அரிசியின் கதை

Posted on ஜனவரி 14, 2019

1


அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

நீண்ட நாட்களுக்கு பிறகு எறுழ்வலி பதிவில் குழந்தைகளுக்கான கதை ஒன்று எழுதுகிறேன். இதற்கு முன்னர் ‘கானல் நீர்’ என்ற கதை ஒன்று குழந்தைகளுக்காக எழுதினேன். நேரத்தை வீணாக்காமல் நேரடியாக கதைக்குள் செல்வோம்.

================================================================================

ஒரு பெண் குழந்தை தனியறையில் தானுந்து பொம்மை வைத்து விளையாடிக்கொண்டிருந்தாள். சமையலறையில் சமைத்துக்கொண்டிருந்த அந்தச் சிறுமியின் தந்தை அவளைச் சாப்பிட அழைத்தார். விளையாட்டின் மீது உள்ள ஈர்ப்பால் அந்தச் சிறுமி தந்தையின் அழைப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். தந்தையின் அழைப்பின் ஒலி கூடிக்கொண்டே போனது. எனவே, சிறுமி தனது தானுந்து விளையாட்டு பொம்மையுடன் மெதுவாக நடந்து சாப்பிடும் இடத்திற்கு தயங்கி தயங்கி வந்தாள். அங்கே அருகில் மடிக்கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய தாய் சில நொடிகள் இவளைப் பார்த்தாள். ஒரு எள்ளற்சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் மடிக்கணினியில் தன் கண்களை மேயவிட்டாள் அந்தத் தாய்.

தந்தை அந்தச் சிறுமியிடம் விளையாட்டுப்பொம்மையைக் கீழே வைத்துவிட்டு ஒழுங்காக சோற்றைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார். உணவை உண்ணும் போது ஐந்து புலன்களையும் கொண்டு உணர்ந்து சாப்பிட வேண்டும் என்பதால் திறன்பேசிகளிலோ தொலைக்காட்சிகளிலோ கண்களைத் தொலைத்துவிட்டு சாப்பிடக் கூடாது என்று அறிவுரையும் கூறினார். முழுமனமில்லாமல் தயங்கி தயங்கி உணவை உண்ணத்தொடங்கினாள் சிறுமி. தன் கைகளாலே சோற்றை அள்ளிச் சாப்பிட கற்று சில நாட்களே ஆனதால் அவள் சாப்பிடும் பொழுது தட்டுக்கு வெளியே சோறு சிந்திச் சிதறியது.

எப்படியோ மெல்ல மென்று விழுங்கி தட்டில் இருந்த உணவைத் தீர்த்துவிட்டு தன் கைகளைக் கழுவி வந்தாள் சிறுமி. அந்தச் சிறுமியிடம் எவ்வளவு சோற்றுப்பருக்கைகள் கீழே சிந்தியிருக்கிறது என்பதைக் காண்பித்தார் அவளின் தந்தை. ஆனால், அந்தச் சிறுமிக்கு பருக்கைகள் கீழே சிந்தியிருப்பது பெரிய கவலையாகவே இல்லை. எனவே அவளின் தந்தை அவளை ஒரு நாற்காலியில் நன்றாக அமரச்செய்து அவள் அருகில் உட்கார்ந்து ஒரு கதை சொல்ல தொடங்கினார். “ஒரு கதை சொல்லட்டுமா?!” என்று கேட்டார் அவர். கதை என்றதும் சிறுமியின் முகம் மலர்ந்தது. “கதைக்கு முன்னாடி ஒரு கேள்வி. அரிசி நமக்கு எங்க இருந்து கிடைக்குது?” என்று வினவினார். சின்ன சிந்தனைக்கு பின் “பெட்டிக்கடையில!” என்று வெள்ளந்தியாக உரைத்தாள் அவள். இதைக் கேட்டதும் அவருக்கு சிரிப்பு தான் வந்தது. செல்லமாக அவள் கன்னத்தைக் கிள்ளிவிட்டு கதை சொல்ல தொடங்கினார்.

“அரிசி செடில தான் விளையுது, பாப்பா! நம்ம எலிமிச்சைச் செடில எலுமிச்சம்பழம் பாத்திருக்கேல?!”
“ஆமாப்பா!”
“அது மாதிரியே அரிசி ஒரு புள் மாதிரி செடில வளரும். அத நெல்’ன்னு சொல்லுவாங்க. புரிஞ்சுதா?”
புரியுது என்பதாகத் தலையை அசைத்தாள்.

