முடிவிலி

Posted on ஓகஸ்ட் 30, 2021

1


இந்தக் கதை நண்பர் ஒருவர் எடுக்கப் போகும் குறும்படத்துக்காக எழுதியது. இந்தக் கதையின் சுருக்கமும், கதைமாந்தர்களின் பண்புகளும் நண்பர் Rajitalks தான் எனக்கு விளக்கினார். அதை விரிவாக ஓர் ஓட்டத்துடன் முழுக்கதையாக மாற்றியது மட்டுமே நான். எனவே இந்தக் கதைக்கான மூலம் நண்பர் Rajitalks தான் என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அது கார்காலம் கிடையாது. ஆனால் அன்று பகலிலேயே இடி மின்னலுடன் பேய் மழை பெய்து கொண்டிருந்தது. அகிலன் மருத்துவமனையில் ஒரு கட்டிலில் படுத்திருந்தவாறே ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தான். ஆனால், அவனால் நீண்ட நேரம் தொடர்ந்து புத்தகத்தை படிக்க முடியவில்லை. கண்களும் அயர்ச்சியால் கண்ணீர் கொட்டியது. உடனே அவனுடைய நண்பனுக்கு செல்பேசியில் அழைத்து பேசலாம் என்று முடிவு செய்து அவனுடைய நண்பனுக்கு அழைத்தான்.

“டே, குவிரா, பேசலாமா டா?”

“அகிலா, நான் Free’யா தான் டா இருக்கேன். இப்ப நீ எப்படி இருக்க?”

“ம்ம்ம்… அப்படியே தான் போயிட்டிருக்கு… முந்தாநேத்து தான் chemotherapy முடிஞ்சுச்சு!” 

“அப்ப rest எடுக்க வேண்டியது தான டா? எதுக்கு இப்ப சிரமப்பட்டு பேசுற?”

“ம்ம்ம்… நாளான்னைக்கு Semester exam online’லயே எழுத permission கொடுத்துட்டாங்க டா! அதுக்கு தான் படிச்சுட்டு இருந்தேன்!”

“ம்ம்ம்… சொல்றேன்னு தப்பா நினைக்காத டா! இந்த நேரத்துல இது அவசியமா?”

(நக்கல் சிரிப்புடன்) “எதுக்கெடுத்தாலும் Blood test மட்டுமே எடுத்து bore அடிக்கிது டா! அதான் ஒரு Change’க்கு இந்த test எடுக்கலாம்ன்னு இருக்கேன்!” 

“அதுசரி… Result பத்தி கவலப்படாதவன் எந்த test வேணும்னாலும் எடுக்கலாம்!” 

“ம்ம்ம்… நீ சொன்னன்னு இந்த ‘எளிய வழியில் எஞ்சினியரிங்க்’ புத்தகத்த படிக்க ஆரம்பிச்சேன். ஆனா, கண்ணு ரொம்ப tired’ஆ இருக்கு டா. எனக்கு கொஞ்சம் நீயே எல்லாத்தையும் explain பண்றியா?”

வெளியில் புயல் காற்று அதிகமாக வீசத்தொடங்கியது. மறுமுனையில் குவிரன் பேசுவது எதுவும் அகிலனுக்கு கேட்கவில்லை. அழைப்பும் துண்டித்து போனது. மீண்டும் மீண்டும் குவிரனுக்கு அழைக்க முயற்சி செய்தாலும் புயல் காற்று அதற்கு இடங்கொடுக்கவில்லை. அவன் அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைகாட்சி செய்திகளில் இந்த இடி புயல் மழையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த வானிலை அறிஞர்களும் கணிக்காதவாறு திடீரென்று இந்தக் காற்றழுத்தம் உருவாகியிருப்பது பலருக்கும் குழப்பமாக இருப்பதாக அதில் தெரிவித்தார்கள். மின்சாரம் முடக்கப்படும் என்றும் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் இருக்கும் படி அந்தச் செய்தியாளர் கூறிக்கொண்டிருக்கும் போதே அந்தத் தொலைகாட்சி அணைந்தது.

இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் போதும் அகிலனின் அறிவுத்தேடல் அடங்கவில்லை. வேறொரு நண்பனுக்கு முயற்சி செய்யலாம் என்று முயற்சி செய்தான். பிணையம் சரியாக இல்லாததால் இணைப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து பல நண்பர்களுக்கு மாற்றி மாற்றி அழைத்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு ஆளுக்கு அழைக்கும் போது ஒரு பெரிய இடி ஒன்று விழுந்தது. அந்த ஒலியைக் கேட்டு மிரண்டுவிட்டான் அகிலன். ஆனால், அந்த அழைப்பு ஒருவழியாக சென்றது. மறுமுனையில் எடுத்தவன் அமைதியாக பேசினான்.

“டே… முத்துவேலு… எப்படி இருக்க?”

(மறுமுனையில் அமைதியாக) “Sorry! Wrong number!”

“யாருங்க அது? விளையாடுறீங்களா? இல்ல என் friend phone’அ திருடீட்டீங்களா”

(சற்று கோபமாக அழுத்தமான குரலில்) “Hello!”

“பின்ன என்னங்க… இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி தான் இதே number’ல முத்துவேலோட Whatsapp’ல chat பண்ணிட்டு இருந்தேன்! இப்ப இத wrong number’ன்னு சொல்றீங்க!”

(சற்று குழப்பத்துடன்) “Whatsapp’ஆ?”

“சரி… இது உங்க number தான்னு நான் நம்புற மாதிரி prove பண்ணுங்க. நான் அதுக்கடுத்து உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன்!” 

“தயவு செஞ்சு என்னைய disturb பண்ணாதீங்க. எனக்கு நெறய வேல இருக்கு!”    

இதை சொல்லிவிட்டு மறுமுனையில் பேசியவன் இணைப்பை துண்டித்தான். அவன் அவனுடைய அறையில் தனியாக அமர்ந்திருந்தான். அந்த அறையில் இருந்த மின்விசிறியில் ஒரு கயிறு கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெளியே அடித்துக்கொண்டிருந்த புயலையும் மழையையும் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தத் தொலைப்பேசி அழைப்பு வராமல் இருந்திருந்தால் ஒருவேளை அவன் இந்நேரத்தில் தற்கொலை செய்திருப்பான். அந்த எதிர்பாராத அழைப்பு அவனுக்கு குழப்பத்தை தந்தது. அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அவனுடைய கைப்பேசியில் அழைப்பு மணி ஒலித்தது. அதே நேரத்தில் ஒரு பெரிய இடி இடித்தது.   

“உங்களுக்கு மரியாத கொடுத்து ஒரு தடவ சொன்னா புரியாதா? எதுக்கு மறுபடியும் மறுபடியும் call பண்ணி disturb பண்றீங்க?”

“நானும் ஒரே தடவ சொல்றேன். இது உங்க number’ன்னு prove பண்ணதுக்கப்பறம் நான் உங்கள disturb பண்ணமாட்டேன்!”

“யோவ்… எரிச்சல கிளப்பாதய்யா… உனக்கு என்ன தான்யா வேணும்? “

“மொதல்ல உங்க பேரு ஊரு என்னன்னு வெவரம் சொல்லுங்க!”

(சற்று எரிச்சலுடன்) “என் பேரு சரவணவடிவேல். நான் மதுரை தியாகராஜர் college’ல engineering படிச்சுட்டு இருக்கேன். போதுமா?” 

“ஓ! ரைட்டு. Engineering’ஆ! அப்ப நீயும் நம்ம வகையறா தான். சரி, hostel’லயா இருக்க இப்ப?”

(சற்று பயம் கலந்த குழப்பத்துடன்) “இல்ல… இப்ப என் வீட்டுக்கு வந்திருக்கேன்… அதுக்கென்ன?”

“அப்படியா… நீ தான் எந்த தப்பும் பண்ணலலேல… பயப்படாம உன் current location’அ Whatsapp’ல அனுப்பு!”

(சற்று குழப்பத்துடன்) “Whatsapp’ஆ? என்ன கேக்குறன்னே புரிய மாட்டிக்கிதுய்யா!”

“ம்ம்ம்… சரி, யாரோட phone தொலைஞ்சு போனா எனக்கென்ன? ஆனா, நான் என் Friend கிட்ட கேக்க போனத உன்கிட்ட கேக்கலாம்ன்னு நினைக்கிறேன்! நீயும் நம்ம வகையறா தான…”

(சற்று எரிச்சலுடன்) “தயவுசெஞ்சு கேட்டுட்டு phone’அ வைய்யா மொதல்ல!”

