கசடான நினைவுகள்

Posted on பிப்ரவரி 9, 2021

0


முன்னுரை:

இது “எதிர்கால நினைவுகள்” கதை முடிவின் நீட்சி. முதலில் கதை முழுதும் படித்திருந்தால் மட்டுமே இந்தப் படலம் புரியும். இந்தக் கதையை நீங்கள் படித்திருக்கவில்லை என்றால் இங்கு சென்று படித்துக்கொண்டு பிறகு இங்கு வந்து இதைப் படிக்கலாம்.


ஏப்ரல் திங்கள் பதினெட்டாம் நாள், 2060’ஆம் ஆண்டு காலை அது. மணி கண்ணாடியைப் பார்த்ததும் அதற்கு பின் ஒளிந்திருந்த அரட்டை இயலி தொழில்நுட்பம் விழித்தெழுந்து மணிக்கு காலை வணக்கம் கூறியது. அந்தப் பெண் குரலை கேட்டவுடனே மணி தன வீடு முழுவதும் யாழினியை தேட சென்றுவிட்டான். ஆனால், மணி அந்த அறையில் இருந்து போன பிறகும் அரட்டை இயலி அந்த அறைக்குள் தனியாக பேசிக்கொண்டே தான் இருந்தது. எப்போதும் காலை வணக்கம் சொல்லி முடித்ததும் அன்றைய நாளின் வானிலை அறிக்கையைச் சொல்வது அரட்டை இயலியின் வழக்கம். அதற்கு பின் அன்றைய நாளின் முதன்மையான செய்திகளை படிக்கும். அப்படி அந்த நாளில் அரட்டை இயலி படித்த செய்திகள் தான் கீழே. 

இன்றைய முதன்மையான செய்திகள்…

கடந்த பத்து ஆண்டுகளாக நேரத்தை கடந்து செல்லும் பயணத்திற்கு இயந்திரம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர் வியனும் முகிலனும். இந்நிலையில் இந்த ஆராய்ச்சியால் மனிதர்களுக்கு தீங்கு தான் விளையும் என்று அவர்களுடைய நிறுவனம் மீது புதிதாக வழக்கு தொடுத்துள்ளார் மருத்துவர் நவிலன். இது குறித்து இரு தரப்பினருடன் ஊடகங்கள் நேர்காணல் எடுத்தனர். அதில் அவர்கள் கூறிய கருத்துக்களை இப்போது ஒலிப்பரப்புகிறோம்.

“வியன், நீங்களும் உங்க அண்ணன் முகிலனும் சேர்ந்து மனுசங்க டைம் டிராவல் பண்ண ஒரு மிசின் கண்டுபிடிக்கிறதா பத்து வருசமா சொல்லிட்டிருந்தீங்க. இப்ப நீங்க அத கமர்சியலா வெளியிட நினைக்கும் போது இப்படி உங்க கம்பனி மேல கேசு போட்டிருக்காங்களே? அத பத்தி நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?”

“எங்க ரெண்டு பேரோட நோக்கமும் ஒண்ணு தான். வாழ்க்கைல எத்தன தடவ இந்த மாதிரி ஒரு நாள் நமக்கு திருப்பி வராதான்னு ஏங்கிருப்போம். அதுக்கான தொழில்நுட்ப விடை தான் எங்க டைம் டிராவல் மிசின். இத நாங்க வேண்டிய அளவுக்கு பரிசோதனை பண்ணதுக்கு அப்பறம் தான் பொது மக்களுக்கு வெளியிட தயாரானோம். ஆனா, அதுக்குள்ள எங்களோட வளர்ச்சி பிடிக்காதவங்க எங்கள தடுக்குறத்துக்கு புதுசு புதுசா கதை சொல்றாங்க. இதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். நாங்க இத கோர்ட்டுல பாத்துக்குவோம்.”

“முகிலன், காலப்பயணம் பண்றதால மக்களுக்கு என்னென்ன விதமான ஆபத்துக்கள் வர வாய்ப்பிருக்கு?”

