கொசுக்கடி

Posted on மார்ச் 10, 2012

39


முன்குறிப்பு: அம்மை நோயில் நான் வாடிய பொழுது இரண்டு கிழமைகள் ஒரே அறையில் இருந்தேன். வேறெதுவும் செய்ய முடியாத நிலையில் என் ஏட்டில் எழுதிய கதை இது. (வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!)

அந்தக் கொசு அந்த வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்துக் கொண்டிருந்தது. வீட்டிலிலுள்ள அனைத்து கதவுகளும் சாளரங்களும் பூட்டப்பட்டிருந்தன. களைத்துப் போன அந்தக் கொசு காற்றிலே நீச்சலடித்து மொட்டைமாடிக்கு வந்தது. அங்கிருந்த தண்ணீர்த்தொட்டியை முழுமதி ஒளி மின்னச் செய்துக் கொண்டிருந்தது. அந்தத் தண்ணீர்த்தொட்டியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது கொசு. அப்பொழுது அதுக்கு குருதி வாசம் தெரிந்தது. மொட்டைமாடி முழுதும் இறக்கை விரித்தது. ஒரு மூலையில் மனித உருவம் ஒன்று படுத்திருப்பது தெரிந்தது.

அந்த உருவம் நல்ல உறக்கத்தில் இருந்தது. அந்த மனிதர் வாயிலிருந்து வெளியேறி பின் உள் இழுக்கப்படும் குறட்டைக் காற்று அந்தக் கொசுவை நிலைத்தடுமாறச் செய்தது. எப்படியோ அதிலிருந்து தப்பித்து வந்த கொசு அவர் கையில் அமர்ந்தது. மின்மினி பூச்சிகள் விளக்கு பிடிக்க அந்த மனிதன் கையில் ஒரு நல்ல இடம் பார்த்தது கொசு. தன் கூர்மையான ஊசியை வைத்து அந்த இடத்தை பதம் பார்த்தது. தனக்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய உருவம் வருவதை உணர்ந்து வேகமாக பறந்துவிட்டது. அது பறந்த அடுத்த நொடியில் பளாரென்று ஒரு ஒலி கேட்டது.

அந்த மனிதரால் தாக்கப் படுகிறோம் என்பதை உணர்ந்த கொசு அவர் உடம்பில் வேறு இடம் தேடி மேய்ந்தது. அந்த மனிதரின் காலில் அமர்ந்துக் கொண்டு மெதுவாக ஊசியை உள்ளே இறக்கியது. அப்படியே மெதுவாக குருதியை உறிஞ்சிக் குடித்தது. அந்தக் குருதியின் சுவை அதுக்கு பிடிக்கவேயில்லை. இருந்தாலும் வயிற்றுப் பசிக்கு நிறைய குடித்தது.

அடுத்த நாள் காலை அந்த மனிதர் துயில் கலைந்து எழுந்தார். கை கால் எல்லாம் தடிப்புகளாக இருந்தன. காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தும் முன்னே கவிதைகள் எழுதும் பழக்கமுடையவர் அவர். எழுதுகோல் வழியே வந்த மைத் தூரலில் ஒரு கவிதை வரைந்தார்.


“மனிதன் தான் செய்யும்
சின்னஞ்சிறு தவறுகளுக்கும்
அன்றே தண்டனை பெறுகிறான் – கொசுக்கடி”

அந்தக் கொசு தன் நண்பன் கொசுவிடம் முந்தய இரவு மொட்டை மாடியில் குருதி குடித்ததைப் பற்றிச் சொன்னது. உடனே நண்பன் கொசுவும் அந்தக் கொசுவுடன் சேர்ந்து இன்றிரவு வருவதாகச் சொன்னது. குருதி கசப்பதற்கான கரணியத்தை வினவியது அந்தக் கொசு. நேரத்துக்கு ஊட்டச்சத்தான உணவை உண்பவன் குருதி தான் நல்ல சுவையாக என்று விளக்கமளித்தது நண்பன் கொசு.

வெறும் நீரில் தேயிலை போட்டு காய்ச்சிக் குடித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். பால் விலை உயர்வுக்குப் பின் பால் வாங்குவதேயில்லை அவர். பேருந்து கட்டணம் உயர்த்தியதிலிருந்து நடந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.செய்தித்தாளில் கல்நெய் விலையிலும் 4 உருவா கூட்டப்போவதாகப் போட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பொதுவாழ்வை சீர்குலைக்கச் செய்யும் செய்திகளைப் படித்துப் புளித்துப் போயிருந்தது அவருக்கு. அழுகை தான் சிரிப்பாக உருமாறி அவர் உதட்டை நெளித்தது.

