பேலியோ என்னும் புரட்சி

Posted on நவம்பர் 3, 2016

4


சிறிது காலமாகவே தமிழ்நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டிய சொல் – பேலியோ. பேலியோ என்பது குகைமனிதன் உணவுமுறையைக் குறிக்கும். இதைக் குறைமாவு நிறைகொழுப்பு உணவுமுறை என்றும் அழைக்கலாம். அதாவது மாவுச்சத்துள்ள உணவுகளை மிகவும் குறைத்துக்கொண்டு கொழுப்புச்சத்துள்ள உணவுகளை மிகுதியாக உண்பது தான் இந்த பேலியோ உணவுமுறை.

பேலியோவைப் பற்றி தெரிந்துகொள்ள தமிழிலேயே எண்ணற்ற தளங்கள் உள்ளன. இந்தப் பதிவின் நோக்கம் அதை விளக்குவதல்ல. பேலியோ ஏன் ஒரு புரட்சி இயக்கம் போல் தோற்றமளிக்கிறது என்பதை இருமுனையில் இருந்தும் அலசிப்பார்ப்பதே இந்தக் கட்டுரையின் இலக்கு.

இந்தக் குறைமாவு நிறைகொழுப்பு உணவுமுறையை தமிழகமெங்கும் பரப்பியதில் பெரும் பங்கு “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழுவைச் சேரும். இந்தக் குழுவின் மேலாண்மையரில் ஒருவரான நியாண்டர் செல்வன் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு சென்று மாநாடு நடத்தி பேலியோ உணவுமுறைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தக் குழுவிலேயே பல மருத்துவர்களும் உள்ளனர். அதில் மருத்துவர் புருனோ இந்த உணவுமுறையைப் பற்றி நிறைய தகவல்கள் எழுதி வருகிறார்.

இந்த உணவுமுறைக்கு தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் எதிர்ப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது. நிறைய பேர் இந்தக் குழு ஏதோ ஒரு அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவதாகக் கூறுகின்றனர். இந்தக் குழுவில் யார் வேண்டுமானாலும் இலவசமாக சேரலாம் (முகநூல் பயனர்கள் மட்டும்) இங்கு ஆலோசனை பெற எந்த ஒரு கட்டணமும் கிடையாது. எனவே மக்களிடம் இருந்து நேரடியாக பணம் பிடுங்கும் அரசியல் இல்லை இது. ஒருவேளை பேலியோ குறித்தான நூல்களை நிறைய விற்க இந்தக் குழு தொடங்கப்பட்டிருக்கலாம். அல்லது குருதி ஆய்வு மையத்துக்கும் இந்தக் குழுவுக்கும் ஏதாவது வணிக உடனிணைவு இருக்கலாம். இந்தக் குழு ஒருவேளை பேலியோ பரப்புவதன் மூலம் பணம் ஈட்டினாலும் மக்களை ஏமாற்றவில்லை. எனவே இதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.

paleopoll

ஒருவேளை இறைச்சியை முன்னிறுத்தி இந்த உணவுமுறை இருப்பதால் இதை எதிர்ப்பரசியலாக சிலர் நினைக்கலாம். இதற்காகவே அந்தக் குழு இறைச்சி சாப்பிடாதவர்களுக்கும் தனி உணவுப்பட்டியல் தருகிறது. பேலியோ உணவுமுறையில் நிறைய விலைமதிப்பு கொண்ட உணவுப்பொருட்கள் உள்ளன என்று சிலர் குறைகூறுகின்றனர். அவர்கள் பரிந்துரைப்பது போல மது, புகைப்பழக்கங்களை நிறுத்திவிட்டு வெளியில் சாப்பிடுவதைக் குறைத்துக்கொண்டு பேலியோ பின்தொடர்ந்தால் செலவு ஒன்றும் கூடாது. மறைமுகமாகக் கூட எந்த ஒரு உணவு வணிகத்தையும் இவர்கள் ஆதரிப்பதாகத் தெரியவில்லை.

பல்லாயிரக்கணக்கோர் உள்ள அந்த “ஆரோக்கியம் & நல்வாழ்வு” முகநூல் பக்கத்தில் கிழமைக்கு ஒருமுறையாவது இந்த உணவுமுறை மூலம் பயன்பெற்றததாக பகிர்ந்துகொள்வர். நிறைய பேர் உடல் எடை குறைந்ததை ஒளிப்படங்களோடு பகிர்கின்றனர். நீரிழிவு நோய் கட்டுக்குள் வருவதாக சான்றோடு பகிர்கின்றனர். ஆனால், பேலியோ கடைப்பிடித்ததால் உடல்நலம் குன்றியதாக யாரேனும் சான்றோடு சொல்லியிருக்கிறார்களா?

paleofbpost

மேலே திரு. என். சொக்கன் கூறியது போல் பேலியோ பின்தொடர்பவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க நிறைய காரணங்கள் உண்டு. அதை எதிர்க்கவோ  கிண்டலடிக்கவோ தான் பெரிதாகக் காரணம் எதுவும் இல்லை.

paleotweet1

பேலியோ என்பது அரசியல் இல்லையெனில் ஏன் புரட்சி இயக்கம் போல் செயல்பட வேண்டும். “ஆரோக்கியம் & நல்வாழ்வு” குழு வெறும் பரிந்துரைத் தளமாகவோ, யாரையும் ஏமாற்றாத வணிகமாகவோ செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், உட்கொள்ளும் கொழுப்பு புரட்சியாக வெளிவர வேண்டுமென்பது தேவையில்லை.

பின்குறிப்பு: 2 திங்களுக்கு நானும் இந்தக் குகைமனித உணவுமுறையைக் கடைப்பிடித்தேன். உடல் எடையில் 5 கிலோ குறைந்தேன். சில காரணங்களால் என்னால் அந்த உணவுமுறையைத் தொடர முடியவில்லை. ஆனால், மீண்டும் என்றேனும் தொடங்கும் எண்ணத்துடனே இருக்கிறேன். இதனால் நான் கொழுப்பு பிடித்தவன் என்று நீங்கள் எண்ணினால் அது தவறில்லை.