விளம்பரம்

Posted on நவம்பர் 15, 2011

24


“செய்திகள் விளம்பர இடைவெளிக்குப் பின் தொடரும்…”

“அப்பா, ஏம்ப்பா டி.வில(தொலைகாட்சி) அடிக்கடி விளம்பரம் போடுறாங்க? அதத்தான் யாருமே பாக்குறதில்லேல?!”

தொலைகாட்சி அலைவரிசையை மாற்றுவதற்கு தொலை இயக்கியில் பொத்தானை அமுக்கிக் கொண்டிருந்த முகிலனின் அப்பா இந்தக் கேள்வியைக் கவனிக்கவில்லை. மீண்டும் மீண்டும் முகிலன் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்ததால், முகிலனின் அப்பா இளவெழில் வாயைத் திறந்தார்.

“விளம்பரப் படுத்தினா தான் நிறைய விஷயம்(செய்தி) மக்களுக்குப் போய்ச் சேரும். வியாபாரம் பண்ணுறவங்க(சந்தைப் பொருள் விற்பவர்கள்) இப்படி விளம்பரம் பண்ணா தான் நிறைய பேர் அவங்க பொருட்கள வாங்குவாங்க, அப்படினாத்தான் அவங்களுக்கு நிறைய காசு கிடைக்கும்!”

சிறுவர்களின் கேள்வி என்றும் ஒன்றோடு நின்றுவிடுவதில்லை…

“அதான், நீங்க விளம்பரங்கள பாக்கலையே. அப்பறம் எதுக்கு விளம்பரம் போடணும்?”, மீண்டும் முகிலன்.
“நான் பாக்கல. ஆனா, வேற யாராவது பாத்திருப்பாங்க. யாருக்காவது அந்த விளம்பரம் தேவைப் படும்!”
“நீங்க விளம்பரத்த பாக்காமலையே மாத்தீட்டீங்களே?! அப்பறம் எப்படி அது உங்களுக்கு தேவைப் படுமா? படாதான்னு தெரியும்?”

கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத பொழுது எல்லோரும் செய்வதைத் தான் இளவெழிலும் செய்தான் – சிரித்தான்.

தொலைகாட்சி அலைவரிசைத் தேடுதல் ஒருவழியாக “அவனா? இவனா?” என்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வந்து நின்றது.

அந்த நிகழ்ச்சியில் ‘காதலில் அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களா? பெண்களா?’ என்றத் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தனர்!

நிகழ்ச்சிக்கு உள்ளே…

———————>

நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் பொழுது விட்ட இடைவெளியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அவரவர் விருப்பப்பட்ட நொறுக்குத்தீனிகளையும் குளிர்பானங்களையும் உட்கொண்டிருன்தனர்.

அப்பொழுது நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒரு பெண்ணைத் தனியாக அழைத்து,
“நான் சொல்ற மாதிரி செஞ்சீனா, உனக்கு நான் நிறைய பணம் தர்ரேன்!’ என்றான்.
“என்ன செய்யனும்?” குழப்பத்தோடும், பயத்தோடும் அந்தப் பெண் வினவினாள்.
“உன்னோட காதலன் உனைய எப்படி ஏமாத்தினான்னு ஒரு உருக்கமான கதையச் சொல்லி நீ அழனும்!”
“அழனுமா?! எதுக்கு??”
“ம்ம்ம்… ‘ஏன் இந்தப் பெண் அழுகிறாள்?’ அப்புடின்னு போட்டு ஒரு வாரம் விளம்பரம் பண்ணா எல்லாரும் நம்ம நிகழ்ச்சிய தான் பாப்பாங்க! பரிதாபப் படுறதுக்கு நம்ம நாட்டுல நிறைய பேர் இருக்காங்க!”

பணம் கைமாறியது, நாடகநிகழ்ச்சி நிறைவேறியது.

அந்தப் பெண் படப்பிடிப்பு முடிந்து வெளிவரும் பொழுது ஒரு சுவரொட்டி அவள் கண்ணில் பட்டது. “மறக்கப்பட்டத் தமிழனின் மகத்தான வரலாறு” என்று அந்தச் சுவரொட்டி ‘ஏழாம் வகுப்பு’ என்னும் திரைப்படத்தை குறிப்பிட்டது .

