உடன்பிறப்புகளே – குறும்படம்

Posted on ஜூன் 19, 2012

0


இது ‘கலைப்பொறியாளர்கள்’ குழுவின் இரண்டாவது குறும்படம். முந்தய வெளியீடு – பெங்களூர்

இந்தக் குறும்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஒரு கதைமாந்தராக நடித்திருக்கிறேன். அதுபோக ஒலிப்பதிவு, தலைப்பு அசைவூட்டமும் செய்தேன். உதவி ஒளிப்பதிவாளர், மற்றும் உதவி படத்தொகுப்பாளராகவும் இருந்தேன் என்று சொல்லலாம். FLstudio9 மென்பொருளில் இசைத் துணுக்குகள் அமைத்து இசையமைப்பாளருக்கு அனுப்பி கடுப்பேற்றியும் இருக்கிறேன்! கிட்டத்தட்ட இந்தக் குறும்படத்துக்கு தேவைப்பட்ட அனைத்து வேலைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன். இந்தப் படத்தில் உழைத்த அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் எதையுமே செய்திருக்கமுடியாது என்பதை மறுக்கமுடியாது. எனவே, மொத்த ‘கலைப்பொறியாளர்களுக்கும்’ நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர்கள்:

அரவிந்த்
பலராமன்
சந்தோஷ்
ராஜேஷ்
லலிதா ராம்
மொகம்மெத் கஃபில்
தனசேகர்
சுப்பிரமணியன்
சரவணகுமார்
ஜெய் சங்கர்
கார்த்திக் அருள்


தொழில்நுட்ப வல்லுனர்கள்:

இசை, விளம்பரப்படம் வடிவமைப்பு – சாய் சுதர்ஷன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு – சரவண ராம் குமார்
ஒளிப்படங்கள் – கார்த்திகேயன்
ஒப்பனை – ஹரிஷ்
ஆங்கில அடிவரிகள் – அரவிந்த்

நட்புக்காக: கார்க்கியின் குரல்

குறும்படத்தின் துண்டுப்படம் பார்க்கஇங்கே சொடுக்கவும்!

குறும்படம்

படப்பிடிப்பின் போது எனக்கு நடந்த அனுபவங்கள் – மீசை வரலாறு , காவலர் சோதனை

ஹரிஷ்:

இவர் சந்தோஷின் நண்பர். அவருடைய காட்சி எடுக்கும் போது அவருக்குத் துணைக்கு வந்திருந்த போதுதான் எனக்கு அறிமுகம் ஆனார். ஆனால், அறிமுகம் ஆனவுடனேயே எனக்கு மிகப்பெரிய உதவி செய்தார். முதல் காட்சி எடுப்பதற்கு நாங்கள் இடம் தேடிக்கொண்டிருந்தோம். அதற்கு சரியான இடமென்று அவருடைய சொந்த ஊரை பரிந்துரைத்தார். அங்கே படமெடுக்கும் பொழுது கட்டுப்பாடில்லாமல் கிட்டி விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அப்புறப்படுத்த உதவினார். தானாகவே முன்வந்து அனைவருக்கும் ஒப்பனை செய்து அசத்தினார்.

அரவிந்த்:

இந்தக் குறும்படத்துக்கான முதல் அடி எடுத்தவர் இவர்தான். டுவீட்டர்கள்(கீச்சர்கள்) எல்லாம் சேர்ந்து குறும்படம் எடுக்கலாம் என்ற சிந்தனையை என் மனதில் விதைத்தவர். வெளியூர் சென்று முதல் காட்சி எடுப்பதற்கு இவருடைய மகிழுந்து இல்லையென்றால் கடினமாகியிருக்கும். இந்தக் குறும்படத்தின் தயாரிப்புச் செலவு பெரும்பகுதி நடிகர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் உணவுதான். அதைப் பெரும்பாலும் தானாகவே ஏற்றுக்கொண்டார். அதுபோல தானாகவே முன்வந்து வசனங்களை ஆங்கில்த்தில் மொழிப்பெயர்த்து குறும்படத்தில் சேர்த்துக் கொடுத்ததுக்கு நன்றி.

