இது ஒரு கதையை பற்றிய கதை. ஒரு கதை உருவான கதை என்று வைத்துக்கொள்ளலாம். சிலவற்றை செய்ய நாம் நிறைய நேரங்களில் அரும்பாடு படுவோம். ஆனால், அதெல்லாம் அப்போதே நடக்காது. என்றோ ஒரு நாள் நாமே எதிர்பார்க்காத அன்று எல்லாமே கூடி வரும், நாம் நினைத்ததும் தானாய் நடந்துவிடும். அது போன்ற ஒரு நேர்ச்சி தான் நான் இந்த மின்னூல் எழுதியதும்
நச்சுயிரி பெருந்தொற்று பரவலால் வீட்டுக்குள் அடைப்பட்ட வாழ்க்கைக்கு உட்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது இப்போது. இந்த ஓராண்டு காலம் கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளையே செல்வதால் தன்னைத் தானே புதுப்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்துக்கு பலரும் தள்ளப்பட்டோம். இதற்கு முன்னர் ஒரு முறை கூட சமைக்காத பலரும் இந்த ஓராண்டில் சமையல் வல்லுநர் ஆகினர். பலரும் தனது உணவுப்பழக்கத்தை மாற்றி உடற்பயிற்சியை கூட்டி உடல் எடையை குறைத்தனர். கிட்டத்தட்ட தன்னைத் தானே மறுபிறப்பு செய்வதற்கு இந்த அடைப்பட்ட வாழ்க்கை பெரிதும் உதவியது என்றால் மிகையாகாது.
ஒருபுறம் அப்படியிருக்க மறுபுறம் பொழுதுபோக்குக்கு என்ன செய்வது என்று அறியாமல் திணறிப்போனதும் உண்டு. எவ்வளவு தான் தொலைக்காட்சியிலும், திறன்பேசியிலும், இணையத்திலும் நேரம் கழித்தாலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒரு வகையான வெற்றிடம் உருவாகியது. அதைப் போக்க அளவுக்கு மிஞ்சி திரைப்படம், தொடர்கள் பார்க்க துவங்கினோம். இணைய வழியில் திரைப்படங்கள், தொடர்கள் நிறைய வருவதால், அதைப் பார்ப்பதும் எளிதாகிவிட்டது. நானும் இணைய வழியில் நிறைய திரைப்படங்கள் பார்க்க தொடங்கினேன். பொதுவாக எனக்கும் திரைத்துறையில் ஈடுபாடு உள்ளதால் எனக்கு திரைப்படங்கள் மீது நாட்டம் உண்டு.
இணையவழி படங்கள் பார்க்கும் போது அடிவரிகள் வருவதால் மொழி ஒரு தடையாக இருந்ததில்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என்று இந்திய மொழிகளில் தொடங்கி ஆங்கிலம், கொரியன், இசுப்பானியம் என்று உலகப்படங்களும் பார்க்க துவங்கினேன். கிட்டத்தட்ட இந்த ஓராண்டில் 100 படங்களாவது பார்த்திருப்பேன். அனைத்து விதமான வகைமையிலும் படங்கள் பார்ப்பேன். ஆனால் எனக்கு மிகவும் விருப்பமானது – ஆவல்தவிப்பு/புதிர்/பரபரப்பு வகைமையில் உள்ள கதைகள் தான். பொதுவாக அந்த வகையில் எடுக்கப்படும் படங்களில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். பொதுவாக நாம் சிந்திக்காத புது கோணங்களில் சில கருத்தாக்கங்கள் இருக்கும். படம் முடிந்த பிறகும் என்ன நடந்ததது என்று சிந்திக்க வைக்கும் அளவுக்கு முடிவு இருக்கும். உடனே எளிதில் புலப்படாத அளவுக்கு சில அழகான குறியீடுகள் இருக்கும்.
இவ்வாறான படங்களைக் காணும் போது நாமும் இது போல சிறந்த கதை/திரைக்கதை எழுதவேண்டும் என்கிற ஊக்கமும் எழுச்சியும் வரும். ஆனால், நாமாக நேரமில்லை என்று அதை ஒதுக்கியும் வைத்துவிடுவோம். அப்படியாக நான் ஒதுக்கி வைத்த ஒன்று தான் மேலே கூறியது போல ஒரு கதை எழுதுவது. திடீரென்று ஒருநாள் எனக்கு யாரென்றே தெரியாத ஒருவர் என்னுடைய இந்தப் பதிவில் ஒரு கதையைப் படித்துவிட்டு பிடித்துப்போய் அதை குறும்படமாக எடுப்பதற்கு அனுமதி கேட்டார். நானும் தடையேதும் தெரிவிக்கவில்லை. ஆனால், நச்சுயிரி பரவல் அப்போது தான் இந்தியாவுக்குள் தீவிரமடைந்தது. அதனால் அரசும் ஊரடங்கு அறிவித்தது, அந்தக் குறும்படமும் எடுக்க முடியாமல் போனது.
