போலி

Posted on ஓகஸ்ட் 4, 2018

4


பெருங்கூட்டத்தில் தனியாய் இருப்பது போல் உணர்வது மிகவும் கொடுமையானது. ஆனால், அதுவெல்லாம் எயினனுக்கு புதிதல்ல. இன்று அவன் பயிலும் கல்லூரியில் கலை விழா இனிதே நடந்தது. அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். ஆனால், என்னவோ எயினனுக்கு இந்தக் கல்லூரியில் நண்பர்கள் யாரும் இல்லாததால் அவனுக்கு பெருங்கூச்சல் கூட அமைதியாகத் தெரிந்தது. இதுவும் ஒன்றும் புதிதல்ல. அவன் வாழ்க்கையில் இருந்த ஒரே நண்பனும் எட்டாம் அகவையிலே உயிர் பிரிந்ததால், அவனுக்கு பள்ளியிலிருந்தே நண்பர்கள் யாரும் கிடையாது. யாருடனும் சேர்ந்து பேசி விளையாடியது கிடையாது. அதனாலேயே அவனுக்குள் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் உண்டு. எந்த இடத்திலும் யார் கண்ணிலும் படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று பெரும்பாலும் எதிலும் ஈடுபடாமல் விலகியே இருப்பான்.

அவன் மனம் விட்டு பேசுவது தொலைவில் தன்னுடைய சிற்றூரில் தங்கும் தன் அன்னையுடன் மட்டும் தான். அவனுடைய தந்தை இறந்ததிலிருந்து அவன் அன்னை கிட்டத்தட்ட முழு நேரமும் வேலைப்பார்க்க தொடங்கிவிட்டாள். யாரோ முகமறியாதவர் அனுப்பும் படிப்புதவித் தொகையைப் பெற்று எயினன் கல்லூரி விடுதியில் தங்கி வருகிறான். திங்களுக்கு ஒரு முறை ஊருக்குச் சென்று அன்னையைப் பார்க்கும் அந்த இரண்டு நாட்களைத் தவிர அவன் யாரிடமும் உரையாடுவதில்லை.  அவ்வப்போது 8 அகவையில் வண்டியில் அடிப்பட்டு உயிரிழந்த அவனுடைய பழைய  நண்பனின் முகம் மட்டும் அவன் நினைவுக்கு வந்து போகும்.

இன்றென்னவோ அந்தப் பெருங்கூச்சலின் அமைதி எயினனை மிகவும் உறுத்தியது. யாரிடமாவது பேசி நட்பு வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு. அவனாகச் சென்று யாரிடமாவது உரையாட முயற்சி செய்தான். ஆனால், யார் அருகில் சென்றாலும் ஒரு வகையான பயமும் தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்து அவனை உரையாட விடாமல் தடுத்தது. ​அப்போது தான் அருகில் இருந்தவன் கைப்பேசியில் ஏதோ தீவிரமாக தட்டச்சிக்கொண்டிருந்ததைக் கவனித்தான். உடனே இவனுடைய பார்வை அவன் கைப்பேசி திரையில் தெரிவதைத் திருடியது. ஒரு பெண்ணுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை உணர்த்தியது அவன் கண்களால் திருடிய அந்தக் காட்சி. அவன் மனதுக்குள் ஒரு புது சிந்தனை தோன்றியது.

கல்லூரி விடுமுறை நாட்களில் ஒரு பீசா கடையில் பணிபுரிய தொடங்கினான். வரும் பணத்தையெல்லாம் சேர்த்து வைத்து சில திங்களில் ஒரு நல்ல தொடுதிரைக் கைப்பேசி ஒன்றை வாங்கினான். நேரில் சென்று உரையாட முடியாதவற்றை இணையம் மூலம் பகிரலாம் என்று முடிவெடுத்து சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கி எழுதத் தொடங்கினான். ஆனால் அங்கேயும் அவன் கவனிக்கப்படவில்லை. அவன் எங்கு சென்றாலும் தனிமையும் அவனைத் துரத்திக்கொண்டே வந்தது. நட்புக்காக ஏங்கியதை விட தன் மீது கவனம் ஈர்க்கப்படவேண்டும் என்றெண்ணினான்.முகநூலில் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் அவனாகவே நட்பு விண்ணப்பம் அனுப்பினான். எப்படியோ அவனுக்கு யாரென்றே தெரியாத ஒரு அழகான பெண் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுவிட்டாள். அவனுடைய நட்பு விண்ணப்பம் ஏற்கப்பட்டதை அவன் தொடுதிரைப்பேசியில் இருந்த முகநூல் செயலி அறிவிப்பு மணியில் சிவப்பு எண் மூலம் தெரிவித்தது. ஒரு புது விதமான மகிழ்ச்சியும் வியப்பும் எயினனை அவளுடைய முகநூல் பக்கத்திற்கு ஈர்த்தது.

