தமிழ் இலக்கணம் – 2

Posted on திசெம்பர் 31, 2012

37


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கிரந்தம் என்றால் என்ன?

வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்துமுறையே கிரந்தம் ஆகும். இந்தக் கிரந்தம் தமிழ் மொழிக்குள் புகுந்து, பிறகு இலக்கியங்களுள்ளும் புகுந்து ‘மணிப்பிரவாளம்’ உருவானது. இதுவே தமிழிலிருந்து மலையாளம் என்ற ஒரு தனி மொழி உருவாகக் காரணமாய் அமைந்தது. ‘தனித்தமிழ் இயக்கம்’ தோன்றிய பின் கிரந்தம் கலப்பு ஓரளவு குறைந்தாலும் ‘ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ’ போன்ற கிரந்த எழுத்துக்கள் இன்றும் தமிழோடு கலந்து எழுதப்படுகின்றன.

தமிழ் அல்லாத கிரந்த எழுத்துக்களான இவைகளை(‘ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ, ஸ்ரீ’) நாம் ஏன் & எப்படி தவிர்க்கவேண்டும் என்று விளக்குவதே இந்தப் பதிவின் நோக்கம்.

விக்கிப்பீடியாவில் கிரந்தம் பற்றிய விளக்கம்

——————————————————————————————
தமிழில் ஏன் கிரந்தம் தவிர்க்க வேண்டும்?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் என்று படித்தது நினைவிருக்கிறதா? உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துக்கள் 18, உயிர்மெய்யெழுத்துக்கள் 12×18 = 216 மற்றும் சார்பெழுத்தான ஆய்த எழுத்து ஒன்றின் கூட்டுத்தொகையே 247. இதில் கிரந்த எழுத்துக்களைச் சேர்கவில்லை.

கீழேயுள்ள சொற்றொடரைப் படித்து பாருங்கள். ஏன் கிரந்தம் தவிர்க்கவேண்டும் என்று உங்களுக்கே புரியும்.

“fரெண்ட்sக்குள்ள இதெல்லாம் jஆலி தானடா!”

ஆம், தமிழல்லாலாத எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களோடு சேர்த்தால் வாசிப்பதற்கு எவ்வளவு கடினமாக இருக்கிறது. நாம் ஆரம்பத்திலிருந்தே தமிழ் அல்லாத கிரந்த எழுத்துக்களை தமிழோடு சேர்த்து பார்த்து பழகிவிட்டதால் தான் இந்த உண்மை நமக்கு விளங்கவில்லை. “அதான் பழகிவிட்டோமே? ஏன் மறுபடியும் மாற்ற வேண்டும்?” என்பது தானே உங்களின் அடுத்த கேள்வி? ‘மொழியரசியல்’ தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்காமல் தவிர்க்கலாம் என்றிருக்கிறேன்.

“வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே”
என்று தொல்காப்பியர் கூறியதைக் கொஞ்சாமாவது நினைவில் வைப்போம்.

இந்தப் பதிவும் இதை அறிவுறுத்துகிறது.

அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.

——————————————————————————————
கிரந்தத்தை எப்படி தவிர்க்கலாம்?

கிரந்தம் தவிர்ப்பதற்கு எளிய வழி கிரந்த எழுத்துக்கள் உள்ள சொற்களைத் தவிர்த்தல். ‘கிரந்த எழுத்துக்கள்’ கொண்ட எல்லாச் சொல்லும் வடமொழிச் சொல் தான். எனவே, அவற்றைப் பயன்படுத்துவதற்கு மாறாக அவற்றுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது.

வடமொழிச் சொற்களை தவிர்த்தாலும் சில இடுகுறிப்பெயர்களை எழுதும் போது கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுத வேண்டி வரும். சிலர் “சொற்களை மொழிபெயர்க்கலாம்/ஒலிபெயர்க்கலாம், பெயர்களை ஒலிபெயர்க்கலாமா?” என்று புதுமையான கேள்வி எழுப்புகின்றனர் (அதுவும், அந்தச் சிலரில் சிலருக்கு ஒலிபெயர்ப்புக்கும்(கிரந்தம் தவிர்), மொழிபெயர்ப்புக்கும்(தனித்தமிழ்) வேறுபாடு தெரிவதில்லை).

