திகில் குறுங்கதைகள்

Posted on ஜூன் 7, 2022

1


முன்குறிப்பு: ஏற்கனவே வெவ்வேறு வகைமையில் ஒரு வரிக்கதைகள் எழுதி குறுங்கதைகள் பதிவில் வெளியிட்டேன். இந்த முறை திகிலூட்டும் விதமான இருவரிக் கதைகள் எழுதி கீழே தொகுத்துள்ளேன். பயமுறுத்தும் வகையில் கதைகள் எழுதப்பட்டதால் வன்முறை மிகுதியான கதைகளும் இருக்கின்றன. உங்களுக்கு வன்முறையோ மீயியற்கைத் தனமான எண்ணங்களோ பிடிக்காது என்றால் கீழே உள்ள கதைகளைத் தவிர்த்து விடுங்கள்.

காற்றுக்குரல்

மின்வெட்டு நேரத்தில் இரவில் தனியாக ஒருசாய்த்து படுத்திருந்தவனின் பின்னங்கழுத்தில் குளிர்மூச்சுக்காற்று பட்டது. மெதுவாக கழுத்தை திருப்பியவனின் காதில் “அடுத்தது நீ தான்!” என்று ஒரு காற்றுக்குரல் கேட்டது!

குருதிக்குளியல்

குளித்துக்கொண்டிருந்தவன் கீழே சிவப்பு நீராக போவதைக் கண்டு அதிர்ந்துபோய் நிமிர்ந்தான். எதிரில் இருந்த கண்ணாடியில் அவன் உருவம் முழுக்க நூறு ஓட்டைகள் வழியாக குருதி வழிந்தோடிக் கொண்டிருந்தது!!!

நீண்ட ஆயுள்

கைவரியைப் பார்த்து குறி சொல்பவர் அதிர்ந்த படி, “இந்த ஆயுள் ரேகை படி உங்களுக்கு போன வருசமே மரணம் வந்திருக்கணும்.” என்றார். எதிரே இருந்தவன் சிரித்தபடியே “சரியாத்தான் சொல்றீங்க!” என்றான்.

திடீர் மரணம்

நண்பனின் திடீர் மரணத்துக்கு முன் எடுத்த ஒளிப்படத்தை உற்று நோக்கினால் அவன் தோளில் 5 கருப்பு விரல்கள் மங்கலாக தென்பட்டது. அந்த ஒளிப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன் தோளில் யாரோ கை வைப்பது போன்று இருந்தது.

தொலைந்துபோன உருவம்

சோம்பல் முறித்தபடியே எழுந்தவன் கண்ணாடி முன் நின்று பார்த்தான். அதில் எந்த உருவமும் தெரியவில்லை.

செய்யக்கூடாத களவு

சுடுகாட்டில் பிணத்தை தோண்டி எடுத்து திருடும் போது மோதிரம் வராததால் விரலோடு வெட்டி எடுத்து சென்றான். வழியில் இளைப்பாற ஒரு கடையில் தண்ணீர் கேட்க, செம்பில் தண்ணீர் எடுத்து கொடுத்தவர் கையில் மோதிர விரல் இல்லை.

எதிர்பாராத கேள்வி

வாசலில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென்று வீட்டுக்குள் சென்று தன் அப்பாவின் முன் நின்று அமைதியாக ஏற இரங்க பார்த்தாள். ஒரு 80 அகவை நிரம்பிய முதியவர் குரலில், “செத்து போயிட்டா எங்கள ஒரேடியா மறந்துருவேல?” என்று கேட்டுவிட்டு மீண்டும் விளையாட வெளியே சென்றாள்.

புதிய விலங்கு

பல விலங்குகளை வைத்து மரபணுவாக்கம் செய்யும் ஆய்வுக்கூடத்தில் ஒருவன் மாரில் மூன்று பெரிய ஆழமான நகக்கீரலுடன் மாய்ந்து கிடந்தான். அவனுக்கு என்னாயிற்று என்று பார்க்க வந்தவனின் பின்னால் இதுவரை யாருமே கேட்காத ஒரு புது விலங்கின் ஒலி கேட்டது!

கொடூர விளையாட்டு

வீடு முழுக்க பொம்மைகளின் தலைகளும் கை கால்களும் தனித்தனியாக பிய்த்து எறியப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தால் தவழ்ந்து வந்த குழந்தையின் வாயில் குருதியாக இருந்தது.