அவளுக்கு ஏற்கனவே ஆயிரக்கணக்கான நண்பர்கள் முகநூலில் இருந்தனர். அவள் முகநூலில் இடும் துண்டு செய்திகளுக்கும், துணுக்குப்படங்களுக்கும், அவளுடைய ஒளிப்படங்களுக்கும் நூற்றுக்கணக்கோர் விருப்பம் தெரிவித்து கருத்தும் தெரிவித்திருந்தனர். ஒரு புறம் அவளுடைய அழகான ஒளிப்படங்களை கண்டு களித்த போதிலும் அவள் ஈர்க்கும் கவனத்தைக் கண்டு பொறாமையும் கொண்டான்.அந்த கவனம் அவனுக்கு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் சீற்றமும் அவனைத் துன்புறுத்தியது.

முகநூலில் இருந்த அந்தப் பெண்ணின் ஒளிப்படங்கள் அனைத்தையும் தரவிறக்கிவிட்டு அந்தப் பெண்ணின் முகநூல் நட்பை முறித்துக்கொண்டான். “கண்மணி” என்ற பெயரில் மின்னஞ்சல் முகவரி தொடங்கி பின்பு எல்லா சமூக ஊடங்களிலும் அதே பெயரில் பெண்ணாக எழுதத் தொடங்கினான். தரவிறக்கிய அந்தப் பெண்ணின் ஒளிப்படங்களை இணையத்தில் பயன்படுத்திக்கொண்டான் எயினன். எல்லா சமூக ஊடகங்களிலும் அவனுக்கு கவனம் குவிந்தது. அது அவனுக்கு ஒரு புது வித போதை தந்தது. கல்லூரியில் எப்பொழுதும் போல யாருக்கும் தெரியாத அமைதியான ஆளாக உலாவும் எயினன் சமூக ஊடகங்களிலோ அனைவரும் பேச விருப்பப்படும் “கண்மணி”. மொத்தத்தில் இப்போது எயினன் இரண்டு வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். ஒன்று,தாழ்வு மனப்பான்மையும் ஏக்கமும் நிறைந்த அவனுடைய உண்மையான வாழ்க்கை. இன்னொன்று,எயினனுக்கு கிடைக்காத போதை தரும் போலியான இணைய வாழ்க்கை.

முகநூலில் நாள்தோறும் நட்பு விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. எண்ணற்ற தனிச்செய்திகளும், போலியான “கண்மணி” ஒளிப்படங்களுக்கான கருத்துக்களும் எயினனுக்கு தொடர்ந்து போதை தந்து கொண்டே இருந்தது. உண்மை வாழ்வில் கிடைக்காத நட்பு இணையத்தில் கிடைத்ததால் அனைவரின் தனிச்செய்திக்கும் கண்மணியாக – அதாவது பெண்ணாக – பதிலளிக்கத் தொடங்கினான். நிறைய பேருடன் இணையத்தில் பெண்ணாக நட்பு வளர்க்க எளிமையாயிருந்தது எயினனுக்கு.

கொஞ்சம் கொஞ்சமாக கண்மணிக்கு வரும் கருத்துக்களிலும் தனிச்செய்திகளிலும் பாலியல் வன்மம் தெரிந்தது. அதைப் படிக்கும் போது எயினனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தான் வரும். இருந்தாலும் நட்பு வளர்க்க வேண்டும் என்றெண்ணி அவர்களுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் எயினன் கண்மணியாக பதிலளிப்பான். சில ஆண்கள் கண்ணியமான முறையில் “கண்மணி”யிடம் பேசினாலும் பெரும்பாலான ஆண்கள் பாலியல் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டவர்கள் என்று அப்பட்டமாக தெரிந்தது எயினனுக்கு. ஆண்களின் பாலியல் ஏக்கத்தைப் பார்த்து, அவர்கள் ஒரு ஆணிடம் பேசுவது தெரியாமல் பேசி ஏமாறுவதை எண்ணி முதலில் உள்ளுக்குள் சிரித்திருந்தாலும் போக போக எயினனுக்கே எரிச்சல் வந்தது.

