அறிமுகம்

Posted on ஏப்ரல் 18, 2014

22

விளம்பரம்:
 
 இந்த எறுழ்வலி பதிவில் வெளியான சில சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து Free Tamil Ebooks உதவியின் மூலம் மின்நூலாக வெளியிட்டு விட்டேன். அந்த மின்நூல் இங்கே கிடைக்கும்!

எறுழ்வலி இலவச மின்நூல்

 இந்த மின்நூலுக்கு அட்டைப்படம் செய்து கொடுத்த ராஜேஷூக்கு மிக்க நன்றி. அதே போல் நான் மின்நூலாக்கம் செய்வதற்கு தூண்டுதலாகவும் இருந்து உதவியும் செய்த சீனிவாசன் மற்றும் இரவி இருவருக்கும் மிக்க நன்றி.

ஆண்டிராயிடு கருவிகளில் இந்த மின்னூலை இங்கிருந்து இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம்!

<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 1
இடம்: நேர்முகத்தேர்வு அறை
கதைமாந்தர்கள்: பளீர் வெள்ளை நிறத்தோற்றம் கொண்ட ஆண் – நேர்முகத்தேர்வு எடுப்பவன் (சுருக்கமாக: எடு), மீசையை மழித்திருக்கும் ஆண் – நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவன் (சுருக்கமாக: கல).
எடு: (சிரித்துக்கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது) (ஆங்கிலத்தில்) அந்தத் தாளையும் எழுதுகோலையும் எடுத்து Binary search algorithm’க்கு ஒரு program எழுதுங்க.
கல:  (மனதுக்குள்) என்ன திடீர்னு serious ஆயிட்டாரு!
எடு: (ஆங்கிலத்தில்) என்ன?
கல: (ஆங்கிலத்தில்) ஒண்ணுமில்லைங்க!
நேர்முகத்தேர்வில் கலந்துகொள்பவன் தட்டுத்தடுமாறி கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொன்னான். ஆனாலும், விடாமல் பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. கிட்டத்தட்ட இந்த கேள்வி-பதில் விளையாட்டு ஒரு மணி நேரம் நடந்தது.
அதன் முடிவில்…
எடு: (ஆங்கிலத்தில்) உங்கள வேலைக்கு எடுத்துட்டோம்.
கல: (ஆங்கிலத்தில்) உண்மையாவா?
எடு: (ஆங்கிலத்தில்) இந்த மாதிரி நல்ல திறமையான ஆள எங்க நிறுவனம் இழக்க தயாரா இல்ல. வாழ்த்துக்கள்.
இருவரும் கைகுலுக்கி விடை பெற்றனர்.
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 2
இடம்:  சாலையோரப் பழச்சாறு கடை அருகில்
கதைமாந்தர்கள்: முறுக்குமீசை கொண்ட இளைஞன் (சுருக்கமாக: இளைஞன்), அவனுடைய நண்பன் (சுருக்கமாக: நண்பன்), பெரிய மீசை கொண்ட இரண்டு வழிப்போக்கர்கள்  (சுருக்கமாக: வழி1வழி2)
வழி1: வேற ஒண்ணுமில்லீங்க… இந்த address எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?
இளைஞன் அவரிடம் இருந்த அந்தத் துண்டுச்சீட்டை வாங்கி அதில் எழுதியிருந்த முகவரிக்கு எப்படி போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான். அந்த வேளையில் இந்த 2 வழிப்போக்கர்களும் இவன் மீசையை உற்று கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும்  அவர்களுக்குள் ஒரு பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.
வழி2: நன்றி தம்பி. நாங்க இப்பத்தான் பெங்களூருக்கு மொத முறையா வர்றோம். எங்க பொண்ணு இங்க பெங்களூர்ல தான் வேலை பாக்குறா.
இளைஞன்: (மனக்குரல்: ‘இதெல்லாம் எதுக்கு நம்மட்ட சொல்றாய்ங்க?!’) ஓ! சரிங்க.
வழி1: நீங்க எந்த ஊரு தம்பி?
இளைஞன்: நான் மதுரைங்க.
வழி1: ஓ! நாங்களும் மதுர தான். செக்காணூரனி பக்கம். நீங்க?
இளைஞன்:  நரிமேடு
வழி1: எங்க படிச்சீங்க?!
இளைஞன்:  Noyes matriculation higher secondary school
வழி1: (முகத்தை லேசாக சுழித்தப்படி) வர்றோம் தம்பி.
அவர்கள் இருவரும் கொஞ்சம் தள்ளி சென்றதும் அவனும் நண்பனும் பேசிக்கொண்டனர்.
 