கார்க்கி:

இந்தக் குறும்படத்தில் ‘ஏழுச்சாமி’யாக நடிக்கவேண்டியவர். சூழ்நிலை இவரைப் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாதவாறு பண்ணிவிட்டது. படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள முடியாவிட்டாலும் பின்குரல் கொடுக்க வருகிறேன் என்று சொன்னார். இதற்காக ஒரு நாள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு வந்து வேலையை முடித்தார். படம் எடுப்பதற்கு சில பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துக் கொண்டார். (என் நண்பன் போல யாரு மச்சான்… :))


கார்த்திகேயன்:

இவர் பொறுமையா அருமையா ஒளிப்படங்கள் எடுப்பார். விளம்பரப்படம் செய்வதற்கு தரமான ஒளிப்படங்களை எடுத்துத் தந்தார். இணையத்தில் விளம்பரம் செய்ய இவர் எடுத்த நிறைய ஒளிப்படங்களை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம். அவர் எடுத்தப் படங்களில் இருந்து ஒரு சின்ன தொகுப்பு – http://karthi.posterous.com/118149507

சாய் சுதர்சன்:

‘பெங்களூர்’ குறும்படத்தில் இருந்தே நன்றாக பழகிவிட்டோம். இசை மட்டுமல்லாது விளம்பரப் படம் வடிவமைப்பது, ஒலிக் கலப்பில் உதவி, படத்தொகுப்பில் ஆலோசனை என்று பல துறைகளில் உதவி செய்திருக்கிறான். நாங்கள் அமைத்த விளம்பரப்படம் நான் எண்ணியது போல வரவில்லை. கையிலிருக்கும் விளம்பரப்படத்தை அவனுக்கு மின்மடலில் அனுப்பி எனக்கு எப்படி வேண்டும் என்பதை எழுதியனுப்பியிருந்தேன்.

ஏப்ரல் 16 இரவு 9 மணிக்கு அலைபேசியில் உரையாடிக்கொண்டது…

நான்: டே… Posters அனுப்பியிருக்கேன்டா. சில changes பண்ணனும், என்னென்னன்னு mailல தெளிவா அனுப்பியிருக்கேன். (பெங்களூர் குறும்படத்துக்கும் இவன் தான் வடிவமைத்தான்)
அவன்: எப்படா முடிக்கணும்?
நான்: ஏப்ரல் 18 release பண்ணலாம்னு இருக்கேன்….
அவன்: ம்ம்ம்… பாக்கலாம்…

அடுத்த நாள் நான் மின்மடல் பார்க்கும் பொழுது, அவனிடமிருந்து இரண்டு மின்மடல்கள் வந்திருந்தன. முதல் மடல் காலை 3 மணிக்கு வந்திருந்தது. அதில் ஏதோ திருத்தம் செய்திருப்பதாகச் சொல்லி அவனே காலை 3:30க்கு இன்னொரு மின்மடல் அனுப்பியிருந்தான்.

சாய் சுதர்சனிடம் ஒரு வேலை கொடுக்கும் பொழுது அவன் ஐயத்துடன் ‘பார்க்கலாம்’ என்று சொன்னாலே அந்த வேலை முடிந்துவிட்டதாக எண்ணி நான் அடுத்த வேலைக்கு போய்விடுவேன்.

சரவண ராம் குமார்:

எனக்கு நான்கு கைகள் இல்லை என்கிற குறையைத் தீர்த்தவன். நான் நினைப்பதை அப்படியே புரிந்துக் கொண்டு நிகழ்ப்படக் கருவியை இயக்குவான். அதனால், இவனிடம் வேலை வாங்குவது எனக்கு எளிதாகிவிட்டது! கதை, திரைக்கதை, வசனங்களில் சில ஆக்கப்பூர்வமான திருத்தங்களும் சொல்லுவான்(இதை என் நண்பன் பாலமுருகனும், இந்தக் குறும்படத்தில் நடித்த பலரும் செய்தனர்!). எதையும் மிகவும் பொறுமையாக செய்வான். நினைத்தது போல் வராமல் எளிதில் விடமாட்டான்.

மற்றவர்கள்:

தனித்தனியே ஒவ்வொருவருக்கும் எழுதுவதுக்கு சரக்கு இருக்கு. ஆனால், பதிவின் நீளம் கருதி மொத்தமாக எழுதுகிறேன். வாரயிறுதிகளில் சொந்த வேலைகளையும் தள்ளிப்போட்டுவிட்டு தொலைவிலிருந்து வந்து நடித்து பின்குரலும் கொடுத்து முடித்துத் தந்ததுக்கு அனைவருக்கும் நன்றி.

இந்தக் குறும்படம் உருவான வரலாறை அடுத்தப் பதிவில் காணலாம்….

வேண்டுகோள்: குறும்பட இயக்கத்துக்கு ஒரு நீண்ட இடைவேளை விடப்போகிறேன். தயைக்கூர்ந்து நண்பர்கள் “அடுத்தக் குறும்படம் எப்போது?” என்று கேட்டு அன்புத்தொல்லை தரவேண்டாம். புரிதலுக்கு நன்றி.