“முதல்ல உழவர்கள் நிலத்தை நல்லா உழுவாங்க. நம்ம தோட்டத்துல எப்படி மண்ணைத் தோண்டி விதை விதைக்கிறோமோ அதே மாதிரி அவங்க மாடுகளை வச்சு ஒரு கூர்மையான கட்ட மூலமா நிலத்துல குழியைத் தோண்டுவாங்க. அதுக்கு பேரு தான் நிலத்தை உழுகுறது!”
மாடுகள் எப்படி கட்டையை இழுத்து மண்ணில் குழி விழுங்கும் என்று அவள் கண்களில் காட்சியாக ஓடிக்கொண்டிருந்தது.
“உழுதுவிட்ட நிலத்துல அரிசி நெல்லு விதையைத் தூவுவாங்க. அதுல பத்து விதைல ஒண்ணு தான் நல்லா முளைச்சு வரும்!”
“ஓ!”
“கொஞ்ச நாள் கழிச்சு கூட்டம் கூட்டமா விளைஞ்ச புல்லுக்கட்ட தனித்தனியா நடுவாங்க. அதுக்கு பேரு தான் நாத்து நடுறது. நாத்து நடுறதிலும், பூச்சிகளாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும், செயற்கை உரத்தாலும் பாதி செடிகள்’ல நெல்லு விளையாது!”
இதைக் கேட்டதும் கொஞ்சம் கவலையானது சிறுமியின் முகம்.

“நல்லா வளர்ந்த நெல்லுக்கதிர்களை அறுத்து பாறாங்கல்லுல வேகமா அடிச்சு நெல்லுமணிகளை உதிர்ப்பாங்க!”
“நெல்லுமணி’ன்னா என்ன அப்பா? அது தான் அரிசியா?”
“நெல்லுமணி தோலோட உள்ள அரிசிம்மா. எலுமிச்சைத் தோலுக்குள்ள தான பழம் இருக்கு. அது மாதிரி அரிசியும் தோலுக்குள்ள இருக்கும்!”
“ஓ!”
“நெல்லுமணிய உதிர்க்க ஓங்கி கல்லுல அடிக்கும் போது பத்துல இரண்டு நெல்லு காணாம போயிரும். அதுக்கப்பறம் இயந்துரத்துல போட்டு அரிசி தோல் உரிக்கும் போது பத்துல இரண்டு காணாம போயிரும்!”
“அச்சச்சோ… இத்தனை அரிசி தொலைஞ்சு போயிருச்சா?!”

“அதோட முடியுறதில்ல… அரிசியை அள்ளி சாக்குப்பைல போடும் போது கொஞ்சம் அரிசி வெளிய சிந்திரும். அதை வண்டில எடுத்துப்போட்டு போகும்போது கொஞ்சம் கொட்டிரும்.”
“நிறைய அரிசி வீணாகுதே அப்பா?”
“ஆமா, செல்லம். அதுக்கப்பறம் அப்பா சமைக்கும் போது அரிசியைக் கழுவும் போதுகூட கொஞ்சம் அரிசி கீழ வீணாப்போயிரும்!”
சிறுமியின் முகம் கொஞ்சம் வாடியது.

“இவ்வளவு போராட்டத்தைத் தாண்டி தான் அரிசி உன் தட்டுல சோறா வருது. அதை நீ வீணடிக்கலாமா?!”
“இனிமே நான் கீழ சிந்த மாட்டேன் அப்பா!”

தந்தை அந்தச் சிறுமியை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்!

================================================================================

பின் குறிப்பு: சிறுவர்களுக்கு சொல்லும் கதைகளிலுருந்தே நாம் பெண்களுக்கான மற்றும் ஆண்களுக்கான கட்டமைப்புகளை நீக்கி விடுவது நல்லது. எனவே தான் இந்தக் கதையில் தந்தை சமைக்கிறார், தாய் மடிக்கணினியில் வேலை செய்கிறாள், சிறுமி தானுந்து பொம்மைகளுடன் விளையாடுகிறாள்! 🙂

இதே கதையை ஆங்கில வடிவில் இங்கே எழுதியுள்ளேன்!

Advertisement