நண்பன்: (அருகிலிருந்த இளைஞனிடம் நக்கலாக) என்னடா?! Address’க்கு வழி கேக்க வந்தவரு கடைசில உன் address’அ விசாரிச்சுட்டு போறாரு?!
இளைஞன்:  (மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு) சரிடா! எனக்கு இன்னைக்கு ஒரு interview இருக்கு. நான் கிளம்புறேன். Bye!
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 3
இடம்:   உடற்பயிற்சி மையம்
கதைமாந்தர்கள்: உடற்பயிற்சி செய்யும் பெரிய மீசை கொண்ட இளைஞன் (சுருக்கமாக: அவன்), அவனருகில் உடற்பயிற்சி செய்யும் மலையாளி (சுருக்கமாக: மலை)
அவன் அந்த மலையாளியிடம் ஏதோ சொல்ல வருகையில் அவனுடைய அலைப்பேசி மணி ஒலித்தது.
அவன்: (மலையாளியிடம்) “1 minute please!”
அவன் ஓடு எந்திரத்திலிருந்து இறங்கி தள்ளியிருந்த மேசை மேல் இருந்த தன் அலைப்பேசியை எடுக்கச் சென்றான்.
அவன்: (அலைப்பேசியில்) அம்மா, நான் இப்ப Gym’ல இருக்கேன் மா. (சின்ன நிறுத்தம்) ம்ம்ம்… (சின்ன நிறுத்தம்) interview முடிச்சுட்டு வந்து சொல்றேன்… (சின்ன நிறுத்தம்) Thanks மா!
அலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் ஓடு எந்திரத்தில் வந்து ஏறினான் அவன். அருகிலுள்ள ஓடு எந்திரத்தில் ஓடிக்கொண்டிருந்த அந்த மலையாளி தயக்கத்துடன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.
மலை: (மலையாளத்தில்) நீங்க எப்படி சரளமா மலையாளம் பேசுறீங்க?
அவன்: (மலையாளத்தில்) நான் பெங்களூருக்கு வர்றதுக்கு முன்னாடி திருவனந்தபுரத்துல தான் 2 ஆண்டு வேலை பார்த்தேன்.
மலை: (இழுத்தபடி)  ஓ!
அதற்கடுத்து இருவரும் பேச்சைத் தொடாராமல் ஓட்டத்தில் கவனம் செலுத்தினர்.
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 4
இடம்: நேர்முகத்தேர்வு அறை
கதைமாந்தர்கள்: பளீர் வெள்ளை நிறத்தோற்றம் கொண்ட ஆண் – நேர்முகத்தேர்வு எடுப்பவன் (சுருக்கமாக: எடு), மீசையை மழித்திருக்கும் ஆண் – நேர்முகத்தேர்வில் கலந்து கொள்பவன் (சுருக்கமாக: கல).
நேர்முகத்தேர்வு எடுப்பவன் ஒருமாதிரியாக சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினான்.
எடு: (ஆங்கிலத்தில்) உங்கள வேலைக்கு எடுத்துட்டோம்.
கல:  (வியப்புடன்) (ஆங்கிலத்தில்) இன்னும் ஒரு கேள்வி கூட கேக்கல? எப்படி என்னைய தேர்ந்தெடுத்தீங்க?!
எடு: (நமட்டுச்சிரிப்புடன்) (ஆங்கிலத்தில்) கேள்வி கேக்கணும்? அவ்வளவு தானே?! உங்களுக்கு பிடிச்ச திரைப்படம் என்ன?
கல:  தில்லுமுல்லு
எடு: (ஆங்கிலத்தில்)  எது? சிவா நடிச்ச படமா?
கல: (ஆங்கிலத்தில்) அய்யய்யோ… இல்லைங்க… இரசினி நடிச்ச படம்!
எடு: (ஆங்கிலத்தில்)  ஓ! உங்களுக்கு பிடிச்ச உணவு?
கல: (ஆங்கிலத்தில்) கோழி பிரியாணிங்க! கோழிய வச்சு என்ன செஞ்சாலும் விரும்பி சாப்பிடுவேன்.
எடு: (சிரித்துக்கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது) (ஆங்கிலத்தில்) அந்தத் தாளையும் எழுதுகோலையும் எடுத்து Binary search algorithm’க்கு ஒரு program எழுதுங்க.
