பசுமைக்கு மாறுவோம்

Posted on ஓகஸ்ட் 15, 2012

12


“Go Green!” என்னும் ஆங்கில முழக்கத்தைத் தான் “பசுமைக்கு மாறுவோம்” என்று மொழிப்பெயர்த்திருக்கிறேன் என்ற தகவலோடு இந்தக் கட்டுரையைத் தொடங்குகிறேன். ஓசோன் அடுக்கில் விழும் துளைகளை அடைக்க, உலக வெப்பமடைதலைத் தடுக்க, தண்ணீர் பற்றாக்குறை சிக்கலைத் தீர்க்க யாரும் வானத்தில் இருந்து குதிக்கப் போவதில்லை. இந்தப் பொறுப்புகளை விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாம் நிம்மதியாக வீட்டில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவைகளைத் தடுக்க நாம் பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் செய்யத் தேவையில்லை.சில செயற்கைகளைத் தவிர்த்து எளிய முறையில் வாழ்ந்தாலே போதும்; பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடும். இயற்கை வழியில் வாழ சிறந்த வழிகளான ‘கம்பா’ மற்றும் ‘பூவந்திக்கொட்டைகளை’ப் பற்றி கீழே விரிவாகக் காண்போம்.

வீட்டில் சேரும் மக்கும் குப்பைகளை உரமாக்கி, அந்த உரத்தை விற்று பணமீட்ட உதவும் ‘கம்பா’ பற்றி முதலில் காண்போம். நமக்கு உரம்/பணம் தருவதோடு சுற்றுப்புறச் சூழலுக்கு அது எந்த வகையில் பயன்படுகிறது என்பதையும் காண்போம்.

மூன்றடுக்கு கம்பா

மூன்றடுக்கு மண்பானையைத் தான் இந்தத் தளம் ‘கம்பா’ என்றழைக்கிறது. இங்கு நீங்கள் ‘கம்பா’, அது போக அதற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உங்கள் வீட்டில் சேர்ந்த உரத்தை இங்கே விற்கவும் செய்யலாம்.

இந்தக் ‘கம்பா’ வாங்கும் போதே அதில் எந்த வகைக் குப்பைகளைப் போடலாம், எவற்றைப் போடக்கூடாது என்ற விளக்கப்பட்டியலுடன் வருகிறது. நெகிழி (Plastic), ஈகநார்ப் பைகள் (Polythene bags) போன்றவற்றை’கம்பா’வில் போடக்கூடாது. சமைக்கும் போது கழிக்கப்படும் காய்கறி தோல்கள், சமைத்த பிறகு மென்று கழிக்கப்படும் எலும்புகள் வரை எல்லாவற்றையும் கம்பாவில் மேல் அடுக்கில் போடலாம். கம்பாவில் சேரும் குப்பைகளின் காடித்தன்மையை (எ.கா: எலுமிச்சை) கட்டுப்பாட்டுக்குள் வைக்க ‘சோடா காரமும்’, ஈரத்தை உறிஞ்ச மரத்தூளையோ, காய்ந்த இலைகளையோ போடவேண்டியிருக்கும். கம்பாவை மூடிவைப்பதற்கு முன்னர் ஒரு தாளை வைத்து குப்பையை மூட வேண்டும். இதனால் வேண்டாத ஈக்களின் வளர்ச்சியை நாம் தடுக்கலாம். தொடக்கத்தில் கொஞ்சம் பழக்கொசுக்களும், புழுக்களும் உருவாகும். இவைகள் எந்த வகைகளிலும் நமக்கு துன்பம்/நோய் தரப்போவதில்லை. வாழ்த்துக்கள், ஒரு புதிய உணவுத்தொடரை நீங்கள் தொடக்கிவைத்து விட்டீர்கள்!

மேல் அடுக்கில் இருக்கும் குப்பை

இரண்டாம் அடுக்கில் அடுக்கில் இருக்கும் குப்பை

மூன்றாம் அடுக்கில் இருக்கும் குப்பை

மக்காத குப்பைகளை நீங்கள் வேறொரு குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும். கம்பாவில் மேல் அடுக்கு நிரம்பிவிட்டால் அதை இரண்டாவதாக வைத்துவிட்டு, இரண்டாவதாக இருந்த வெறும் பானையை மேலே வைத்து முன்பு போலவே மக்கும் குப்பைகளைச் சேமித்து வரலாம். ஒவ்வொரு பானை நிரம்பும் போதும், இப்படி சுழற்சி முறையில் பானைகளை மாற்றிக் கொண்டே இருக்கலாம். மூன்று அடுக்குகளும் நிரம்பும் வேலையில் கீழே இருக்கும் பானையில் உரம் உருவாகியிருப்பதை நீங்கள் கவனிக்கலாம். வாழ்த்துக்கள். மண்பானை செய்பவர்களை ஊக்குவித்ததற்கு நன்றி.

