உண்மைக்கதை

Posted on பிப்ரவரி 25, 2013

34


முன்குறிப்பு: இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே.

“என்னடா? எதோ முக்கியமான விசயம்னு வரச்சொன்ன? என்ன?” என்று என் நண்பன் என்னிடம் கேட்டான்.
“மச்சி… ஒரு படத்துக்கு நான் கதை எழுதப்போறேன்டா… உறுதியாயிருச்சு… அதான் உன்கிட்ட சொல்லலாம்னு…” என்று இழுத்தபடியே நான் சொன்னேன்.
“கலக்குறடா… என்ன காதல் கதையா?”
“இல்லடா… திகில் கதை…”
“ஓ! உன் கதைய நான் இப்பவே கேக்கலாமா?!”
“கண்டிப்பா… ஆனா இப்போதைக்கு வேற யார்கிட்டயும் சொல்லாத… நான் படத்துக்கு கதை எழுதுற விசயம் கூட நம்ம நண்பர்களுக்கு தெரியவேணாம்! சரியா?”
“சரிடா… நீ கதைய சொல்லு…”
“ஒரு கதாசிரியன் கதைல எழுதுறதெல்லாம் அவன் நண்பன் வாழ்க்கைல உண்மையா நடக்குது… இது தான் oneliner”
“நமக்கு onelinerலாம் பத்தாது… வா… Barல treat கொடுத்துட்டே கதையச் சொல்லு…”

ஒரு மதுபானக்கடைக்குச் சென்றோம். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது. எனவே என் நண்பன் மட்டும் ஒரே நேரத்தில் என் கதையில் இருக்கும் சரக்கையும், மதுவில் இருக்கும் சரக்கையும் ஒன்றாக எடுத்துக் கொண்டிருந்தான்.

“என்னடா? இப்ப கதை சொன்னா புரியுமா?” என்றேன் நான், சற்றே மிகையான போதையிலிருந்த என் நண்பனிடம்!
“பெரிய கமல் இவரு… சொல்றா… போதைல தான்டா நான் தெளிவா இருப்பேன்!” என்றான் என் நண்பன்.

“கதாசிரியர் ஒரு கதை எழுதியிருக்குறதா அவன் நன்பன கூப்பிடுறான். ஒரு திகில் கதைய அவன் நண்பன்ட்ட சொல்றான். இதென்னடா திகில் கதைன்னு கேலி செஞ்சுட்டு அவன் நண்பன் car-அ எடுத்துட்டு அவன் வீட்டுக்கு கிளம்புறான்… பாத்தா வழில ஒரு பொண்ணுமேல வண்டிய ஏத்திர்றான்.”
“விபத்தா?”
“மொதல்ல அவனும் அப்படித்தான் நினைக்கிறான். ஆனா, பின்னாடி நினைச்சு பாக்கும் போது நடக்குறது எல்லாமே அந்த கதையாசிரியன் சொன்ன கதை மாதிரி இருக்குன்னு அவனுக்கு புரியுது. இந்த நேரத்துல அவன் ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிறான். முழுக்கதைய கேக்காதனால அவனுக்கு அடுத்தது என்னன்னு தெரியல. வேற வழியில்லாம கதையாசிரியர் எழுதுன கதைய கேக்க முடிவு பண்ணி கதையாசிரியர் cellphone’க்கு call பண்றான். அப்பத்தான் climax!”

“அது சரி… எதோ திகில் கதை சொல்றேன்னு சொன்னியே… அதச் சொல்லு…”
“ம்ம்ம்… கதைக்கு வெளில இருந்து பாத்தா திகில் தெரியாது. கதைக்குள்ள இருந்து பாத்தா தான் அது புரியும்…”
“சரி விடு… கதை ஏதோ Hollywood copy மாதிரி இருக்கு! அது எதுன்னு கண்டுபிடிக்கிறதுக்காகவே எல்லாரும் பார்த்து hit ஆக்கிடுவாய்ங்க! வாழ்த்துக்கள் டா.”
“என்னடா… கத உனக்கு பிடிக்கலையா?”
“பிடிக்கலைன்னு சொல்லலடா… பிடிக்கிற மாதிரி இல்லையேன்னு தான் சொன்னேன்… சரிடா… நான் கெளம்புறேன்!”
“ம்ம்ம்… late night ஆயிருச்சு! நீ வேற சரக்குல இருக்க. car ஓட்ட முடியுமாடா, இல்லைன்னா நான் வந்து drop பண்ணட்டுமா?”
“டே! License வாங்குறதுக்கு எட்டு போட்டப்பவே நான் சரக்குல தான்டா இருந்தேன். இதெல்லாம் எனக்கு சர்வசாதாரணம்டா!” என்று சொல்லிவிட்டு என் நண்பன் வண்டி எடுத்து கிளம்பிவிட்டான்.

என் நண்பன் யாருமற்ற சாலையில் வேகமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஒரு பெண் குறுக்கே வந்து விழுந்தாள். வேகத்தை நிறுத்த எவ்வளவோ முயன்றும் என் நண்பன் அவள் மேல் இடித்துவிட்டான். வண்டியை உடனே நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்று பார்த்தான். அவளுக்கு இன்னும் மூச்சு இருந்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று சுற்றி தேடிக் கொண்டிருந்தான். சாலையில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தான்.அப்பொழுது ஒரு நான்கு பேர் சாலையோர மரங்கள் பின்னே மறைவாக இருந்துகொண்டு இதைப் பார்ப்பதை கவனித்தான். முழுப் போதையும் இறங்கி பயம் தொற்றிக்கொண்டது. இங்கிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்று எண்ணிய அவன் வேகமாக அவன் வண்டியை நோக்கி ஓடினான். நான்கு உருளியிலும் காற்று இறங்கியிருந்தது. அந்தப் பெண்ணையும் காணவில்லை!

