தமிழ் இலக்கணம் – 1

Posted on மே 23, 2012

28


வாழ்த்துக்களா? வாழ்த்துகளா?

“வாழ்த்துகள் சரியா? வாழ்த்துக்கள் சரியா?” – இந்தக் கேள்வி இன்று பல தமிழ்வல்லுனர்களுக்கே குழப்பமாக இருக்கிறது. இதனால், இதைக் குறித்து நான் படித்து அறிந்தவற்றை நான் இந்தப் பதிவில் பகிர்கிறேன்.

தமிழில் ‘கள்’ தவிர வேறு எத்தனையோ விகுதிகள் இருந்தாலும், இந்த ‘கள்’ விகுதி தரும் குழப்பம் இருக்கிறதே….! ஐயய்யய்யய்யோ…

பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ்த்தேர்வில் ‘பகுபத உறுப்பிலக்கணம்’ என்று ஒரு கேள்வி வரும். அதுக்காக, ப.ச.வி.இ.சா.வி என்று நான் மனப்பாடம் செய்ததும் உண்டு!

ப.ச.வி.இ.சா.வி —> பகுதி,சந்தி,விகாரம்(அலங்கடை),இடைநிலை,சாரியை,விகுதி

பகுக்கக்கூடிய தமிழ்ச்சொற்களில்(பகுபதம்), பகுதி போக வேற ஏதாவது ஒரு உருபாவது இருக்கும்.

எ.கா: வந்தனன் = வா(வ) + ந் + த் + அன் + அன்

இந்த உறுப்புகள் ஒரு பதத்தின் காலத்தை உணர்த்துவதற்கும், ஒருமை/பன்மை, தன்மை/முன்னிலை/படர்க்கை போன்ற நிலைகளை உணர்த்துவதற்கும் பயன்படுகின்றன.

கள்ளில் வந்த குழப்பம்:

‘கள்’ என்பது பன்மையை குறிக்கும் ஒரு விகுதியாக மட்டும் இல்லாமல் ‘பனம்பூ வடிச்சாறு’ எனும் பொருள் தரும் தனிச்சொல்லாகவும் இருக்கிறது. எனவே, ‘கள்’ என்ற விகுதி ஒரு சொல்லோடு சேரும் போது அந்தச் சொல் என்னவாகும், ‘கள்’ என்ற சொல் அதேச் சொல்லோடு புணரும் போது அந்தச் சொல் என்னவாகும் என்பது தான் குழப்பமே.

வாழ்த்து+கள்(சொல்) – வாழ்த்துக்கள்
வாழ்த்து+கள்(விகுதி) – வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்

வேண்டுமென்றே தவறாகப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் ‘வாழ்த்துகள்'(‘க்’ இல்லாமல் சேர்ந்தது) என்ற சொல்லையும் தவறாகப் புரிந்துக்கொள்ளலாம்.
‘வாழ்த்துகள்’ என்ற சொல்லை ஒரு வினைத்தொகையாக பார்க்கலாம்! (‘ஊறுகாய்’ போல – ஊறுகின்ற காய், ஊறின காய், ஊறும் காய் என முக்கால வினைகளையும் குறிக்கும்)
வாழுகின்ற துகள், வாழ்ந்த துகள், வாழும் துகள் என்று உணர்த்தி வரும் இந்தச் சொல்லை ‘நுண்ணுயிரி’ என்று பொருள் கொள்ளலாமா? 😉

‘கள்’ என்பது விகுதி தான், அது சொல் போல் புணராது என்று சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி – “பூக்கள் சரியா? பூகள் சரியா?”


அப்படியென்றால் ‘வாழ்த்துக்கள்’ என்பதை எப்படி புரிந்துக்கொள்வது? பன்மை சேர்த்த ‘வாழ்த்து’ என்றா? வாழ்த்து சொல்லிவிட்டு அருந்தப்படும் ‘கள்’ என்றா?

‘பூக்கள்’ – பூவிலிருந்து எடுக்கப்படும் ‘கள்’, அதாவது ‘தேன்’ என்று புரிந்து குழம்பியிருக்கோமா? ஒரே சொல் பல பொருள்களில் வருவதுண்டு. எ.கா: ‘அரவம்’ என்னும் சொல் ‘ஒலி’ மற்றும் ‘பாம்பு’ என்று இரண்டு பொருள்களில் வரும்!

அரவம்(பாம்பு) தீண்டிய வலி தாங்காமல் அவன் எழுப்பிய அரவம்(ஒலி) என் காதுகளை பதம் பார்த்தது.

எனவே ஒரு சொல்லைச் சுற்றியிருக்கும் மற்றச் சொற்களைப் பொறுத்து தான் அந்தச் சொல் தரும் பொருளை தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியும்.

“வாழ்த்துக்கள்” சரி என்பதற்கான சான்றுகள்:

“எழுத்துக்கள்”, “வாழ்த்துக்கள்” போன்ற சொற்களை பல தமிழறிஞர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

* தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
* இளம்பூரணர்
* மணக்குடவர்
* சேனாவரையர்
* பரிமேலழகர்
* ஈழத்துச் சைவத் தமிழறிஞர் – ஆறுமுக நாவலர்

‘கள்’ விகுதி சேரும் பொழுது எங்கே ‘க்’ மிகும்/மிகாது என்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பட்டியலிட்டுள்ளது.