கிரந்தத்தின் துணையோடு எழுதினாலும் ‘Fyaz’ என்ற பெயரை எப்படி எழுதுவது? ஃபையாஸ்? இது அதே உச்சரிப்பையா தருகிறது? இல்லையே. பின்பு ஏன் கிரந்தம் தவிர்ப்பதால் உச்சரிப்பு சிறிது மாறுவதைப் பெரிதாக்க வேண்டும்? ‘ஃபையாஸ்’ என்று எழுதுவதற்கு பதிலாக ‘பையாசு’ என்று எழுதினால் குறைந்தது தமிழாவது பாதுகாக்கப்படும்.

நிகரெழுத்துப் பட்டியல்:

ஜ – ய/ச (சொல் முதலில்), ச (மற்ற இடங்களில்)
ஹ – அ (சொல் முதலில்), க (மற்ற இடங்களில்)
ஸ – ச (எங்கு வந்தாலும்)
ஷ – ச (சொல் முதலில்?), ட (மற்ற இடங்களில்)
க்ஷ – ச/ட
ஸ்ரீ – சிறீ/சீ
ஸ்,ஷ் – சு

ஒருவர் தன் பெயர் ‘ஜானி’ என்பதால் கிரந்தம் தவிர்க்க முடியாது என்று துவிட்டரில் தன் ஆதங்கத்தைக் காட்டினார். ‘ஜானி’ என்பதில் கிரந்தம் தவிர்த்தால் ‘சாணி’ கிடையாது; ‘யானி’. அரைகுறையாக தெரிந்துகொண்டு கிரந்தம் தவிர்ப்பவர்களைக் குற்றம் சொல்பவர்கள் நிறைய பேரை நான் துவிட்டரில் பார்த்திருக்கிறேன். அதேபோல ஒருவர் ‘ஹரிஹரன்’ என்பதற்கு கிரந்தம் தவிர்த்தால் ‘கரிகரன்’ என்று வருகிறது கிண்டலடித்தார். ஆனால், அது ‘கரிகரன்’ அல்ல; ‘அரிகரன்’. இது தொடக்கத்தில் குழப்பமாக இருக்கலாம். இதைக் குழப்பாமல் புரிந்து கொள்வதற்கு முடிந்தவரை இந்தப் பதிவு உதவியாய் இருக்கும்.

தமிழில் ஒவ்வொரு வல்லெழுத்தும் சொல்லின் தொடக்கத்தில் வெடிப்பொலியாகவும், இடையில்(வல்லின மெய் அருகில் வராதவரை) உரசொலியாகவும் வரும். அதாவது ‘கண்’ என்ற சொல்லில் ‘க’ – ‘Ka'(வெடிப்பொலி) என்று உச்சரிக்கப்படும். ‘பகல்’ என்ற சொல்லில் அதே ‘க’ – ‘ha'(உரசொலி) என்று உச்சரிக்கப்படும். ‘சுமை’ என்ற சொல்லில் ‘சு’ – ‘Chu’ என்று உச்சரிக்கப்படும். ‘பசுமை’ என்ற சொல்லில் ‘சு’ – ‘su’ என்று உச்சரிக்கப்படும். அதாவது தமிழ் மொழியிலேயே ‘ஹ'(ha) ஒலியும், ‘ஸ'(sa) ஒலியும் இருக்கிறது. ஆனால், அவைகளுக்கு தனித்தனி எழுத்தல்ல. ‘ja’, ‘ga’, ‘ba’, ‘fa’ போன்றவை எல்லாம் ‘அதிரொலி’. தமிழில் ‘ஞ்ச'(n’ja), ‘ஃக'(ga), ‘ஃப'(ba), ‘ஃவ'(fa) ஒலிகள் இருந்தாலும் இலக்கணப்படி அவை சொல் முதலில் வர முடியாது. இந்த ஒலிகள் ஆங்கிலச் சொற்களில் வருவதால் இதையும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். தமிழ் மொழியில் ஒலிகளுக்கு குறைவில்லை என்பதைச் சொல்வதற்காகத் தான் இந்தத் தகவல்களைச் சொல்கிறேன்.