திரைப்படத்திற்கு உள்ளே…

———————>

“நம்ம படத்துல வர்ற characters(கதைமாந்தர்கள்) எல்லாரும் பதினஞ்சு நிமிடத்துக்கு ஒருமுறையாவது தமிழப் பத்தியும், தமிழரப் பத்தியும் ஏதாவது பேசிக்கிட்டே இருக்கணும்!”என்றார் அந்தப் படத்தின் இயக்குனர் முருகன்.
“ஏன்? படம் பாக்குறவங்களுக்கும் Short-term memory-யா?(தோள்)”, நக்கலாக உதவி இயக்குனர் வலியகரியன்.
“அப்படியில்ல… தமிழர்களுக்கு தமிழுணர்வு அதிகம்! அதனால படத்த விளம்பரப்படுத்துறது ஈசி(எளிது)!”
“அப்ப நம்ம படத்துல foreign company ads (வெளிநாட்டு நிறுவனங்களுடைய விளம்பரங்கள்) வராதா?!”
“அதுவும் வரட்டும். அத யார் கேள்வி கேக்கப் போறது?!” மென்மையான சிரிப்புடன் முருகன்.

இந்த உரையாடலுக்குப் பின் கொஞ்சம் பொழுதுபோக்குவதற்காக வலியகரியன் அங்கிருந்த செய்தித்தாளை எடுத்துப் படித்தான். செய்திகளை விட விளம்பரங்கள் அதிகமாக இருந்தது. இடையிடையே செய்திகள் இருந்தாலும் அவைகளும் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் விளம்பரமாகவே அவனுக்குப் பட்டது!

இருந்தாலும் முதல் பக்கத்தில் தடிஎழுத்தில் எழுதியிருந்த அந்தத் தலைப்புச்செய்தி அவன் கண்ணை இழுத்தது – “ஊழலுக்கு எதிரான அண்ணாச்சியின் உண்ணாநோன்பு!”

உண்ணாநோன்புக்கு உள்ளே…

———————>

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று சொன்னவுடனே பல இடங்களில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். ஊடகங்கள் முழுவதும் போராட்டக் கூடத்திலேயே பட்டறையைப் போட்டுவிட்டிருந்தனர்; வேறு செய்தியே கிடையாது. பின்னர், “ஊழலை எதிர்க்கிறேன், அண்ணாச்சியை ஆதரிக்கிறேன்!” என்று பொது மக்கள் வேறு அண்ணாச்சியின் உண்ணாநோன்புக்கு விளம்பரம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அந்த உண்ணாநோன்பு ஒரு அறவழி போராட்டம் என்பதால் அங்கே ‘காந்தி’ (விளம்பரப்)படங்கள் வைக்கவேண்டும் என்று போராட்டம் செய்தவர்கள் எண்ணினர். அந்தக் கூட்டத்தில் இருந்த தமிழரசி என்கிற பெண், காந்தியின் படங்கள் நிறைய வரைந்து அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கொடுத்து வந்தார்.

அந்தப் படங்களைப் பார்த்து வியந்த இன்னொரு பெண் தமிழரசியிடம் உரையாடினார்.

“நீங்க ரொம்ப நல்லா வரையுறீங்க! நீங்க ஆர்டிஸ்டா(கலைஞன்)?”
“நான் ஆர்டிஸ்ட் எல்லாம் கிடையாதுங்க! வரையுறது என்னோட பொழுதுபோக்கு தான்!”
“அப்படியா?! நீங்க வரஞ்ச வேற ஏதாவது ஒன்னு காட்டுங்க!”
“இப்போதைக்கு கைல இது ஒன்னு தான் இருக்கு”ன்னு ஒரு படத்தை எடுத்து காண்பித்தாள் தமிழரசி.

அதில் ஒருவர் ஒரு சிறுவனோடு சேர்ந்து உட்கார்ந்து தொலைகாட்சி பார்க்கும் காட்சி வரையப்பட்டிருந்தது.

உடனே, தமிழரசி, “அது என்னோட கணவர் இளவெழில், இது என்னோட மகன் முகிலன்!” என்று விளம்பரப்படுத்தினார். அதாவது அறிமுகப்படுத்தினார்.

அந்தப் படத்துக்கு உள்ளே…
———————>

“செய்திகள் மீண்டும் தொடர்கிறது…”

பின்குறிப்பு:
இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருந்தால் டிவிட்டர், பேசுபுக்கு, மின்னஞ்சல் என்று அனைவருக்கும் அனுப்பிப் பரப்பவும்! எல்லாம் ஒரு விளம்பரம் தானே?!! 😉