கானல்நீர்

Posted on ஜூன் 13, 2013

14


அறிவிப்பு:
எறுழ்வலி பதிவைத் தொடங்கி இன்றோடு (சூன் 13) சரியாக 4 ஆண்டுகள் நிறைவடைகின்றது. உங்களைப் போன்ற நண்பர்களின் தொடரூக்கத்தில் என் எழுத்துப் பயணம் இனிதே தொடர்கிறது. நன்றி நண்பர்களே.

முன்கதை:
3 அகவை நிரம்பிய சிறுவன் தூங்குவதற்காக நான் சொல்லியக் கதையில் ஒன்றை இன்று இங்கே எழுதுகிறேன். இந்தச் சிறு(வர்) கதை, சிறுவர்களுக்கு கற்பனையைத் தூண்டும் வகையில் அமைத்திருந்தேன். ஆனால் இது கதை சொல்லும் பெரியவர்களுக்கு சில கருத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. “கதை… நல்லது!”

கதை:
அடர்ந்தக் காட்டுக்குள் அந்த எறும்பு தன்னை விட எடைமிகுந்த உணவுப்பொருளைச் சுமந்துகொண்டு வரிசையில் சென்றுகொண்டிருந்தது. அருகில் வந்த நண்பன் எறும்பிடம், “நாம இப்படி எறும்பா பிறந்து துன்பப்படுறோமே?! இத்துனூண்டு பூச்சிய தூக்கிக் கொண்டு போய் புத்துக்குள்ள வைக்கிறதுக்கு கூட நம்ம உடம்புல தெம்பில்ல. யானையெல்லாம் அவ்ளோ பெரிய மரத்தையும் எளிதா உடைச்சிருது.” என்று அலுத்துக்கொண்டது. நண்பன் எறும்பு பதில் ஏதும் சொல்லாமல் அந்த எறும்பின் புலம்பல்களைக் கேட்டுக்கொண்டே வந்தது. ஒருவழியாக புற்றில் அன்றைக்கான தின்பண்டங்களைச் சேமித்து வைத்தப்பின் அந்த எறும்பு உறங்கச் சென்றது.

மறுநாள் காலை பகலவன் தன் ஒளியை அந்தக் காட்டுக்குள் பரப்பினான். அடுத்தநாள் வந்ததை உணர்ந்து இந்த எறும்பும் விழித்தெழுந்தது. எழுந்ததும் தனக்கு முன்னே ஒரு கருநாகம் இருப்பதைப் பார்த்து பயந்து போனது. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாய் ஓட முயற்சி செய்தாலும் அந்தக் கருநாகம் கூடவே வந்தது. திடீரென்று அந்த எறும்புக்கு ஒரு ஐயம் வந்து அந்த இடத்திலே நின்றுவிட்டது. “எப்போதும் தன் பார்வை தரையில் தான் இருக்கும், இன்று ஏன் உயரத்தில் இருக்கிறது?” என்று சிந்தித்தது. நன்றாகப் பார்க்கையில் அது கருநாகம் அல்ல, தும்பிக்கை என்று புரிந்தது. அதை வளைத்து தன் முகத்தைத் தொட்டுப் பார்த்தது, பெரிய தந்தங்களும் இருந்தன. அப்போது தான் அந்த எறும்பு யானையாக மாறியிருந்ததை உணர்ந்தது.

“இனி எனக்கு எந்தத் துன்பமும் இல்லை. என்னைவிட வலிமை மிக்கவர் இந்தக் காட்டில் எவரும் இல்லை.” என்று நினைத்து மகிழ்ந்து கொண்டிருந்தது அந்த யானை. ஒரு பெரிய மரத்தை தனது தும்பிக்கையால் வளைத்து ஒடித்தது. வழியில் வந்த சின்ன விலங்குகள் எல்லாம் அந்த யானையைப் பார்த்து பயந்து ஓடின. தன் உடல்திறனை சோதித்து மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தத யானை நாற்பதடி தொலைவில் ஒரு புலி வருவதைப் பார்த்தது. அந்தப் புலியும் இந்த யானையைத் துரத்தியது. மிகுந்த எடை கொண்டதால் இந்த யானையால் முன்பு போல் வேகமாக ஓட முடியவில்லை. நல்லவேளையாக ஒரு மான் ஒன்று குறுக்கே வந்ததால், புலியின் கண்களில் இருந்து அந்த யானை தப்பியது.