“நிறைய பேரு படங்கள் பார்த்துட்டு வந்து எங்ககிட்ட சம்மந்தமேயில்லாம கேள்வி கேக்குறாங்க. கடந்த காலத்துக்கு போயி ஒரு நிகழ்வ மாத்திட்டா என்ன ஆகும்? எதிர்காலத்துக்கு போயி பார்த்தா என்ன ஆகும்? இது மாதிரி கேள்விகள்லாம் அறிவியல் அடிப்படை தெரியாதவங்க கேக்குற கேள்விகள். உங்கட்ட வண்டியிருக்குன்றதால இல்லாத இடத்துக்கு போக முடியுமா? அதுமாதிரி தான் நடக்காத நேரத்துக்கு போக முடியாது. சுருக்கமா சொல்லனும்னா கடந்த காலத்துக்கு மட்டும் தான் பயணிக்க முடியும். எதிர்காலத்துக்கெல்லாம் டைம் டிராவல் பண்ணி போகவே முடியாது.

அதே மாதிரி இசுப்பேசு டைம் சேர்த்து நாலு டைமன்சன்சு இருக்கு. நம்மளோட வாழ்க்கைல இசுப்பேசுல உள்ள மூணு டைமன்சன்ல நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். ஆனா, டைம் அது பாட்டுக்கு போயிட்டே தான் இருக்கும். அத நம்மளால ஒன்னும் செய்ய முடியாது. காலப்பயணம் செய்யும் போது நம்ம டைம்முக்கான நாலாவது டைமன்சன்ல பயணிக்கணும். அந்த நேரத்துல நம்மளால இசுப்பேசுல நகர முடிஞ்சாலும் அந்த இசுப்பேசுக்குள்ள நம்ம எதுவும் பண்ண முடியாது. நம்ம கண்களுக்கு இயல்பா இசுப்பேசோட மூணு டைமன்சன்சு மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். அதனால டைம் டிராவல் பண்ணி வந்த மனிதர்கள இசுப்பேசு டைமன்சன்ல இருக்கவங்க பார்க்க முடியாது. டைம் டிராவல் பண்றவங்க டைமோட நாலாவது டைமன்சன்ல இருந்துட்டே இசுப்பேசுக்குள்ள நகர முடிஞ்சாலும் அதுக்குள்ள எதையும் தொடக்கூட முடியாது.

ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா நீங்க பத்து வருசம் பின்னாடி போயி உங்களையே பார்க்கலாம். ஆனா, உங்களால பழைய உங்களோட பேசவோ தொடவோ முடியாது. அதே நேரத்துல பத்து வருசம் பின்னாடி இருந்த உங்களுக்கு இப்ப இருக்க உங்கள கண்ணுக்கு கூட தெரியாது. நீங்க இன்விசிபிளா இருப்பீங்க. சொல்லுங்க, இதுல என்ன பிரச்சனை வந்துற போகுது?”        

“டாக்டர் நவிலன் இதுல மருத்துவ ரீதியா பிரச்சனைகள் வரும்னு சொல்றாரே? அத பத்தி உங்க கருத்து?”

“அவருக்கு முழுசா முப்பது வயசு ஆகியிருக்குமா இப்ப? ஆனா, நாங்க இந்த ஆராய்ச்சிய மட்டுமே பத்து வருசம் பண்ணியிருக்கோம். இத டெசுட்டு பண்றதுக்கு தன்னார்வலர்கள மட்டும் தான் கூப்பிட்டோம். எழுவது வயசுக்கு மேல இருந்த ஒருத்தரு வந்தாரு. அவர் பேரு மணி. அவருக்கு அவர் வாழ்க்கைல நடந்ததெல்லாம் மறந்துருச்சுன்னு எங்ககிட்ட வந்து சொன்னாரு. அவர நாங்க பல தடவ பல டைம்க்கு அனுப்புனோம். இன்னமும் அவர் உயிரோட நல்லா தான் இருக்காரு. அதுக்கு என்ன சொல்றீங்க?”