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 5
இடம்:  சாலையோரப் பழச்சாறு கடை அருகில்
கதைமாந்தர்கள்: முறுக்குமீசை கொண்ட இளைஞன் (சுருக்கமாக: இளைஞன்), அவனுடைய நண்பன் (சுருக்கமாக: நண்பன்), பெரிய மீசை கொண்ட இரண்டு வழிப்போக்கர்கள்  (சுருக்கமாக: வழி1வழி2)
நண்பன் அந்த இளைஞனை ஒருமாதிரியாக பார்த்து  சிரித்தான்.
இளைஞன்: ஏன்டா சிரிக்கிற?
நண்பன்: இல்லடா! உனக்கு மீசை ஒரு பக்கம் மட்டும் முறுக்கியிருக்குடா!
இளைஞன்: ஓ! (என்று சொல்லிவிட்டு மீசையைச் சரிசெய்ய முற்பட்டான்.)
நண்பன்: (அவனைத் தடுத்து நிறுத்தியவாரு…) இருடா. உனக்கு முறுக்குமீசை தான் நல்லாயிருக்கு (என்று சொல்லிவிட்டு அவனின் மீசை இருபுறத்தையும் முறுக்கிவிடுகிறான்.)
சிறிது நேரம் அரட்டை அடித்துக்கொண்டே இருவரும் பழச்சாறைக் குடித்து முடித்தனர். அப்பொழுது சிறுது தொலைவிலிருந்த இருவர் இவர்களையே கவனித்துக்கொண்டிருந்தனர். இருவரும் 50 அகவை மதிக்கத்தக்கத் தோற்றத்தில் வெள்ளைச்சட்டை வெள்ளை வெட்டி அணிந்திருந்தனர்.
நண்பன்: (அமைதியாக) டேய்… அங்க ரெண்டு பேரு நம்மளையே பாத்திட்டுருக்காய்ங்க!
இளைஞன்: ம்ம்ம்… கண்டுக்காத… வா! (என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து கிளம்ப முற்பட்டனர்.)
அந்த இருவரும் இவர்களை நெருங்கி வந்து பேச்சைத் தொடங்கினர்.
வழி2:  நீங்க தமிழா?!
இளைஞன்: ம்ம்ம்… ஆமாங்க! தமிழ் தான்! என்ன வேணும்?
வழி1: வேற ஒண்ணுமில்லீங்க… இந்த address எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?
இளைஞன் அவரிடம் இருந்த அந்தத் துண்டுச்சீட்டை வாங்கி அதில் எழுதியிருந்த முகவரிக்கு எப்படி போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 6
இடம்:   உடற்பயிற்சி மையம்
கதைமாந்தர்கள்: உடற்பயிற்சி செய்யும் பெரிய மீசை கொண்ட இளைஞன் (சுருக்கமாக: அவன்), அவனருகில் உடற்பயிற்சி செய்யும் மலையாளி (சுருக்கமாக: மலை)
அவன் பயிற்சியாளருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேசை மேலிருந்த குறிப்பேட்டில் பெயரையும் நேரத்தையும் பதிவு செய்துவிட்டு தனியறைக்குச் சென்று உடையை மாற்றிவிட்டு ஓடு எந்திரத்தில் வந்து ஏறினான். அந்த நேரத்தில் ஒரு மலையாளியும் உடற்பயிற்சி மையத்துக்கு வந்தான். வழக்கம் போல அலைப்பேசியை மேசை மேல் வைத்துவிட்டு குறிப்பேட்டை நிரப்பிவிட்டு வந்து அவனருகில் இருந்த ஓடு எந்திரத்தில் ஏறினான்.
மலையாளி அவனுடைய பெரிய மூக்கையும், பெரிய மீசையையும், அவன் கழுத்துச்சங்கிலியில் அவன் ஓட்டத்துக்கு ஏற்ற ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த சிலுவையையும் பார்த்தான். அவனைப் பார்த்து ஏற்கனவே பழகியவன் போல சிரித்தான் மலையாளி. அவனும் ‘எதற்கும் சிரித்துவைப்போமே’ என்று கடமைக்கு பதில் சிரிப்பு சிரித்தான்.