‘கள்’ விகுதி சேரும் பொழுது ‘க்’ மிகும்/மிகா இடங்கள்:

‘உ’வில் முடியும் சொற்களைப் பற்றி மட்டும் தான் கீழே பார்க்கப் போகிறோம்.

1) “க்” மிகலாம்

* மூவெழுத்து, அதற்கும் அதிகமான எழுத்துள்ள உகரச் சொற்கள் ஒற்றோடு வந்தால் மிகலாம்(கவனிங்க: “மிகணும்” என்று சொல்லவில்லை, “மிகலாம்”)
முத்துக்கள், எழுத்துக்கள், வாழ்த்துக்கள், பழச் சத்துக்கள்
முத்துகள், எழுத்துகள், வாழ்த்துகள், பழச் சத்துகள்

2) “க்” மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள் குறிலாக வந்தால் மிகணும்!
பசுக்கள், அணுக்கள், தெருக்கள்

* ஓரெழுத்துச் சொற்கள் வந்தால் மிகணும்!
பாக்கள், ஈக்கள், மாக்கள், பூக்கள்
அலங்கடைகள்: ஐ-யில் முடியும் ஓரெழுத்துச் சொற்கள் – பைகள், கைகள் (ஒரெழுத்து எனினும் ‘க்’ மிகவில்லை!)

3) “க்” மிகவே கூடாது

* ஈரெழுத்துச் சொற்களில் முதலெழுத்து நெடிலாக வந்தால் மிகாது!
வீடுகள், மாடுகள், ஓடுகள்

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்களுக்கு மிகாது
கொலுசுகள், மிராசுகள், தினுசுகள்

* அது ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ, “வு” வரும் போது மட்டும், மிகவே கூடாது!
ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்


‘கள்’ தரும் இன்னொரு குழப்பம்:

சிலர் ‘நாட்கள்’ தவறு என்று கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் ‘சொற்கள்’,’மரங்கள்’ சரி என்று ஒப்புக்கொள்கிறார்கள். கூர்ந்து நோக்கியபோது ஒன்று புலப்பட்டது. சரியா? அல்லது தவறா? என்று உறுதியாகத் தெரியவில்லை.

மெய்யெழுத்துக்கு முன் குறில் வந்தால் அந்த மெய்யெழுத்து ‘கள்’ விகுதியுடன் சேர்ந்து திரியும்(ல ~ ற,ள ~ ட,ம ~ ங).
(எ.கா) சொற்கள், பொருட்கள், மரங்கள்
மெய்யெழுத்துக்கு முன் நெடில் வந்தால் அந்த மெய்யெழுத்து ‘கள்’ளுடன் சேராது.
(எ.கா) கால்கள், நூல்கள், கடாம்கள், கோள்கள், நாள்கள் (ஆனால், நாட்கள் என்ற சொல்லையும் பலர் பயன்படுத்தியிருக்கின்றனர்!)
பிற மெய்யெழுத்துக்கள் குறில் வந்தாலும்/நெடில் வந்தாலும் திரியாது:
(எ.கா) பொய்கள், காய்கள், பெண்கள், சுவர்கள், தேர்கள், கடன்கள்

ஆனால், இந்த ‘ல்’ எல்லா இடங்களிலும் ‘ற்’ ஆக திரிவதில்லை. ஓரெழுத்துக் குறில் முன்னால் வந்தால் மட்டுமே திரியும் என்று தோன்றுகிறது.
(எ.கா) மயில்கள், கடல்கள், பதில்கள்

போலிகள்:

தமிழில் நிறைய போலிகள்(போலி-போலிருப்பவை) இருக்கின்றன.

கறுப்பு-கருப்பு இரண்டும் நிறத்தைக் குறிக்கும் சொற்களே என்று சிலர் சொல்கின்றனர்.

கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்;
என்று ‘வளவு’ இராம.கி ஐயா விளக்கம் கொடுத்திருகிறார்.

பூ+கதவு = பூங்கதவு(பூவைப் போன்ற கதவு – பண்புத்தொகை)/பூக்கதவு (பூவினால் ஆன கதவு – வேற்றுமைத்தொகை)

விரிவாக இங்கே காணலாம்!

இதுபோன்ற நுண்ணிய வேறுபாடுகள் ‘கள்’ விகுதியிலும் வரும் என்று எண்ணுகிறேன்.

(எ.கா) எழுத்துகள் – Writings, எழுத்துக்கள் – Letters
பொருள்கள் – Meanings, பொருட்கள் – Things

கள் வரலாறு:
‘கள்’ என்ற விகுதி முதலில் அஃறினை பன்மையைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப் பட்டதாம். பிற்காலத்தில் அது மெல்ல மெல்ல மற்றச் சொற்களின் பன்மையையும் குறிக்க தொடங்கிவிட்டது. அவ்வளவு ஏன்? ‘அர்’ என்பதே பன்மை விகுதியாகக் கருதப்படும்போது, ‘கள்’ விகுதி ‘அர்’-உடன் சேர்ந்து ‘அர்கள்’ என்று இரட்டைப் பன்மையாக(மிகைதிருத்தம்) வரத்தொடங்கிவிட்டது. (எ.கா: காதலர்கள்) இதுபோன்ற சொற்கள் இப்பொழுது நிறைய புழக்கத்தில் உள்ளது.

இந்தக் கட்டுரைக்கு தரவுகள் தந்து உதவிய @kryesக்கு நன்றிகள்.

இது குறித்த @kryesஇன் பதிவு இது – ’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்து-க்களா?வாழ்த்து-களா??

Advertisement