மாநகராட்சி குப்பைத்தொட்டியில் நீங்கள் போடும் (மக்காத) குப்பை அளவு எப்பொழுதும் போடும் அளவை விட குறைந்திருக்கும். அதுமட்டுமல்ல முன்பு போல் கரிமப் பொருட்களும்(Organic substances), கனிமப் பொருட்களும்(Inorganic substances) சேர்ந்திருக்கப் போவதில்லை. பொதுவாக மாநகராட்சி குப்பை வண்டி எல்லாக் குப்பைகளையும் ஒன்றாக ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சேர்த்துவைத்துவிடும். அங்கே நிறைய குப்பைகள் சேர்ந்ததும் அப்படியே எரித்துவிடுவார்கள். கனிமப் பொருட்களோடு கரிமப் பொருட்களையும் சேர்த்து எரிப்பதால் நாம் இதுவரை நினைத்துக் கூட பார்த்திராத அளவில் புகை வரும். அந்தப் புகை சுற்றுப்புறச் சூழலை சீரழிக்க வேண்டிய தன்மைகளைச் சுமந்திருக்கும் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். கரிமப் பொருட்களையும், கனிமப் பொருட்களையும் பிரித்திருந்தால் கரிமப் பொருட்களை மக்கவைத்து, கனிமப் பொருட்களை வேண்டிய முறையில் மறுசுழற்சி செய்திருக்கலாம். கம்பாவில் நாம் கரிமப்பொருட்களை சேமித்து வைத்திருப்பதால், மாநகராட்சி குப்பை வண்டியில் பெரும்பாலும் கனிமப் பொருட்கள் மட்டுமே போகும். சுற்றுச்சூழலைக் காக்க முனைந்த உங்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நம் வீட்டில் சேரும் குப்பைகள் இறுதியில் எங்கே போய் சேர்கிறது, என்ன ஆகிறது என்பதை அறிந்துகொள்ள இந்தப் பதிவுகளைப் படியுங்கள்!
Journey of our Trash in Bangalore – I
Journey of our Trash in Bangalore – II

கம்பாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கும் படம்.

அடுத்து நாம் பார்க்கவிருப்பது ‘பூவந்திக்கொட்டை’. துணி துவைப்பதற்கு பயன்படுத்தப்படும் வழலையில்(Soap) வேதிப்பொருட்கள் நிறைய இருக்கிறதென்பது எல்லாரும் அறிந்ததே. அதற்கு பதிலாக பூவந்திக்கொட்டைகளைப் பயன்படுத்துவதில் எந்த கடினமும் இருக்காது. அதே நேரத்தில் இயற்கை வழியில் செல்வதால் சுற்றுச்சூழலுக்கு எந்தச் சிக்கலும் இருக்காது.

DailyDump நிறுவனத்தில் வாங்கிய பூவந்திக்கொட்டைகள்

பூவந்திக்கொட்டைகள்

ஆறிலிருந்து எட்டு கொட்டைகளை இரண்டு குவளை வெந்நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்தால் பூவந்திக்கொட்டைகளிலிருந்து ‘சப்போனின்’ என்னும் வேதிப்பொருள் தண்ணீரில் இறங்கிவிடும். இது தான் துணிகளுடன் நுதம்பி கறை போக்க உதவுகிறது. இதைத் துணி துவைப்பதற்கு மட்டுமல்லாமல் கை கழுவுவதற்கும், வீட்டிலிலுள்ள கண்ணாடிப் பொருட்களையும் கழுவ பயன்படும். இதற்கு இன்னும் பல பயன்பாடுகள் உள்ளன. தோல் அழற்சி ஏற்படாது. சுற்றுச்சூழலைக் காப்பதோடு பொருட்செலவும் குறைவு என்பது இன்னொரு கவனிக்கப்படவேண்டிய கூற்று.

மேலே சொல்லப்பட்ட ‘கம்பா’வும், ‘பூவந்திக்கொட்டைகளும்’ நாங்கள் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம்.

இதுபோக பல வழிகளில் நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் வேதிப்பொருட்களை குறைக்கலாம். உப்பு இருக்கும் பற்பசை தேடுவதற்கு பதிலாக உப்பை வைத்தே பல் தேய்க்கலாம். சிறுவயதில் பலமுறை வேப்பங்குச்சியைக் கடித்து பல் தேய்த்திருக்கேன். எட்டயபுரம் செல்லும்போதெல்லாம் என் தாத்தா காட்டிலிருந்து எடுத்துவரும் ஆலங்குச்சியில் தேய்ப்பேன் (ஆலும் வேலும் பல்லுக்குறுதி). கரியை தேங்காய் நாறை வைத்து தொட்டு பாத்திரங்கள் தேய்க்கலாம். குளிப்பதற்கும் வழலையைத் தவிர்த்து கடலைமாவு பயன்படுத்தலாம். இவை சுற்றுச்சூழலைக் காப்பதுமட்டுமன்றி, நம் செலவுகளைக் குறைக்கும். வெளிநாட்டிலிருந்து தேவையில்லாமல் பலவற்றை இறக்குமதி செய்யத் தேவையில்லை. ஒருவகையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கே இது வழிவகுக்கும்.

எங்கள் வீட்டின் நெற்றிக்கூட்டில் பூந்தொட்டியில் வளர்க்கப்படும் செடிகள்

நாம் அடிமைகளாக இருந்த போது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் இந்நன்னாளில் (ஆகத்து 15) வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் பசுமைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டிய நேரமிது.

நன்றி:
ஒளிப்படங்கள் எடுத்துக்கொடுத்த அருண் கார்த்திக் பாபுவுக்கும், கம்பாவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கிய பாலசுந்தரராமனுக்கும் என் நன்றிகள்.