அழையா விருந்து

பெருமழை பெய்யும் நள்ளிரவில் மலைப்பாதையில் வண்டி நின்றுவிட்டதால் அருகிலிருந்த பெரிய தனி வீட்டில் ஒதுங்கிய இணையருக்கு புதுமையான கறி விருந்து வழங்கப்பட்டது. கை கழுவுவதற்கு செல்லும் வழியில் ஒரு அறையைத் திறந்தால் அறை முழுக்க மனித மண்டை ஓடுகள் இருந்தன.

தப்புக்கணக்கு

20 கொலைகள் செய்து பிடிபடாமல் இருக்கும் தொடர் கொலைகாரன் கிளப்பிய பயத்தைப் பற்றி அந்த இடத்தில் வாழும் மக்களிடம் செய்தியாளர் ஒருவர் நேர்காணல் எடுத்தார். “தப்பு. நேத்து பண்ண கொலைகள சேர்த்தா 22. இன்னைக்கு பண்ணப்போறத சேர்த்தா 24.” என்று பதில் அளித்தான் ஒருவன்.

அயலான்

செவ்வாய் கோளில் தண்ணீர் உள்ளதா என்று கண்டறிய சென்ற குழு இதுவரை யாரும் செல்லாத ஓரிடத்துக்கு சென்றார்கள். அங்கே 50 அடி அகலம் கொண்ட கால் தடங்களை தரையில் கண்டனர்.

சிலை மேல் அலை

குமரிக்கடற்கரையில் நூறு பேருக்கு மேல் எழுஞாயிறைக் கண்டு களித்துக்கொண்டிருந்தனர். வள்ளுவர் சிலை தலைக்கு மேல் ஒன்னேமுக்கால் அடி உயரத்தில் ஆழிப்பேரலை ஒன்று வந்தது.

பொய் நிழல்

இரவில் மொட்டை மாடியில் மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் நின்று புகைபிடித்து கொண்டிருந்தான். எதிரிலிருந்த கட்டடத்தில் விழுந்த அவனுடைய பெரிய நிழல் தலைவிரி கோலத்துடன் ஒரு பெண்ணுருவைக் காண்பித்தது.

அருகில் யார்?

நள்ளிரவில் எழுந்து நடந்து வந்த குழந்தை தூக்கத்திலிருந்த தந்தையிடம் “தொட்டில்ல தூக்கமே வரலப்பா!” என்றது. உடனே தன்னருகில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு தூங்கப்போனவனுக்கு “8 மாசம் ஆன குழந்தைக்கு இன்னும் நடக்கவோ பேசவோ தெரியாதே!” என்று ஞாபகம் வந்தது.

காட்சிப்பிழை

காட்டுவழியில் உருளியில் ஓட்டை விழுந்து ஒரு வண்டி நடுக்காட்டில் நின்றது. உருளி மாத்துவதற்காக வண்டியின் பின்கதவைத் திறந்தால் பாதி அழுகிய நிலையில் ஒரு பிணத்தை ஈ மொய்த்துக்கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது.

தற்கொலை செய்யும் இடம்

யாரும் செல்லாத ஒரு குகைக்குள் நீண்ட தொலைவு உள்ளே சென்ற 5 இளைஞர்கள் ஓரிடத்தில் “இது தற்கொலை செய்யுமிடம்” என்று எழுதியிருந்ததைப் பார்த்து இளக்காரமாக சிரித்தனர். கண்ணிமைத்துவிட்டு திரும்பிய போது அங்கு ஒருவன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து மீதி நால்வரும் அதிர்ந்தனர்.

பின்தொடரும் நிழல்

இரவில் சாலையில் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தவள் பின்னால் தொடர்ந்து யாரோ வருவது போல இருந்ததால் பயந்து வழியை மாற்றி செல்லும் போது அவளுக்கு முன்னால் அவளுடைய நிழலும் இன்னொரு நிழலும் விழுந்தது. உடனே திரும்பி பார்த்தால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை ஒருவரும் இல்லை.

விடாது படிப்பு

பெற்றோர்கள் இல்லாமல் சித்தி கொடுமையுடன் வளர்ந்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஊரிலிருக்கும் பொதுக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாள். அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நேரம் வரும்போது அந்தக் கிணற்றருகில் இருக்கும் முருங்கை மரம் மேல் ஒரு சிறுமி நனைந்த கூந்தல் முகத்தை மறைத்த படி நீர் சொட்ட சொட்ட ஒரு புத்தகத்தை கையில் வைத்து படித்துக் கொண்டிருக்கிறாள்.