என்ன செய்யவென்று தெரியாமல் திகைத்த அவன் அலைபேசியை எடுத்தான். அவன் தந்தைக்கு அழைக்க முற்பட்ட நேரத்தில் அவன் முதுகு பின்னால் ஒருவர் கத்தி வைத்திருப்பதை உணர்ந்து மெதுவாக திரும்பினான். நான்கு பேர் கையில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தின் தலைவன் இவனிடம் பேச ஆரம்பித்தான்!

“என்னடா… அந்தப் பொண்ணு உயிரை காப்பாத்தாம இங்க இருந்து போக மாட்ட போல?”
“அண்ணே… அந்தப் பொண்ணு யாருனே எனக்கு தெரியாது! நீங்க அவள என்ன வேணும்னாலும் பண்ணுங்க. என்னை விட்ருங்கண்ணே” என்று கெஞ்சினான் என் நண்பன்.
“அப்பறம் ஊருக்குள்ள போயி நாங்க தான் அவள கொன்னோம்னு போட்டுக்கொடுப்ப? அதான?”
“அண்ணே… அண்ணே… சத்தியமா இல்லைன்னே… யார்கிட்டயும் சொல்ல மாட்டேண்ணே.”

அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் தலைவன் காதில் ஏதோ சொன்னான். உடனே தலைவன் என் நண்பனிடம் இருந்து பணப்பையை வாங்கினான். நான்கு பேரும் அவன் யாரென்று தெரிந்து கொள்ள அவன் அடையாளங்களை சோதித்துக் கொண்டிருந்தனர். அதில் என் நண்பனுடைய தந்தை ஒரு காவலாளர் என்பதை உறுதி செய்துகொண்டனர். நிமிர்ந்து பார்க்கையில் அந்த இடத்திலிருந்து என் நண்பன் தப்பித்திருந்தான்.

“டே… பு**கிட்டா இருந்தீங்க… தப்பிக்க விட்டுட்டீங்களேடா…”
“தலைவா… அவன் எங்கையும் தப்பிக்க முடியாது. அவன இப்பையே கண்டுபிடிச்சு முடிக்கிறோம்!”
“சரி… துப்பாக்கிய எடுத்துக்கோங்க! 4 பேரும் 4 பக்கமும் போய் தேடுவோம். எங்க பாத்தாலும் சுட்டு கொன்றுங்கடா!”

நீண்ட தொலைவு ஓடி தப்பிக்க முடியாது என்று தெரிந்த என் நண்பன் ஒரு நல்ல மறைவான இடத்தில் இருந்துகொண்டு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். போதை குறைந்ததால் மூளை வேலை பார்க்கத் தொடங்கியது. நான் சொன்ன கதையும் அவனுக்கு நடக்கும் நிகழ்வுகளும் ஒத்துப்போவது போலிருந்தது. அந்த நேரத்தில் அந்தக் கூட்டத்திலிருக்கும் ஒருவன் இவன் இருக்கும் இடத்தை நெருங்கி தேடிக்கொண்டிருந்தான். கதையின் முடிவைத் தெரிந்துகொள்ள என் நண்பன் என்னை அலைபேசியில் அழைத்தான்.

நான்: அலோ… என்னடா வீட்டுக்கு வந்துட்டியா…
அவன் (மிகவும் அமைதியாய்): டே… நீ சொன்ன கதையோட முடிவு என்னடா?
நான் (சிரித்துக் கொண்டே): என்னடா பயந்து போயிருக்க மாதிரி பேசுற? போதை தெளிஞ்சதும் தான் கதையோட திகில் தெரிஞ்சதா?
அவன் (கோபமாக): டே… முடிவச் சொல்லுடா!
நான்: சரி.. சரி… கோவப்படாத! இந்தக் கதைக்கு நான் ரெண்டு முடிவு எழுதியிருக்கேன்டா! எது நல்லாருக்குன்னு நீயே சொல்லு!

என் நண்பனின் இதையத்துடிப்பு வெளியே கேட்கும் அளவுக்கு ஏறியது. வியர்வைத்துளிகளும் கண்ணீரும் அவன் உடம்பு முழுதும் ஊர்ந்துக் கொண்டிருந்தது. குரல் சரியாக வரவில்லை.

அவன் (மூச்சுத் திணறலுடன்): டே… ரெண்டு முடிவையும் சொல்லுடா…
நான்: சரிடா… பதட்டப்படாத! முதல் முடிவு படி அந்த நண்பன் “அடுத்து என்ன நடக்கும்?”னு தெரியாம அந்த கதாசிரியருக்கு call பண்றான். அப்ப அவர் எழுதிவச்சிருக்க முடிவுல ஒண்ண சொல்லிக்கிட்டிருக்கும் போதே அவன சுட்டுக் கொன்னுர்றாங்க.
அவன் (மிகுந்த படபடப்புடன்): டே… அப்ப ரெண்டாவது முடிவு என்னடா?!

{துப்பாக்கி குண்டு வெடிக்கும் ஒலி}