(சிரித்துக்கொண்டே) “பயப்படாதப்பா, கடன்லாம் கேக்க மாட்டேன். நாளைக்கு semester exam இருக்கு. ஆனா, எனக்கு engineering mathematics subject’ல ஏகப்பட்ட doubts இருக்கு. நீ தான் எனக்கு எல்லாத்தையும் clear பண்ணனும். OK’வா?”

“ம்ம்ம்… சரி, கேளு!”

“மொதல்ல இந்த Differential Equations’அ எவன் கண்டுபிடிச்சான்??? எதுக்கு பண்றோம்னே தெரியாம படிச்சிட்டிருக்கோம் இப்ப! அதுல எதோ Initial Value Problem’ன்னு சொல்லி கடுப்ப கெளப்புறாய்ங்க. அதுல என்னடான்னா equation’லயே இல்லாத values’லாம் கடைசில
answer’ல வருது. இந்த அடிப்படையே புரிய மாட்டிக்கிது!”

(சிறிது நேர அமைதியான சிந்தனைக்கு பின்)

“ம்ம்ம்… Initial Value Problem’ங்கறது ஒரு மனுசனுக்கு சோசியம் பாக்குறது மாதிரி. ஒருத்தனுக்கு இப்ப என்ன நடக்கும், கூடிய சீக்கிரம் என்ன நடக்க போகுதுன்னு எப்படி சொல்றாங்க? அவன் பிறக்கும் போது இருந்த கிரகங்களோட positions வச்சு தான? வாழ்க்கைல நடக்குற ஒவ்வொரு events’ஐயும் வச்சு ஒரு equation இருக்கறதா வச்சுப்போம். அதுல ஒருத்தன் பிறந்தப்ப உள்ள கிரக நிலைகள் தான் initial values. அத வச்சு அவனுக்கு ஒரு equation answer’ஆ அமையும். இன்னொருத்தனுக்கு வேற values ஓட equation answer’ஆ அமையும். கொடுத்த initial value வச்சு என்ன equation answer’ஆ வரப்போகுதுன்னு கண்டுபிடிக்கணும். அவ்வளவு தான்!”

“அட! செம்ம super பா. இப்ப இத ஏன் படிக்கிறோம்னு புரிஞ்சுருச்சு. இனிமேல் இத படிக்கிறது எனக்கு கொஞ்சம் easy’யா இருக்கும். ஆனா, இப்டிலாம் யாராச்சும் சொல்லிக்கொடுத்தா தான் எல்லாருக்கும் புரியும். நீ எப்படி இவ்ளோ super’ஆ சொல்லிக்கொடுக்குற?”   

இதைக் கேட்டதும் சரவணனுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. மனதில் இருந்த பாரம் கொஞ்சம் குறைந்தது போல தோன்றியது. மீண்டும் பேச்சை தொடர்ந்தான் அகிலன்.

(நக்கல் தொனியில்) “Maths’ல ஒரு question கேட்கும் போதே அவங்களே அத ஒரு problem’ன்னு தான் சொல்றாங்க. அதக் கேட்டதும் நமக்கும் பயம் தான் வருது.. அது தான் நமக்கு problem!”

(சிறிய சிரிப்புடன்) “Ha ha… நல்லா பேசுற நீ!”

“ஒரு question’அ பார்த்ததுமே ‘அய்யய்யோ, இது ரொம்ப பெருசா போகுமே?’ன்னு பயம் வந்துருது, அந்தப் பயத்திலயே அந்த question’க்கு answer சொதப்பி விட்ருவேன்.” 

“எடுத்த உடனயே முழு problem பத்தி யோசிக்காத. Step by step’ஆ solve பண்ணா easy’யா இருக்கும்!”

“ரொம்ப correct! Solve பண்றதுக்கு முன்னாடியே overthink பண்ணி தான் நிறைய நேரம் answer’ஏ எழுதாம போயிருவேன்!”

இதைக் கேட்டதும் சரவணன் அவன் மனுதுக்குள்ளேயே அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தான். மிகுந்த ஒலியுடன் ஒரு இடி ஒன்று இடித்தது. மீண்டும் பேச்சை தொடர்ந்தான் அகிலன்.