ஒரு நாள் அரைகுறை துயிலில் கலைந்த அவனின் சோர்வுற்ற விழிகள் அவன் நன்கு அறிந்த பெயரில் நன்கு அறிந்த முகத்துடன் கூடிய முகநூல் ஆளிடமிருந்து கண்மணிக்கு விண்ணப்பம் வந்திருப்பதை கவனித்தது. அது அவனுடைய கல்லூரி பேராசிரியர் தான் என்று மூளை அவனுக்கு உணர்த்திய பொழுது அதிர்ச்சியில் அவன் விழி முழுமையாக திறந்தது. தான் தான் முகநூலில் பொய்யாக கண்மணியாக இருக்கிறோம் என்றறிந்து தான் அவர் விண்ணப்பம் அனுப்பியிருப்பாரோ என்று அவனுக்குள் ஐயமும் பயமும் எழுந்தது. தனக்குள்ளே நடந்த நீண்ட உரையாடலுக்கு பின் தயக்கத்துடன் அந்த விண்ணப்பத்தை ஏற்ற பிறகு தான் அவன் இன்னும் அதிர்ச்சியடையக் கூடிய ஒரு அரட்டை நடந்தது முகநூலில். அவனுடைய பேராசிரியரே தகாத முறையில் “கண்மணி”யிடம் முகநூலில் உரையாடினார். கனத்த மனதுடன் பேராசிரியரின் முகநூல் நட்பைத் துண்டித்தான்.

இந்த அரட்டை அவனுள் பல கேள்விகளை எழுப்பியது. இதுவரை வேடிக்கையாகத் தோன்றிய பல உரையாடல்கள் இப்போது அருவருப்பாக தோன்றியது அவனுக்கு. பாலியல் எண்ணங்களால் உந்தப்பட்ட ஆண்களை நினைத்து வெட்கப்பட்டான். “கண்மணி”யிடம் கண்ணியமின்றி பேசிய ஆண்கள் அனைவரின் நட்பையும் இணையத்தில் முறித்தான். எஞ்சியது வெகு சிலரே. புதிய நட்பு விண்ணப்பங்கள் வந்து கொண்டே இருந்தது. இம்முறை ஒவ்வொரு ஆணின் நட்பு விண்ணப்பத்தை ஒப்புக்கொள்ளும் முன்பு அவர்களைப் பற்றி ஓரளவு அறிந்து கொண்டே செய்தான். இணையத்தில் “கண்மணி”யின் நிலைத்தகவல்கள் எல்லாருக்கும் தெரியாதவாறும் அனுமதித்த நட்பு வட்டத்துக்கு மட்டுமே தெரிவது போலும் அமைத்துக்கொண்டான்.

அதன் பிறகு தான் அவன் இன்னொரு கொடுமையைப் பார்க்க நேர்ந்தது. “கண்மணி” திடீரென்று நட்பை முறித்துக்கொண்டதால் தன்னுடைய இறுமாப்பு பாதிப்படைந்து சில ஆண்கள் வெகுண்டனர். முகநூலில் கண்ணியமின்றி இவர்கள் பேசியிருந்தாலும் அதற்கும் வேண்டுமென்றே ஈடுகொடுத்த அந்தக் “கண்மணி”யின் அரட்டைகளைத் திரைச்சொட்டுகளாய் இணையத்தில் வெளியிட்டனர். பலரும் இதுபோல் வெளியிட்டது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. அவர்கள் எண்ணியது போல் இணையத்தில் “கண்மணி”யின் பெயர் கவிழ்ந்தது. “கண்மணி” பற்றி அறிந்தோரும் அறியாதோரும் “அவளுடைய”  ஒதுக்கத்தைக் (Privacy/Secrecy) கிண்டல் செய்து துணுக்கி(Meme) போட துவங்கினர். பல ஆண்களின் தவறுகளை பெரிது படுத்தாமல் கண்மணியை மட்டும் தொடர்ந்து கிண்டலடித்து இணையம். இதையெல்லாம் கண்ட எயினன் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டான். கண்மணி மீது வைக்கப்படுகின்ற ஒவ்வொரு குற்றச்சாட்டும் அவன் மீது வைத்தது போல் இருந்தது. அதனால் கண்மணி என்ற கணக்கை இணையத்திலிருந்தே நீக்கிவிட்டு தனது போலியான வாழ்க்கையிலிருந்து வெளியேறி மீண்டும் உண்மையான வாழ்க்கையை வாழத்தொடங்கினான்.

