புதிய பயணம் – 2

Posted on ஜனவரி 14, 2014

6


பொங்கல் போல உங்கள் வாழ்க்கை இனித்திட என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

முந்தய பதிவில் என்னுடைய படைப்பை உருவாக்கி வெளிக்கொண்டு வர நான் செய்தவற்றை எல்லாம் சுருக்கமாக பகிர்ந்திருந்தேன்.

தொழில்நுட்பத் துறையில் தொழில் முனைய துணியும் இளைஞர்களுக்கு இந்தப் பதிவு ஒரு வழிகாட்டியாக இருக்கும் விதமாக எழுதியுள்ளேன். கீழே இருப்பவை அனைத்தும் என் பட்டறிவாலும் கேள்வியறிவாலும் கற்றவை.

தொழில்முனைபவருக்கு தேவையான பண்புகள்:

* அடுத்தவர் நமது படைப்பை குறை கூறினாலும் நிறை கூறினாலும் முழுமையாக அந்தக் கருத்தை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்தக் கருத்தில் தவறு இருப்பதாகத் தோன்றினாலும் அவர் சொல்ல வந்ததை முழுமையாகச் சொன்ன பின்பே நாம் எடுத்துச்சொல்ல வேண்டும்.

* பல நேரங்களில் நாம் திட்டமிட்டது போல் வேலை நடக்காது. மிகுந்த பொறுமை வேண்டும்.

* நன்றாக இன்முகத்துடன் பேசவேண்டும். மற்றவர்களிடம் இருந்து வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும்.

* யாரிடமும் எந்தக் கேள்வியோ உதவியோ கேட்க கூச்சமே படக்கூடாது.

e-lagaan துணையுடன் தனி நிறுவனம் ஒன்றைப் பதிந்தேன். பதிந்த பின், நிறுவனத்துக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதும், PAN மற்றும் TAN வாங்குவதும் எளிது. காப்புரிமை (Patent/copyright) தொடர்பானவைகளுக்கு Inolyst நிறுவனம் உதவியது. பணம் வரவு வரும் வரை நிறுவனம் தொடங்கி நடத்துவதில் உள்ள வழிமுறையில் வேறெதுவும் பெரிய சிக்கல் இல்லை என்றே நினைக்கிறேன்.

திறன்பேசி செயலியை நிறுவனமாக நடத்த தேவையானவை ஒவ்வொன்றைப் பற்றியும் கீழே விரிவாகப் பார்ப்போம்.

முதலீடு:

நம்முடைய சேமிப்பு, குடும்பம் மற்றும் நண்பர்கள் உதவியில் கொஞ்சம் புரட்டலாம். இதற்கடுத்து உதவ முடுக்கிகள் நிறைய இருக்கின்றன. இந்த முடுக்கிகள் (accelerators) பெரும்பாலும் வேலை செய்ய இடம் கொடுத்து, நிறுவனம் நடத்த பணம் கொடுத்து, முதலீட்டாளர்கள் இணைப்பைக் கொடுத்து, தொழில்நுட்ப ஐயங்களைப் போக்கி, ஊடகம் மூலமாக செயலியை விளம்பரப்படுத்தி பரப்ப உதவி செய்யும். பதிலுக்கு நிறுவனத்தில் ஒரு பங்கை முடுக்கிக்கு கொடுக்கவேண்டியிருக்கும். ‘Startup Chile’ போன்ற சில முடுக்கிகள் பணமோ பங்கோ எதிர்பார்க்காமல் இது போன்ற உதவிகளைச் செய்யும். முடுக்கிகளும், சேமித்த பணமும் ஒரு படைப்பை உருவாக்கும் வரை மட்டுமே துணை நிற்கும். நிறுவனம் வளர்ச்சி பெற முதலீட்டாளர்களை (venture capitalists) அணுக வேண்டியிருக்கும்.

அணி:

முடிந்த அளவு நன்றாக தெரிந்த வட்டத்துக்குள் இருந்தே திறமையான ஆட்களைத் தேர்ந்தெடுத்து அணியில் வைப்பது நல்லது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் ஆட்கள் எண்ணிக்கை அளவைக் கூட்ட வேண்டும். அப்படி அமையாத பொழுது சில சிறிய வேலைகளை அயலாக்கம் (outsourcing) செய்யலாம். நான் செயலி உருவாக்கத்துக்கும் வடிவமைப்பு உதவிக்கும் Queppelin நிறுவனத்திடம் வேலையை ஒப்படைத்தேன். பரிசோதனைக்கு Moolya நிறுவனம் எனக்கு இலவசமாக உதவியது. ஒரு தேர்ந்த பட்டறிவு மிகுந்த அறிவுரைஞர் துணை தேவை. எனக்கு என் அண்ணனே அறிவுரைஞராக அமைந்ததால் வேலை எளிமையாகி விட்டது.

படைப்பு:

வேறொரு செயலி தீர்க்கும் சிக்கலையே நமது செயலி தீர்ப்பதாக இருந்தாலும் நமது செயலியில் ஏதாவது ஒன்று தனித்துவமாக இருக்க வேண்டும். பயனாளகர்கள் நமது படைப்பைப் பயன்படுத்த ஒரு நல்ல காரணம் இருக்கவேண்டும். ஒரு படைப்புக்கு நல்ல வடிவமைப்பு மிகவும் அவசியம். உருவாக்கத்துக்கு பின்பு தரத்தை உறுதி செய்ய வலுவான பரிசோதனைகள் அவசியம். அது எனக்கு Moolya மூலம் இலவசமாக கிடைத்தது.

திட்டம்:

தொடக்க நிலை நிறுவனத்தில் வெற்றிக்கான விழுக்காடு 10% மட்டுமே. எனவே, நமது ஒவ்வொரு திட்டமும் நடக்காமல் போக நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே எப்பொழுதும் நான்கைந்து மாற்றுத்திட்டங்களுடன் தான் எந்தத் திட்டமும் உருவாக்க வேண்டும். முடிந்தவரை எல்லாவற்றையும் செலவில்லாமல் செய்ய ஒரு வழி இருக்கும். அதைத் தேடி பிடிக்க வேண்டும். Softlayer catalyst program மூலமாக எனக்கு பல வசதிகளுடன் கூடிய வழங்கி (server and cloud hosting) ஒன்று ஓராண்டுக்கு இலவசமாக கிடைத்தது.

சாற்றுதல்:

எவ்வளவுதான் திறமையாக ஒரு படைப்பை உருவாக்கினாலும் அதன் வெற்றியைத் தீர்மானிப்பது சாற்றுதல் (marketing) தான். பிணையம் மூலம் விளம்பரம் படுத்துதல் (Social media marketing) தான் முதல் படி. Android செயலிக்கு விளம்பரம் செய்ய இந்தப் பதிவு உதவியாய் இருக்கும். படைப்பை நிறைய இடங்களில் கொண்டு சேர்க்க ஒரு நல்ல விளக்கப்படம் தேவை. நான் Bode animation உதவியில் இந்த விளக்கப்படத்தை உருவாக்கினேன்.

என்னுடைய இந்தத் தொழில் முனைப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே போல் இந்தப் பதிவும் இன்னும் தொடரலாம்! 🙂