“ஒன்னு சொன்னா தப்பா நினைக்கமாட்டியே?”

“ம்ம்ம்… பரவால்ல…. சொல்லு!”

“நீ இந்த doubt’க்கு விளக்கம் கொடுக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் என் friend phone’அ நீ திருடலன்னு சொன்னத நான் நம்பவேயில்ல!” 

“அடேய்… இப்பயாச்சும் நம்புறியா?!”

“கண்டிப்பா… எந்த cellphone திருடன் இந்த மாதிரி maths doubts’க்கெல்லாம் பொறுமையா பதில் சொல்வான்?”

இருவரும் மனம் விட்டு சிரித்தனர். இந்த உரையாடல் அவர்களுக்குள் இருந்த தொலைவை சுருக்கிவிட்டது.

“சரவணா, நம்ம proper’ஆ introduce ஆகுறதுக்கு முன்னாடியே நெறய பேசிட்டோம்னு நினைக்கிறேன்!?” 

(மெல்லிய சிரிப்புடன்) “ம்ம்ம்… Correct! எனக்கு உன்னோட பேரு கூட தெரியாது!!”

“ஓ! சொல்ல மறந்துட்டேன். என் பேரு அகிலன்.”

“ஓ! நல்ல பேரு.”

“நீ எப்பையுமே ரொம்ப கம்மியா தான் பேசுவியா? சொல்லிக்கொடுக்கும் போது மட்டுந்தான் நல்லா பேசுன!”

“ம்ம்ம்… நான் silent type தான்!”

“ஓ! ரைட்டு… ஒண்ணுமண்ணா ஆயிட்டோம். எத்தன girlfriends’பா உனக்கு?”

விடை எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான் சரவணன்.

“Hello! கேக்குதா?”

“ஆங்… கேக்குது! Girlfriends’லாம் எனக்கில்ல!” 

“ம்ம்ம்… நான் இத guess பண்ணேன்!”

“Guess பண்ணிட்டியா? எப்படி?”

“இல்ல.. இவ்ளோவ் அறிவா பேசுறியே?! அப்பறம் எப்படி girlfriend இருக்கும்?!”

“உனக்கு girlfriends இருக்காங்களா?!”

“ரொம்ப முட்டாளா இருந்தாலும் girlfriends கிடைக்காது. எனக்கும் girlfriends யாரும் இல்ல!”

மீண்டும் ஒரு முறை இருவரும் மனம் விட்டு சிரித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக சரவணனின் மனதில் இருந்த பாரம் குறைந்தது. முகத்தில் மகிழ்ச்சி மலரத் தொடங்கியது. திசை மாறிய பேச்சை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தான் அகிலன்.

“ரைட்டு…. அப்படியே பேசிட்டு எங்கயோ போயிட்டோம்! எனக்கு subject’ல இன்னொரு doubt இருக்கு!”

“ஓ! Okay.. கேளு டா!”

“மொதல்ல இந்த differentiation’ன்னாலே சரியா புரிய மாட்டிக்கிது! அத வச்சு தான் நெறய problems கேக்குறாங்க!”

“ம்ம்ம்… நீ இந்தக் கேள்வியை தான் மொதல்ல கேட்டிருக்கணும். Square numbers வரிசையா சொல்லு!”

“இப்டி திடீர்னு கேட்டுட்டியே… சரி try பண்றேன்… 1,4,9,16,25,…. ம்ம்ம்… 36”

“Ok ok… ஒரு paper’ல இத எழுதிக்கோ…. அதுக்கு கீழயே இன்னொரு வரிசை எழுது… ரெண்டாவது number’ல இருந்து முதல் number’அ கழிச்சு எழுதணும். அப்பறம் மூணாவது number’ல இருந்து ரெண்டாவது number’அ கழிச்சு எழுதணும்…. அப்படியே போகணும், அந்த வரிசைய சொல்லு…” 

அகிலன் ஒரு தாளில் அவன் கூறிய கணக்கை எழுதினான்.. பிறகு அவனிடம் அதையும் படித்து காண்பித்தான்.

“3,5,7,9… என்னப்பா வரிசையா odd numbers’ஆ வருது!” 

“அது மட்டுமில்ல, odd numbers’அ ஒரு function’ஆ எழுதணும்னா 2x+1ன்னு சொல்லலாம்!”