காற்று மிகவேகமாக தும்பிக்கைக்கு உள்ளே சென்று வெளியே வந்துகொண்டிருந்தது. மரணத்தை மிக அருகில் பார்த்த யானை, “காட்டில் புலியாக இருக்க வேண்டும். புலிதான் அனைத்தையும் வேட்டையாடும். புலியை யாராலையும் வெல்ல முடியாது.” என்று நினைத்து கொண்டது. எறும்பாய் இருந்த போது இருந்த இல்லம் இல்லை. கூட்டம் கூட்டமாக இருந்த நண்பர்கள் இல்லை. எறும்பாய் இருந்தபோதும் புலியைப் பார்த்து என்றும் பயந்ததில்லை. யானையாக மாறியது தவறோ என்பது போன்ற எண்ணங்கள் அதன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. பயத்துடனே இரவில் உறங்கியது யானை.

மறுநாள் விடிந்தது. எழுந்து பார்த்தால் மிக அருகில் ஒரு புலி நின்று கொண்டிருந்தது. ஆனால், யானைக்கு ஒரு குழப்பம். புலியின் உயரத்திலேயே தானும் இருப்பது போல் தோன்றியது. அந்தப் புலி தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்த யானைக்கு இன்னும் குழப்பம் கூடியது. குரலெழுப்பி பார்த்தது; வந்தது புலியின் குரல். எதிரிலிருந்த புலி, “வாடா நண்பா! வேட்டையாட போகலாம்.” என்று அழைத்தது. புலியாக மாறிய யானைக்கு மிகுந்த மகிழ்ச்சி. புதிய நண்பனுடன் வேட்டைக்கு புறப்பட்டது புலி.

இரை தேடி சென்றுகொண்டிருக்கையில் படாரென்று ஒரு ஒலி கேட்டது. உடனே, தன்னுடன் வந்த நண்பன் புலி கீழே விழுந்தது. அருகில் சென்று பார்த்தால் நண்பன் தலையிலிருந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது. அந்தப் புலி இறந்துவிட்டது என்பதை அறிந்த இந்தப் புலி பயத்தில் நடுங்கியது. எது எங்கிருந்து தாக்குகிறது என்று அறியாமல் ஒரு திசையில் ஓடியது. ஓடும்போது தொடர்ந்து படார் படாரென்று புலிக்கு மிக அருகில் ஒலி கேட்டது. ஓரிடத்தில் ஒளிந்திருந்து எங்கிருந்து இந்த ஒலியுடன் தாக்கும் குண்டு வருகிறதென்று பார்த்தது. தொலைவில் நான்கைந்து மாந்தர்கள் தொலைநோக்கிகளுடனும் சுடுங்கருவிகளுடனும் தேடிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, சுட்டுப்போட்டிருந்த நண்பன் புலியை வந்த வண்டியில் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்றனர் அந்த மாந்தர்கள்.

“உடலில் எவ்வளவு வலிமை இருந்தாலும், மூளையின் வலிமையை நெருங்கமுடியாது. மாந்தர்கள் நினைத்தால் எதுவும் செய்யலாம். பிறவி எடுத்தால் மாந்தனாக பிறக்க வேண்டும்.” என்று அந்தப் புலி எண்ணிக்கொண்டது. எங்கு போனாலும் தன் வாழ்வில் துன்பம் தொடர்ந்து வருகிறதே என்று நினைத்து வருந்திக்கொண்டது. “ஒருவேளை எல்லோருக்கும் ஏதாவது ஒரு துன்பம் இருந்துகொண்டே தான் இருக்குமா? எந்த பிறப்பெடுத்தாலும் வாழ்வில் போராட்டம் இருக்குமா?” என்ற குழப்பமும் வந்தது. ஞாயிறு ஞாலத்தின் மறுபக்கம் சென்றதால் இந்தக் காட்டை இருள் சூழ்ந்தது. வேண்டாத தூக்கம் புலியின் கண்களை மூடியது.

ஞாலம் ஒரு சுற்று முடித்ததும் ஞாயிறு மீண்டும் இந்தப் பக்கம் வந்தது; விடிந்தது. புலி கண்களைத் திறந்து பார்த்தது. எதிரே கணினித்திரையில் ‘எறுழ்வலி’ பதிவு.