“அப்ப டாக்டர் சொல்றதெல்லாம் பொய்ன்னு சொல்றீங்களா?”

“கண்டிப்பா. மக்கள் மத்தில நல்ல பேர் எடுக்கணும்னா ரெண்டே வழி தான் இருக்கு. ஒன்னு தன்னோட உழைப்பால முன்னேறி பேர் எடுக்குறது எங்கள மாதிரி. இன்னொன்னு அடுத்தவங்களோட உழைப்ப குறை சொல்லியே பெரிய ஆள் ஆகுறது. அந்த டாக்டர் மாதிரி.”

“இவ்ளோ டைம் எடுத்து எங்களுக்கு நல்லா விளக்கம் சொன்னதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நன்றி. உங்களோட கனவு வெற்றி பெற வாழ்த்துக்கள் வியன், முகிலன்.”

இதற்கடுத்து மருத்துவர் நவிலனுடன் எடுத்த நேர்காணலை இப்போது ஒலிப்பரப்புகிறோம்.

“வணக்கம் டாக்டர். டைம் டிராவல்’ன்னால மக்களுக்கு என்ன ஆபத்து வரும்ன்னு நினைக்கிறீங்க?”

“இதுக்கு பதில் சொல்றதுக்கு முன்னால செட்லேக் பத்தி சொல்றேன். கண்டம் விட்டு கண்டம் பயணிசீங்கன்னா உங்களுக்கு கண்ட நேரத்துல பசிக்கும் கண்ட  நேரத்துல தூக்கம் வரும். ஏன்னு தெரியுமா? நம்ம உடம்புக்குள்ள ஒரு பாடி க்ளாக் ஓடிட்டிருக்கு. அது இத்தன மணிக்கு தான் பசிக்கணும், இத்தன மணிக்கு தான் தூக்கம் வரணும்னு பழகிருக்கு அத திடீர்னு கெடுத்து விட்டா நம்ம உடம்பு குழம்பிரும். அது மாதிரி தான் நிறைய டைம் டிராவல் பண்ணா ரெசிடுயல் மெமரி உருவாகும். அது அதிகமாக அதிகமாக நிகழ்காலமும் கடந்த காலமும் கலந்த ஒரு குழம்பிய மனநிலை உருவாகும்.”

“ரெசிடுயல் மெமரின்னா என்ன டாக்டர்? அதனால என்ன சிக்கல் வரும்?”

“நைட்டு நீங்க ஒரு படம் பாத்துட்டு தூங்குனீங்கன்னா நெறய நேரம் அந்தப் படத்துல உள்ள கதை மாதிரியே உங்களுக்கு நடக்குற மாதிரி கனவு வரும். ஏன்னா நம்ம மூளையோட இயல்பே எல்லா தரவுகளையும் தொடர்பு படுத்தி பாக்குறது தான். நீங்க அடிக்கடி டைம் டிராவல் பண்ணா அதுல நீங்க பார்க்குற நிகழ்வுகளும் உங்க நிகழ்காலத்துல நடக்குற நிகழ்வுகளும் சேர்த்து தொடர்பு படுத்தி ஒரு புது மாதிரியான நினைவுகள் உருவாகிரும். இத தான் ரெசிடுயல் மெமரின்னு சொன்னேன். கசடுன்னு வச்சிக்கலாம்!” 

“நீங்க சொல்றதுக்கெல்லாம் ஏதாவது ஆதாரப்பூர்வமான விளக்கம் இருக்கா?”