“சரி… இப்ப அத வச்சு என்ன சொல்ல வர்ற?”

“இப்ப நீ பண்ணது வேற எதுவும் இல்ல….. X square’ங்கற function’அ differentiate பண்ண. அதுக்கு உனக்கு  2x’ன்னு answer கிடைச்சிருக்கு!”

“தெய்வமே… differentiation’ங்கறது இது தானா?”

“அது மட்டுமில்ல. 16’ஓட odd number 9 கூட்டுனா அடுத்த square number 25 வருது. அந்த 25’ஓட அடுத்த odd number 11 கூட்டுனா அதுக்கடுத்த square number 36 வருது… அப்படியே போகும். ஒரு mathematial function படிப்படியா எப்படி கூடுதுன்னு சொல்றது தான் slope. அதனால தான் ஒரு function’அ differentiate பண்ணா அதோட slope கண்டுபிடிக்கலாம்!”

“செம்ம super! இனிமே இத என் வாழ்நாள்ல மறக்கவே மாட்டேன்… செம்மையா சொல்லித்தர்றடா நீ! Engineering முடிச்சுட்டு என்ன ஆகலாம்னு நினைக்கிற?” 

“ம்ம்ம்…. எதுவும் முடிவு பண்ணல!”

“நான் சொல்றத கேளு… பேசாம Doctor ஆகிடு!”

“என்னடா ஒளர்ற?”

“PhD முடிடா! நீயெல்லாம் நெறய books எழுதணும். பசங்களுக்கு பாடம் சொல்லி தரணும். உன்கிட்ட படிச்சா நல்ல தரமான students வருவாங்க!” 

“ம்ம்ம்… ஆனா, நான் software’ல…”

“அட என்னப்பா?! Engineering படிச்சா engineer தான் ஆகனுமா? இப்ப இருக்க பாதி movie directors, wildlife photographers, Organic விவசாயிகள் எல்லாருமே engineers தான??!”

“ஓ!”

“என்னடா நான் எதோ புதுசா சொல்ற மாதிரி கேக்குற? நீ teacher கூட ஆக வேண்டாம்! Youtube’லயாவது videos போடுடா! நெறய பேருக்கு use ஆகும்.”

“நீ சொல்றத புரிஞ்சுக்குற அளவுக்கு  நான் updated’ஆ இல்லன்னு நினைக்கிறேன். ஆனா, நீ call பண்றதுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய confusion’ல இருந்தேன். ஆனா, இனிமே எனக்கு எந்த confusion’உம் இல்ல. தெளிவாயிட்டேன்! Thanks da!”

“டே… என்ன டா? நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்லிட்டிருக்க? எனக்கு ஒரே ஒரு சின்ன ஆச தான் இப்ப!”

“சொல்லுடா… என்னால முடிஞ்சா செய்யிறேன்!”

“உன்னால மட்டும் தான் முடியும்… உன்னைய நேர்ல பார்த்து tea குடிச்சுட்டே நெறைய பேசணும்!”

“இவ்ளோ தானா? ஒரு மாசத்துல semester முடிஞ்சுரும். அதுக்கடுத்து plan பண்ணிருவோம்.”

“ம்ம்ம்… ஆனா நான் எத்தனை நாள்…”

ஒரு பெரிய இடி மிகுந்த ஒலியுடன் இடித்தது. தொலைப்பேசி இணைப்பு துண்டித்தது. மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தாலும் பிணைப்பு கிடைக்கவில்லை. மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒருவர் எல்லா நோயாளிகளுக்கும் மாலை நேரம் தேநீர் வந்து கொடுப்பது வழக்கம். அவர் அப்போது அகிலன் அறைக்கு வந்து தேநீர் கொடுத்துவிட்டு சென்றார். 

கையிலிருந்த புத்தகத்தை தள்ளி மேசை மீது வைத்துவிட்டு தேநீர் எடுத்து அருந்தினான் அகிலன். அருந்திக்கொண்டே புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்த அகிலனின் கண்கள் விரிந்தன. வியப்பில் அவனுடைய புருவங்கள் இரண்டும் எழுந்தன. அந்தப் புத்தகத்தை எழுதிய நூலாசிரியரின் பெயர் சரவணவடிவேல்.

ஒரு பெரிய இடி ஒன்று இடித்தது.