குறுங்கதைகள்

Posted on செப்ரெம்பர் 8, 2011

43


முதல் காதல்:

அவனுக்கும் அவன் மனைவிக்கும் எடுத்தப் பயணச்சீட்டுக்கு மீதம் கொடுத்த உருவாத்தாள்களில்(rupees), பத்து வருடங்களுக்கு முன் அவன் பெயரையும், அவன் முதல் காதலி பெயரையும் எழுதிப் பார்த்த ஒரு பத்து உருவாத்தாளும் இருந்தது!

‘இறந்த’ காலம்:

நேரத்தில் பின்னோக்கி பயணித்த அந்த விஞ்ஞானி, முதலில் தன் தாயின் கருவிலிருந்து தன்னை அழித்தார்.

நட்பு:

ஓட்டப்பந்தையத்தில் முதலாவதாக ஓடிவந்துக்கொண்டிருந்த நான் தடுக்கி விழுந்த பொழுது, என்னைத் தாண்டிச் சென்ற சிலரில் ஒருவன் மட்டும் நின்று, என்னைத் தூக்கிவிட்டான் – என் நண்பன்.

நில்… ‘கவனி’… செல்…:

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்த அவன், இடையில் மடக்கிப் பிடித்த போக்குவரத்து காவல்துறையினருக்கு நூறு உரூபாய் கையூட்டு கொடுத்துவிட்டு தான் சென்றான்.

ஏமாற்றாதே! ஏமாறாதே!:

இரண்டு உருவா(rupee) மீதம் சில்லறை வாங்காமல் அந்த நபர் கீழே இறங்கியதால் நடத்துனர் மகிழ்ந்துக் கொண்டிருந்த அதே வேளையில், செல்லாத பத்து உருவாத்தாளை நடத்துனரிடம் கொடுத்துவிட்டு தப்பித்த மகிழ்ச்சியில் அந்த நபர் இருந்தார்!

தாய்மை:

“அம்மா… பசிக்கிதும்மா!” என்று கேட்டச் சிறுவனுக்கு தனக்காக வைத்திருந்த ஒரே ஒரு தோசையையும் முகத்தைச் சுளிக்காமல் எடுத்து ஊட்டினாள் அந்த அம்மா.

அவர்கள்:

கோவிலில் ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் தனித்தனியாக வரிசைகள் இருந்த போதிலும், எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் அந்த திருநங்கை.

கொலைஞன்:

அந்தக் கொலை வழக்கை உசாவிய ஆய்ஞன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தான் கண்டறிந்தான், தானே தான் அந்த கொலையாளி என்று!