மலை: (மலையாளத்தில்)  உங்கள இங்க நான் பாத்ததே இல்லையே?
அவன்: (மலையாளத்தில்)  நான் பொதுவா மாலைல வருவேன். இன்னைக்கு தான் காலைல வந்திருக்கேன்.
மலை: ஓ!
சிறிது நேரம் இருவரும் அமைதியாக ஓடுபயிற்சி செய்தனர். ஏதாவது பேச்சு கொடுக்க வேண்டுமென்றே அந்த மலையாளி பேச்சைத்  தொடர்ந்தான்.
மலை: (மலையாளத்தில்)  இங்க என்ன வேலை பாக்குறீங்க?!
அவன் அந்த மலையாளியிடம் ஏதோ சொல்ல வருகையில் அவனுடைய அலைப்பேசி மணி ஒலித்தது.
அவன்: (மலையாளியிடம்) “1 minute please!”
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 7
இடம்:  சாலையோரப் பழச்சாறு கடை அருகில்
கதைமாந்தர்கள்: முறுக்குமீசை கொண்ட இளைஞன் (சுருக்கமாக: இளைஞன்), அவனுடைய நண்பன் (சுருக்கமாக: நண்பன்), பெரிய மீசை கொண்ட இரண்டு வழிப்போக்கர்கள்  (சுருக்கமாக: வழி1வழி2)
நண்பன்: (அருகிலிருந்த இளைஞனிடம் நக்கலாக) என்னடா?! Address’க்கு வழி கேக்க வந்தவரு கடைசில உன் address’அ விசாரிச்சுட்டு போறாரு?!
இளைஞன்:  (மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு) சரிடா! எனக்கு இன்னைக்கு ஒரு interview இருக்கு. நான் கிளம்புறேன். Bye!
அவன் வீட்டுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு வந்து கண்ணாடியைப்  பார்த்தான். பெரிய மீசை அவன் கண்ணையே உறுத்தியது. உடனே மீசையை மழித்துவிட்டு நேர்முகத்தேர்வுக்கான உடைகளை அணிந்துவிட்டு கிளம்பினான். விசையுந்தும், மின்தூக்கியும் இவன் சென்று சேர வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்ல உதவியது.
அவன் நேர்முகத்தேர்வு அறைக்குள் சென்றான். கைக்குலுக்கல்-முகமன் முடிந்ததும் நேர்முகத்தேர்வு எடுப்பவன் அவனை உற்சாகப்படுத்துவது போல அவன் தோளைத் தட்டினான்.
இளைஞன்:  (மனக்குரல்) கிழிஞ்சு போன பனியன் நூல்ல guitar வாசிக்கிறானே!
நேர்முகத்தேர்வு எடுப்பவன் அவனை அமரச்சொல்லிவிட்டு கேள்வி எதுவும் கேட்காமல் அவனையே சிறிது நேரம் உற்று பார்த்தான். பிறகு ஒருமாதிரியாக சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினான்.
எடு: (ஆங்கிலத்தில்) உங்கள வேலைக்கு எடுத்துட்டோம்.
கல:  (வியப்புடன்) (ஆங்கிலத்தில்) இன்னும் ஒரு கேள்வி கூட கேக்கல? எப்படி என்னைய தேர்ந்தெடுத்தீங்க?!
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 8
இடம்:   உடற்பயிற்சி மையம்
கதைமாந்தர்கள்: உடற்பயிற்சி செய்யும் பெரிய மீசை கொண்ட இளைஞன் (சுருக்கமாக: அவன்), அவனருகில் உடற்பயிற்சி செய்யும் மலையாளி (சுருக்கமாக: மலை)
அவன்: (மலையாளத்தில்) நான் பெங்களூருக்கு வர்றதுக்கு முன்னாடி திருவனந்தபுரத்துல தான் 2 ஆண்டு வேலை பார்த்தேன்.
மலை: (இழுத்தபடி)  ஓ!
அதற்கடுத்து இருவரும் பேச்சைத் தொடாராமல் ஓட்டத்தில் கவனம் செலுத்தினர்.