அன்றைய நாளிலும் இரவு வந்தது. அந்தக் கொசுவும், நண்பன் கொசுவும் போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தன. தனது ஊசியை சுவரில் தேய்த்து கூர்மைப் படுத்திக் கொண்டிருந்தன. இரண்டு கொசுக்களும் கிளம்பி அதே மொட்டைமாடிக்குச் சென்றன. அதே மூலையில் அதே மனிதர் படுத்திருந்தார். அவர் அருகே பறந்து செல்லும் பொழுது ஒரு பெரிய உருவம் வேகமாக வந்தது. இந்த இரண்டு கொசுக்களும் வேகமாக எதிர்திசையில் பாய்ந்தன. ஆனால், அந்த உருவத்தில் (விசிறியில்) இருந்து வந்த காற்றில் இரண்டு கொசுக்களும் நிலைத்தடுமாறி ஓர் இடத்தில் போய் விழுந்தன. கண் விழித்துப் பார்கையில் சுருள் சுருளாக ஏதோ தெரிந்தது. அதிலிருந்து ஒரு வகையான நாற்றத்துடன் கூடிய புகை வந்து இரண்டு கொசுக்களையும் சூழ்ந்துக் கொண்டது. இரண்டு கொசுக்களும் நினைவிழந்து ஞஞ்ஞையில் விழுந்தன. போதை தெளிந்து பார்க்கையில் விடிந்திருந்தது.

இப்படியே 15 நாட்கள் சென்றன. இரண்டு கொசுக்கள் இந்த நேரத்துக்குள் 20 கொசுக்களாக மாறியிருந்தன. ஞஞ்ஞை உருவாக்கும் புகையிலிருந்தும், காற்றைத் தெளிக்கும் விசிறியிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் பழகியிருந்தன அந்த 20 கொசுக்களும். மொட்டைமாடியிலேயே குருதி கிடைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொசுக்களுக்கு. பல்லியிடமோ, எட்டுக்கால் பூச்சி வலையிலோ சிக்கத் தேவையில்லை. இதனால் தான் கசப்பானக் குருதியாக இருந்தாலும் அந்த மனிதரிடமே அந்தக் கொசுக்கள் சென்றன.

இன்றைய இரவில் மதி முழுவதுமாகத் தேய்ந்து இருள் சூழ்ந்திருந்தது. எனவே, அந்த மனிதர் மொட்டை மாடியில் ஒரு விளக்கை ஏற்றினார். திரியும் தீயும் ஒன்று சேர்ந்ததில் ஒளி பிறந்தது. புணரும் ஆவலில் நுணல்கள் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தன. நடுநிசியில் தெருநாய்கள் சண்டையிட்டு கூச்சல் போடுவதும் கேட்கும். இந்த இன்னல்களோடு சேர்ந்து உறங்கியே பழகியிருந்தார் அந்த மனிதர். ஆனால், அவரால் எந்தப் பொழுதும் தாங்க முடியாதது கொசுக்கடி தான். “இன்றாவது மின்சாரம் வராதா?” என்ற ஏக்கம் மனமுழுதும் பரவிக்கிடந்தது அந்த மனிதருக்கு. மின்தடையில் இயங்காத மின்விசிறியுடன் அடைத்து வைத்த வீட்டுக்குள் வியர்க்க வியர்க்க தூங்குவதற்கு மொட்டைமாடியில் கொசுக்கடியோடு தூங்குவதே மேல் என்று நினைத்துக் கொண்டார்.

அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதுபோல் தெரிந்தது இந்தக் கொசுக்களுக்கு. நாளங்களில் துளையிட்டு குருதியை குடித்துவிட வேண்டும் என்ற கொடூரமான எண்ணத்தோடு 20 கொசுக்களும் அவரைச் சுற்றி வளைத்தன. தன் ஊசியை உள்ளே இறக்குவதற்காக ஓங்கிக் குத்தியது ஒரு கொசு. அதன் ஊசி உடைந்துவிட்டது. அவரது உடல் இரும்பு போல் இறுக்கமாய் இருந்தது. விசிறியும் ஆடவில்லை. குறட்டை ஒலியும் வரவில்லை. மொட்டைமாடியின் இன்னொரு மூலையில் தீர்ந்துப் போன மதுபானப் புட்டிகள் குவிந்து கிடந்தன.

மதுபானப் புட்டியில் எழுதியிருந்தது: “Drinking Kills”(குடிப்பழக்கம் உயிரைக் கொல்லும்.)

————————————————————-

கதையில் ஆங்காங்கே பச்சை நிறச் சொற்களை கண்டிருப்பீர்கள். அவைகளை அப்படியே அதே வரிசையில் எடுத்துக் கோத்தால் ஒரு கவிதை கிடைக்கும்!


முழுமதி ஒளி மொட்டைமாடி முழுதும்…
மின்மினி பூச்சிகள் கவிதைகள் எழுதும்…
திரியும் தீயும் புணரும் பொழுதும்…
“மின்சாரம் வராதா?” என்ற ஏக்கம் மனமுழுதும்…