“கண்டிப்பா. என்னோட பேசண்ட் மணி சார் தான் ஆதாரம். அவரு ஏற்கனவே டிப்ரசன்ல இருந்து ட்ரக் அடிக்ட் ஆகி பின்னாடி ட்ரக் ஓவர்யுசுல தன்னோட மனைவியவே கொலை பண்ணிட்டாரு. பல வருசமா ஒரு மென்ட்டல் அசைலம்ல இருந்திருக்காரு. அங்க அவருக்கு கொடுத்த எலக்ட்ரோ கன்வல்சிவ் தெரப்பில அவருக்கு நிறைய மெமரீசு அழிஞ்சு போயிருச்சு. அவரு தான் யாரு தனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுறதுக்காக பல தடவ முகிலனோட டைம் மிசின்ல டைம் டிராவல் பண்ணாரு. ஆனா, அதுக்கு அப்பறம் தான் அவரு ரொம்ப குழம்பி போயிட்டாரு. நான் சொன்ன மாதிரி அவரு பழசையும் புதுசையும் சேர்த்து குழப்ப ஆரம்பிச்சிட்டாரு. இப்ப அவர் மூளைல நிறைய கசடு தான் இருக்கு.”

“ஓ! உங்களுக்கு எப்படி மணிய தெரியும்? அவரா உங்கள பார்க்க வந்தாரா?”  

“இல்ல. ரிட்டயர்டு டாக்டர் முத்து தான் என்னோட ரோல்மாடல். அவரு சில வருசங்களுக்கு முன்னால எனக்கு கால் பண்ணி அவரோட நண்பர் மணி சார் பத்தி விவரம் சொன்னாரு. மணி சார் பழசெல்லாம் மறந்துட்டு நேரா டாக்டர் முத்து வீட்டுக்கு போயி பேசுனதெல்லாம் சொன்னாரு. அதுக்கப்பறம் அவர தேடி பார்த்தா அவர கைலயே பிடிக்க முடியல. தொடர்ந்து டைம் டிராவல் பண்ணிக்கிட்டே இருந்தாரு. எப்படியோ அவரோட கசடான நினைவுகள்ல என்னைய அவரோட டாக்டர்ன்னு ஏத்துக்கிட்டாரு. அவர பார்க்கும் போதெல்லாம் அவரு நினைவுல இருக்கத எழுத சொல்வேன் திடீர்னு ஒரு நாள் முத்து என் நண்பன் இல்லன்னு எழுதுனாரு. அவரு எழுதுறத எல்லாம் ஒரு சீக்ரட் டிராயர்ல போடுங்கன்னு சொல்லி என்னோட டேபிள் டிராயர்ல தான் போட சொல்வேன்.”

“கேக்கவே ஆச்சரியமா இருக்கு. இப்ப மணி சார் குணமாயிட்டாரா?”

“மெடிக்கல் டெர்மசுல சொல்லணும்னா அவர் இன்னும் குணமாகல. ஆனா, அவருக்கு தேவையான நோயை அவருக்கு கொடுத்துட்டேன். அவரோட கதைய அவர் மூலமாவே முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப அவரோட மனைவி அவர் கூடவே வாழுற மாதிரி அவர நம்ப வச்சிருக்கேன். அவர் இன்னும் டெல்யூசன்ல தான் வாழ்ந்துட்டு இருக்காரு. ஆனா, நிம்மதியா இருக்காரு. அதனால விட்டுட்டேன்.”

“மூளைல எந்த வித பாதிப்பும் இல்லாதவங்க டைம் டிராவல் பண்ணாலும் ஏதாவது ஆகுமா?”

“இந்த அளவுக்கு போக்குமான்னு தெரியல. ஆனா, நிறைய பேரு கண்டிப்பா ரெசிடுயல் மெமரினால பாதிக்கப்படுவாங்க. மனநிலை பாதிக்கப்படும். மனசு முழுக்க குழப்பம் தான் கூடும். அதனால தான் இத வர்றதுக்கு முன்னாடியே நிறுத்தணும்ன்னு நினைக்கிறேன்.”

“எங்களோட கேள்விகளுக்கு பொறுமையா விளக்கமா விடையளிச்சதுக்கு நன்றி டாக்டர்.” 

“இத்துடன் செய்திகள் நிறைவுற்றது” என்று அறிவித்துவிட்டு அரட்டை இயலியும் அணைந்தது.