுமா?”
நன்னன்: “தெருநாய் இருக்க இடங்கள்ல பசங்கள தனியா விடக்கூடாது. கூட இருக்கவங்க தான் கவனமா பாத்துக்கணும்.”
வெள்ளைச்சாமி: “கொஞ்சமாச்சும் இரக்கம் இருந்தா நீ இப்படி பேசமாட்ட!”
நன்னன்: “இரக்கம் இருக்கனால தான் இப்படி பேசுறேன். மனுசங்களுக்கு மட்டுந்தான் இரக்கம் காட்டணுமா என்ன?”
கருப்பன்: “Over’ஆ நல்லவனா இருந்தா முட்டாள் ஆயிடுவோங்கறதுக்கு நீ தான் super example!” 

நன்னன்: “இப்ப என்ன சொல்ல வர்ற? எல்லா தெருநாய்களையும் கொல்லணும்னு சொல்ல வரியா?”

கருப்பன்: “ச்சச்ச… நான் அவளோ கெட்டவன்லாம் இல்லப்பா! எல்லாத்தையும் கொண்டு போயி காட்டுல விட்டுரலாம். அல்லது புது மருந்துகள கண்டுபிடிக்கிற Research centers’க்கு Testing’க்கு use பண்ண விடலாம்!”

நன்னன்: “நக்கலா? கொல்லுறதும் நீ சொல்லுறதும் ஒன்னு தான்டா!”
கருப்பன்: “சரி தான். Evolution’ஏ அத தான சொல்லுது. Survival of the fittest. Selfish’ஆ இருந்தா தான் பிழைக்க முடியுங்கறது தான் Nature’ஓட Design’ஏ!”

வீட்டின் அழைப்புமணி வீடு முழுக்க அதிர்ந்தது. இதைப் பார்த்ததும் கடுப்பாகி நன்னன் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.

நன்னன்: “ஏன்யா இப்படி? சும்மாவே இருக்க மாட்டியா? எந்த Argument’ஐயும் முழுசா முடிக்க விடாம எதையாச்சும் பண்ணி கலைச்சு விட்டுட்டே இருக்கியே?”
நான்: “ரெண்டு point of view’லயம் ஓரளவுக்கு strong points சொன்னதுக்கு பிறகும் அத continue பண்ணக்கூடாது. மிச்சத்த இதைப் படிக்கிறவங்களே முடிவு பண்ணிக்குவாங்க. சரி, நம்ம அப்பறம் பேசலாம். இப்ப மறுபடியும் கதைக்குள்ள போவோம்.” 

இந்த முறை அழையா விருந்தாளியாய் வந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர். ஏன் நிறைய ஆட்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று பல கேள்விகளைக் கேட்டு உசாவி விட்டு சென்றார்.

ஒயிலி: “யப்பா… இந்த house owners தொல்லை தாங்க முடியல! ஆயிரத்தெட்டு rules போடுறாங்க. எல்லாத்துக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டே இருக்க வேண்டிருக்கு?”
கருப்பன்: “ஆமா, இப்ப எதுக்கு ஒரு generalised statement கொடுக்குற? Stereotype பண்ற மாதிரி இருக்கு இது!”
நன்னன்: “இப்படிலாம் Stereotype பண்ணி பேசுனாதான் நம்ம பேசுறது நிறைய பேர் அதோட connect பண்ணிப்பாங்களாம்.”
கருப்பன்: “அப்படின்னு யாரு உன்கிட்ட சொன்னது?”
நன்னன்: “நீங்க கதவை திறக்க போனப்ப ஒருத்தன் என்கிட்ட சொன்னான்!”
வெள்ளைச்சாமி: “அட விடுங்கப்பா… வந்ததுல இருந்து பேசிக்கிட்டே இருக்கோமே… எனக்கே bore அடிக்குதே?!”
ஒயிலி: “Okay. இந்த meeting’அ நம்ம இதோட முடிச்சுக்குவோம். வேற ஏதாவது பேசணும்னா நம்ம இன்னொரு get-together வச்சு பேசுவோம்!” 

அனைவரும் இந்தக் கதையின் அடுத்த பாகத்தில் உங்களைச் சந்திக்கும் வரை நான் விடைபெறுகிறேன்!

Advertisement
குறிச்சொற்கள்: , ,