நான் கூறிய இந்த நிகழ்வு நடந்தது 2020’ஆம் ஆண்டு மார்ச் திங்கள். பிறகு வாழ்க்கை எப்போதும் போல் ஓடிக்கொண்டிருந்தது. சில திங்களுக்கு பிறகு அரசு நிறைய கட்டுப்பாடுகளை தளர்த்தியது. உடனே மீண்டும் அதே தம்பி என்னை தொடர்பு கொண்டார். ஆனால், இந்த முறை குறும்படம் எடுப்பதற்காக அல்ல. மாறாக ஒரு பெரிய இணையவழி திரைப்படங்கள் வழங்கும் நிறுவனத்துக்கு ஒரு படமோ அல்லது ஒரு தொடரோ எடுத்துக்கொடுப்பதற்கு “ஒரு வரிக் கதைகள்” தேவைப்பட்டது. அந்த நிறுவனம் பல புதிய இயக்குனர்களுடன் நேர்காணல் நடத்தி அவர்கள் கூறிய கதைகள் பிடித்திருந்தகால் அதை திரைப்படமாகவோ அல்லது திடராகவோ எடுக்க தயாராக இருந்தார்கள். நானும் சிந்தித்து இரண்டு மூஒன்ரு ஒரு வரிக்கதைகளை அந்த இயக்குனர் தம்பிக்கு அனுப்பினேன்.
நேர்காணல் சிறப்பாக முடிந்தது. குறிப்பாக ஒரு கதை அவர்களை மிகவும் ஈர்த்துவிட்டதாக கூறினான் அந்த இயக்குனர் தம்பி. அந்தக் கதையை திரைப்படமாகவும் எடுக்கலாம் அல்லது தொடராகவும் எடுக்கலாம் என்று கூறி என்னை விரிவான கதை எழுதச் சொன்னான். இந்தக் கோரிக்கை தான் என் கதைக்கு மிகப்பெரிய திடம். ஏனென்றால் திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதுவதும் தொடருக்கு திரைக்கதை எழுதுவதும் முற்றிலும் மாறுபட்டது. ஒரு திரைப்படம் மூன்று மணி நேரம் ஓடினாலும் பொதுவாக இடைவேளை, முடிவுக்கு சற்று முன்பு ஒரு காட்சியில், மட்டும் முடிவில் ஒரு திருப்பம் வைத்து முடித்து விடலாம். ஆனால், தொடராக எழுதும் போது ஒரு படலம் அரைமணிநேரம் என்றாலும் கூட ஒவ்வொரு படலம் முடியும் போதும் ஒரு திருப்பம் கொடுக்க வேண்டும். ஆனால், தொடரில் ஒரு படலத்தில் இருந்து இன்னொரு படலத்துக்கு செல்லும் போது காட்சிகள் தாவினாலும் யாரும் தவறாக எண்ண மாட்டார்கள். ஆனால், திரைப்படத்தில் அனைத்து காட்சிகளும் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். காட்சி தாவல் அங்கே முடியாது.
திரைக்கதை இலக்கணம் இரண்டுக்கும் முரணாக இருப்பதால் என் கதையை இரண்டு வடிவத்துக்கும் பொருந்தும் படி காட்சிகள் எழுதினேன். அந்தக் கதையில் எங்கு வேண்டுமென்றாலும் காட்சிகளைச் செருகி நீட்டி முழக்கி தொடராகவும் மாற்ற முடியும் அளவுக்கு திரைக்கதை அமைத்தேன். ஆனால், சில காரணங்களால் அந்த நிறுவனம் இந்தக் கதையை இப்போது எடுக்க முடியாது என்று கூறிவிட்டனர். அதே நேரத்தில் அமேசான் புது எழுத்தாளர்களுக்கான மின்னூல் போட்டியை அறிவித்தது. இந்தப் போட்டியும் நான்கு ஆண்டுகளாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. நான் தான் எதிலும் பங்குகொள்ளாமல் இருந்தேன். ஆனால், முன்பு கூறியது போல இப்போது தான் நான் நூல் எழுதுவதற்கு எல்லாமே கூடி வந்தது போல உணர்ந்தேன்.
அதற்கு மேல் நான் எதுவும் பெரிதாக சிந்திக்கவில்லை. என் திரைக்கதையில் உள்ள படலங்களை என் நூலில் எழுதத் தொடங்கினேன். நூலில் எழுதும் போது நற்றமிழில் எழுதுவதால் இன்னும் சுவையாக இருந்தது. மனித உணர்வுகளை மையப்படுத்தியே கதை நகர்ந்தாலும் பல புதிய கருத்தாக்கங்கள் தென்படும், பல திருப்பங்கள் இருக்கும், நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஒருவழியாக அந்தக் கதையைத் தான் நான் இப்போது மின்னூலாக வெளியிட்டுள்ளேன். இதைத் தரவிறக்கி படித்து பார்த்து விட்டு உங்களுடைய கருத்துகளையும் தரமதிப்பீட்டையும் அமேசான் தளத்தில் அளித்தால் நான் இந்தப் போட்டியில் வெல்ல வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை பின்னாளில் இந்தக் கதை திரைப்படமாகவும் வரலாம். அனைத்தும் உங்கள் கையில் இப்போது. நன்றி.
நன்றி:
1) அட்டைப்படம் வடிவைமைத்து கொடுத்த நண்பர் மற்றும் ஓவியர் திரு. பரணி அவர்களுக்கு நன்றி
2) எழுத்துப்பிழைகள், மொழி நடை, ஏரணப் பிழைகள் சரிபார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மிக்க நன்றி
Posted on பிப்ரவரி 4, 2021
0