புதிய பயணம்

Posted on ஒக்ரோபர் 11, 2013

27


 நான் கல்லூரி படிப்பு முடித்து ஓர் ஆண்டு வேலை முடிக்கும் வரை நான் குறும்படம் எடுப்பேன் என்றோ, ஒரு நிறுவனம் தொடங்குவேன் என்றோ நினைத்ததேயில்லை. நானும் வழக்கம் போல பொறியியல் படிப்பை முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து திங்கள்தோறும் ஊதியம் பெற்று களிப்படைந்து கொண்டிருந்தேன். வேலை போக மீதமுள்ள நேரத்தில் பொழுதைப் போக்குவதற்காக மட்டுமே இங்கு பதிவுகள் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் பதிவுகளைப் படிக்கும் மிகச் சிலரில் ஒருவனான என் நண்பன் சரவணராம்குமார் என் கதைகளைக் குறும்படமாக எடுக்க முயற்சி செய்யலாம் என்று ஆலோசனை கூறினான் (அப்போது இணையத்தில் மிகச் சில குறும்படங்களே வெளியாகியிருந்தன!). ஆனால், குறும்படம் எடுப்பதற்கான வழிமுறைகள் எதுவும் எனக்கு தெரியாத கரணியத்தால் வேண்டாமென்று அப்போது விட்டுவிட்டேன்.

 

நிகழ்படத்தொகுப்பை அவனே பார்த்துகொள்வதாகவும், இசைக்கு அவன் நண்பன் உதவுவான் என்றும் மீண்டும் சரவணராம்குமார் கூறினான். என்னுடைய வேலை கதை எழுதுவது மட்டும் தான் என்பது போல் தோன்றியதும், என்னிடமிருந்த ஒரு நிகழ்ப்படக்கருவியைப் பயன்படுத்தி படமெடுத்துவிடலாம் என்று தோன்றியது! நண்பர்களை மட்டுமே வைத்து நகைச்சுவையாக குறும்படம் எடுக்க முயற்சி செய்து பெங்களூர் குறும்படத்தை ஒருவழியாக எடுத்துமுடித்தோம். வெறும் கதை மட்டுமே எழுதப்போவதாக ஆரம்பித்து நிகழ்ப்படத் தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு என்று எல்லாவற்றையுமே ஓரளவு கற்றுவிட்டேன். ஒரு குறும்படத்தை முழுமையாக எடுப்பது கடினமாயிருந்தாலும், ‘பெங்களூர்’ குறும்படம் பெற்ற வெற்றி என்னை மீண்டும் குறும்படம் எடுக்கத் தூண்டியது!

 

அப்படி உருவானது தான் உடன்பிறப்புகளே குறும்படம். இந்தப் படத்தை இயக்கும் போது தான் நிகழ்ப்படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என்று எல்லாவற்றையுமே நன்றாக கற்றுவிட்டேன். நிகழ்ப்படங்களை தொகுப்பது கடினமானது மற்றுமல்ல; அதற்கு நிறைய பொறுமையும் தேவைப்படும். என்னுடைய பொறியியல் அறிவைப் பயன்படுத்தி இதற்கு தீர்வு காணலாம் என்று சிந்தித்தேன்.  நிகழ்ப்படங்களில் தேவையில்லாத பகுதிகளை தானாகவே கண்டறிந்து நீக்கும்படியான ஒரு மென்பொருள் உருவாக்க தொடங்கினேன். அதற்கு நான் வைத்த பெயர் – Crispify.

 

 கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய படிமுறையை (Algorithm) மேம்படுத்தினேன். ஓரளவு நான் எதிர்பார்த்த வெளியீடு வந்துவிட்டது. நிகழ்ப்படத்தின் வேகம் கூடியதோடு, அதன் கோப்பு அளவு குறைந்ததையும் கவனித்தேன். இது திறன்பேசி மூலம் நிகழ்ப்படங்களைப் பகிர ஏற்ற செயலியாக இருக்கும் என்று தோன்றியது. அவ்வளவு தான் – அடுத்த நாள் என் அலுவலக பணியில் இருந்து விடைபெற்றேன்!

 

Crispify Android App

 

துணிச்சலை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு நிறுவனம் தொடங்கிவிட்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் என் முயற்சியை நன்றாக புரிந்துக்கொண்டு எல்லாவகையிலும் என்னை ஊக்கப்படுத்தினர். பிறகு ‘Startup Chile’ என்னும் தொடக்கநிலை நிறுவன முடுக்கி (Startup accelerator) ஒன்றுக்கு விண்ணப்பித்தேன். அதில் கிடைத்த வெற்றி என்னை அன்புடன் சிலி நாட்டுக்கு வரவேற்றது. 6 திங்கள் சிலியில் தங்கியிருந்து வேலை பார்த்தேன். தவறான முடிவுகள் எடுத்தேன். தோல்விகள் அடைந்தேன். வருந்தினேன். திருந்தினேன். என்னை நானே ஊக்கப்படுதினேன். என்னால் முடியும் என்று நம்பினேன். ஒருவழியாக என் நம்பிக்கைக்கு இப்பொழுது பதில் கிடைத்துவிட்டது.

 

 ஆம், நான் மட்டுமே என் கனவில் பார்த்துக்கொண்டிருந்த ஆண்டிராயிடு செயலி இப்பொழுது சந்தையில் வந்துவிட்டது! இதைத் தரவிறாக்கி பயன்படுத்தி எனக்கு கருத்து தெரிவியுங்கள்.

 

                                                                        படம் 

 

ஒருவரின் உழைப்பால் இது தொடங்கப்பட்டிருந்தாலும் என் நண்பர்கள் பலரின் பங்கு இதில் அடங்கியுள்ளது. Crispify’க்காக எனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் இங்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஒரு செயலியை நம்பி நிறுவனம் தொடங்கலாம் என்று எண்ணுபவர்களுக்கு என் அனுபவங்களில் நான் கற்றவற்றை என் அடுத்த பதிவில் பகிர்வேன்.