——————————————————————————————
கிரந்தம் தவிர்த்து பழக சில எடுத்துக்காட்டுகள்:

* ஜானி – யானி (மாற்றி சிந்தி!)
* ஸ்டாலின் – இசுடாலின் (‘இ’ போடவில்லை என்றால் ‘Chudaalin’ என்று ஆகிவிடும்!)
* குஷ்பு – குசுபு (இது கிண்டல் செய்வதற்காக அல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ள பக்குவம் வேண்டும்.)
* ஃபிரண்ட்ஸ் – பிரண்டுசு/விரண்டுசு(தேவையா? ‘நண்பர்கள்’ என்று எழுதலாம்!)
* ஃபிசிக்ஸ் – பிசிக்குசு (ஒன்றுமே மாற்றாமல் ‘pool’ என்ற ஆங்கிலச்சொல்லை தமிழில் எழுதினாலும் மோசமாகத் தான் ஒலிக்கும்!)

கிரந்த எழுத்துக்கள் வராவிட்டாலும் சில சொற்களுக்கு தமிழ் ஒலிப்புக்கு ஏற்றவாறு எழுத வேண்டிவரும்:
* ருவா – உருவா/ஓவா
* லத்திகா – இலத்திகா
* டபாங் – இடபாங்கு
* ட்விட்டர் – துவிட்டர்
* டீ – தேநீர் (‘தீ’ என்று எழுதமுடியாதல்லவா? :))
* டாட்டா – தாட்டா
* க்வாட்டர் – குவாட்டர்
* க்ரைம் – கிரைம்
இந்தச் சிக்கலுக்கு தனியாக இன்னொரு பதிவு தான் போடவேண்டும். கொஞ்சம் பொறுமை காக்கவும்!

——————————————————————————————
உச்சரிப்பு

கிரந்தத்தை எழுத்தில் தவிர்த்தால் மட்டும் போதாது. பேசும் போதும் தமிழ் உச்சரிப்போடு பேசுதல் நலம். ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை இந்தப் பதிவு உங்களுக்கு விளக்கும்.
சொல் முதலில் வரும் வல்லெழுத்து எப்பொழுதும் வலிந்து தான் ஒலிக்க வேண்டும்.

அதாவது,
சாலை – Chaalai
சந்தை – Chanthai
சங்கம் – Changam

ஆனால், ‘ஸ’வில் தொடங்கும் சொல் நிறைய தமிழுக்குள் புகுந்து விட்டது. ‘ஸபை’, ‘ஸப்தம்’, ‘ஸந்தேகம்’ போன்றவைகளை கிரந்தம் தவிர்த்து ‘சபை’, ‘சத்தம்’, ‘சந்தேகம்’ என்று ஏற்கனவே ஏற்றுக்கொண்டோம். ஆனால், பேசும் போது பழைய உச்சரிப்பிலேயே பேசியதால், தொடக்கத்தில் வரும் ‘ச’வும் ‘Sa’ என்று ஒலிக்கும் என்று குழம்ப தொடங்கிவிட்டோம். அதனால் தான் தமிழ்ச்சொல்லான ‘சங்கத்தையும்’ ‘Sangam’ என்று உச்சரிக்கிறோம். தமிழ் உச்சரிப்புக்கும் கவனம் செலுத்துவது நல்லது.

மாற்றுக்கருத்துக்கள் மற்றும் ஐயங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

முந்தய இலக்கணங்கள்:

தமிழ் இலக்கணம் – 1