அவன் உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு கிளம்ப முற்பட்டான். மலையாளியிடம் சொல்லிவிட்டு செல்லாம் என்று பார்த்தான். ஆனால், மலையாளி அவனைக் கண்டுகொள்ளாமல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தான்.
இவன் மீண்டும் உடைகளை மாற்றிவிட்டு உடற்பயிற்சி நிலையத்திலிருந்து வெளிவரும் நேரத்தில் இவனுடைய நண்பனைப் பார்த்தான். இருவரும் பேசிக்கொண்டே சாலையோரம் இருந்த பழச்சாறு கடைக்கு சென்றனர். பழச்சாறு அருந்திக்கொண்டே இருவரும் பேச துவங்கினர்.
நண்பன்: இந்த தடவ IPL யாரு win பண்ணுவாங்கன்னு நினைக்கிற?
அவன்: அட போடா! இப்பெல்லாம் cricket’ல batting’அ விட betting அதிகமாயருச்சு!
நண்பன்: சரி… அத விடு! யாருக்கு vote போடப்போற?
அவன்: கட்சிக்கு vote போடப்போறதில்ல! தகுதியான ஆளுக்கு vote போடுவேன்!
நண்பன்: ம்ம்ம்… ஆனா, Congress’க்கு மட்டும் போட்டுறாதடா!
அவன்: அதான் தகுதியானவங்களுக்கு தான் போடுவேன்னு சொன்னேன்ல?!
அவனுடைய பெரிய மீசையில் பழச்சாறு ஒட்டியிருந்ததைக் கவனித்த நண்பன் அவனிடம் கூறினான்.
நண்பன்: டேய்… உன் மீசைல juice ஒட்டிருக்குடா!
அவன்:  ஓ! எங்க? இங்கயா? (என்று கேட்டுக்கொண்டே துடைத்தான்)
துடைக்கும் போது அவனுக்கு ஒரு பக்கம் மீசை மட்டும் மடங்கிவிடுகிறது. நண்பன் அவனை ஒருமாதிரியாக பார்த்து சிரித்தான்.
இளைஞன்: ஏன்டா சிரிக்கிற?
நண்பன்: இல்லடா! உனக்கு மீசை ஒரு பக்கம் மட்டும் முறுக்கியிருக்குடா!
<<<<<<<<<<>>>>>>>>>>
காட்சி – 9
இடம்:    இளைஞனின் வீடு
கதைமாந்தர்கள்: இளைஞன்
அந்த இளைஞன் அவன் வீட்டு அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அருகிலிருந்த அலைப்பேசி அவனை எழுப்ப கூக்குரலிட்டது. அறைகுறையாய் கண்விழித்து அலைப்பேசியைப் பார்த்தான். “இன்று காலை 10 மணிக்கு நேர்முகத்தேர்வு” என்று அது நினைவூட்டியது.
இரவில் கண்ட கனவிலிருந்து இன்னும் மீளமுடியாமல் அரைத்தூக்கத்துடன் பல் விளக்கினான். மீதமிருந்த தூக்கத்தை முகத்தில் தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு அவனுடைய அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் உடற்பயிற்சி மையத்துக்கு சென்றான்.
அவன் பயிற்சியாளருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேசை மேலிருந்த குறிப்பேட்டில் பெயரையும் நேரத்தையும் பதிவு செய்துவிட்டு தனியறைக்குச் சென்று உடையை மாற்றிவிட்டு ஓடு எந்திரத்தில் வந்து ஏறினான்.
இன்னும் எந்த மலையாளியும் அந்த உடற்பயிற்சி மையத்துக்கு வரவில்லை.
<<<<<<<<<<>>>>>>>>>>
பி.கு: கதையோட்டம் புலப்படவில்லை என்றால் இந்த வரிசையில் படிக்கவும் -> காட்சி 9 (இதில் மட்டும் கடைசி வரியைத் தவிர்த்துவிடவும்), 6, 3, 8, 5, 2, 7, 4, 1.  அப்படியும் புரியவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பில்லை. 😉