ஆனால் அவன் விதைத்த வினைகள் அவனை விடவில்லை. இணையத்தில் தொடர்ந்து கிண்டலடிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தித்தாளில் படித்து அதிர்ந்தான். அது வேறு யாருமில்லை; அவன் முகநூல் நட்பு விண்ணப்பத்தை ஏற்ற அந்த உண்மையான பெண்மணி. தன்னால் ஒரு உயிர் துன்பப்படுவதை எண்ணி மிகவும் வருந்தினான். அவனை அறியாமல் அவன் விழிகளில் கண்ணீர்த்துளிகள் தேங்கியது. இதற்கு அவனால் ஆன முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து அவனே ஒரு வாக்குமூலம் காணொளி பதிவு செய்து YouTube’​இல் போட்டு அனைவருக்கும் Whatsapp’​இல் அனுப்பினான்.

“எல்லாருக்கும் வணக்கம். என் பேரு எயினன். எனக்கு கூட பேச ஆளில்லன்னு பொழுது போகாம நான் தான் ‘கண்மணி’ன்ற பக்கத்த இணையத்துல தொடங்குனேன். ஆனா அது இவ்வளவு பெரிய சிக்கல்ல போய் முடியும்னு நான் நெனச்சும் பார்க்கல. ஒரு 6 மாசமா ஒரு பொண்ணா போலியா இணையத்துல வாழ்ந்து பாத்தேன். போலியா கூட என்னால பெண்ணா வாழ முடியல. அவ்வளவு தொல்லைகள் தொடர்ந்து. எதுக்கெடுத்தாலும் பொண்ணுங்கள ரொம்ப கவனமா இருங்க, இணையத்துல அதைப் போடாதீங்க, இதைப் போடாதீங்கன்னு பயமுறுத்தி அறிவுரை சொல்லுறோம். அந்த அறிவுரையோட நோக்கம் சரியா இருந்தா கூட அது சரியான அறிவுரை இல்ல. அறிவுரை சொல்லப்பட வேண்டியது ஆண்களுக்கு. நேர்லயே பாக்காம என்ன வேணும்னாலும் பேசலாம்ங்கிற சுதந்திரம் இணையம் கொடுத்ததை கேவலமா பயன்படுத்துறது ஆண்கள் தான். இத என்னோட அனுபவத்துல சொல்றேன். என்னோட ஆசிரியரே நான் கண்மணியா இருந்தப்ப என்கிட்டே அசிங்க அசிங்கமா பேசுனாரு. இதையே அவர் நேர்ல செய்வாரா? நிறைய ஆண்களுக்குள்ள ஒளிஞ்சிருக்க வக்கிரம் இணையத்துல தான் தெரியுது. இவனுங்களுக்கு புடிச்ச மாதிரி பேசுனா கொஞ்சி குலாவுவாங்க. இல்லைன்னா கண்டபடி திட்டுவாங்க. இப்படிப்பட்ட கீழ்த்தரமான ஆண்களை நினைச்சு நான் வெக்கப்படுறேன். நான் பண்ண தப்பால இன்னைக்கு மருத்துவமனைல உயிருக்கு போராடிட்டிருக்க அந்த பொண்ணுட்ட நான் மனசார மன்னிப்பு கேட்டுக்குறேன். பொய்யா கூட என்னால இந்த உலகத்துல பொண்ணா வாழ முடியல. தினமும் உண்மையா பெண்ணா வாழற ஒவ்வொருத்தவங்களையும் நான் மதிக்கிறேன், பாராட்டுறேன். நான் செஞ்ச தப்புக்காக நானே காவல்துறை நிலையம் போயி சரணடையிறேன். இந்த வீடியோவைப் பாக்குற நீ ஆம்பளையா இருந்தா உனக்கு சொல்றது ஒன்னு தான்… இனிமேலாவது உனக்குள்ள இருக்க அந்த மிருகத்தனத்தைக் கட்டுப்படுத்தி உண்மையான ஆம்பளையா இரு!”

சிறைத்தண்டனை ஒன்றும் புதிதல்ல எயினனுக்கு. தனிமையுடன் வாழ்ந்து பழகியவன் தான் அவன்.