தமிழோடு விளையாடுவோம் – 4

Posted on ஏப்ரல் 18, 2011

16


தமிழ் எழுத்து வரிசை குறித்த என் ஆய்வை கீழே எழுதியுள்ளேன். தவறு எதுவும் இருப்பின் சுட்டிக்காட்டவும்.

தமிழ் எழுத்துக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். – (1) உயிரெழுத்துகள் (2) மெய்யெழுத்துகள்

உயிரெழுத்துகள் வரிசைப்படி….

உயிரெழுத்துகள்

ஒரு குறில் கூடவே அதே ஒலியை நீண்டு ஒலிக்கும் ஒரு நெடில் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. (அஆ இஈ உஊ)

கீழ் வரிசையில் தனியாக வரும் ‘ஐ’ மற்றும் ‘ஔ’ நெடில்.

குறில் – குறுகிய நேரத்தில் ஒலிப்பது (மாத்திரை அளவு(கண் இமைக்கும் நேரம்) – 1)

நெடில் – நீண்டு ஒலிப்பது (மாத்திரை அளவு – 2)

மேல் வரிசையில் உள்ள அடிப்படை ஒலிகள் – அ இ உ

கீழ் வரிசையில் உள்ள அடிப்படை ஒலிகள் – எ ஐ ஒ (ஔ)

மேல் வரிசையும் கீழ் வரிசையும் தொடர்புடன் இருப்பதை கவனிக்கலாம்.

ஆங்கிலத்தின் வழியே சொல்ல வேண்டும் என்றால் கீழ் வரிசை எழுத்துக்கள் – ‘a'(எ) ‘i'(ஐ) ‘o'(ஒ)

ஆனால் அதே எழுத்துக்கள் இரண்டு வெவ்வேறு ஒலிகளை இணைக்கும் பொழுது பெரும்பாலும் ‘அ'(a), ‘இ'(i), ‘உ'(oo) என்று ஒலிக்கும்.

தமிழ்முறைப்படியே விளக்கினால் – ‘எ’ என்று சொல்லி அப்படியே உதட்டை அசைக்காமல் ‘அ’ என்று சொல்லிப் பாருங்கள்.

‘ஐ’ என்று சொல்லிவிட்டு அப்படியே உதட்டை அசைக்காமல் ‘இ’ என்று சொல்லிப் பாருங்கள்.

‘ஒ’ என்று சொல்லிவிட்டு அப்படியே உதட்டை அசைக்காமல் ‘உ’ என்று சொல்லிப் பாருங்கள்.

இது மூன்றுமே செய்யக் கூடியவை. ‘ஒ’ என்று சொல்லிவிட்டு அப்படியே உதட்டை அசைக்காமல் ‘அ’ என்று சொல்லிப் பாருங்கள் – முடியாது!

அந்த ‘அ’, ‘இ’, ‘உ’ வரிசைக்கு ஏதாவது காரணம்/கரணியம் இருக்கிறதா?!

இருக்கிறது.

‘அ’ என்பதை ஒலிக்கும் பொழுது வாய் நன்றாக திறந்திருக்கும். – அடிப்படையான ஒலி

‘இ’ என்பதை ஒலிக்கும் பொழுது வாய் ‘திறந்தளவு’ சற்று குறைந்திருக்கும்.

‘உ’ என்பதை ஒலிக்கும் பொழுது வாய் கிட்டத்தட்ட மூடிய நிலையில் இருக்கும்.

மெய்யெழுத்துக்களை உயிர்மெய் நிலையிலே வைத்து பயில்வோம்(ஒலிப்பதற்கு வசதியாக இருக்கும்).

சில மெய்யெழுத்துகள் ‘வலிந்து’ ஒலிக்கும் – வல்லினம்

சில மெய்யெழுத்துகள் ‘மென்மையாக’ ஒலிக்கும் – மெல்லினம்

இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒலிப்பது – இடையினம்

வல்லினம் – க ச ட த ப ற

மெல்லினம் – ங ஞ ண ந ம ன

இடையினம் – ய ர ல வ ழ ள

உயிரெழுத்துகள் எவ்வாறு ஒரு குறில், ஒரு நெடில் என வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறதோ, அது போல மெய்யெழுத்துகள் ஒரு ‘வல்லினம்’ ஒரு ‘மெல்லினம்’ என வரிசைப்படுத்தப் பட்டிருக்கிறது.

மெய்யெழுத்துகள்

‘ற’, ‘ன’ மட்டும் ஏன் கடைசியில் இருக்கிறது?!

அது மட்டுமல்ல ‘ழ’ மற்றும் ‘ள’வும் கடைசியில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது.

‘க’ – ஒலித்து பாருங்கள் – தொண்டையில் இருந்து வரும்

‘ச’ – பின்வாயில் இருந்து ஒலிக்கும்

‘ட’ – நடு மேல்வாயில் இருந்து ஒலிக்கும்

‘த’ – முன்பக்க மேல்வாயில் இருந்து ஒலிக்கும்

‘ப’ – உதட்டில் இருந்து ஒலிக்கும்

ஒலி ‘தொண்டையில்’ தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னே வந்து உதட்டில் முடிந்திருப்பதை கவனித்திருப்பீர்கள்.

ஆனால், ‘ற’ மீண்டும் உள்ளே போகிறது! (விகாரம்)

இது போலவே ‘ன’ மெல்லினத்தில் ‘விகாரம்’. ‘ழ’ மற்றும் ‘ள’, இடையினத்தில் விகாரங்கள்.

இந்த நாலெழுத்துக்களும் (ழ,ள,ற,ன) ‘தமிழில்’ இடையில் சேர்ந்தவைகள் எனத் தோன்றுகிறது.

‘என்று’ என்பதை ‘எண்டு’ என்று இன்னும் கதைக்கும் இலங்கைத் தமிழர்கள் கூட்டம் ‘ற’, ‘ன’ குறித்தான என் ஐயத்தை இன்னும் வலுப்படுத்துகிறது.

‘எழுத்துக்களை’ வரிசை படுத்தியத்தில் கூட ஒரு ‘இலக்கணம்’ இருக்கிறது தமிழுக்கு. (எனவே, அதற்கு கொஞ்சம் மதிப்பு கொடுத்து சரியாக உச்சரிக்க முயற்சி செய்யுங்கள்.)

இனி விளையாட்டுகளுக்குள் போவோம்…

பிழை திருத்து:

கீழே உள்ள வரிகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கணப் பிழைகள் இருக்கும். வரியின் வடிவும் மாறாமல் பொருளும் சிதையாமல் அவைகளை திருத்தியமைக்கவும்.

* நான் அவன் அல்ல.

* நான்கு பறவைகள் மரத்தில் ஒரு கிளையில் அமர்ந்திருந்தது.

* நான் எவ்வளவு முறை சொன்னாலும் கேட்கமாட்டாயா?!

* அது ஒரு அழகிய மழைக்காலம்.

கண்டுபிடி:

இந்த பழமொழி என்னவென்று கண்டுபிடியங்கள்!

“பொ ல் ல ல் தெ ம் மி ல் லா ன் னு வ ன ன்”

குறுந்தகவல்:

‘உச்சரித்தல்’ என்ற சொல் உருவானது எப்படி?

உயிர்தருவித்தல் > உயிர்தரித்தல் > உயிர்ச்சரித்தல் > உய்ச்சரித்தல் > உச்சரித்தல்

முந்தைய விளையாட்டுகள்:

தமிழோடு விளையாடுவோம் – 1

தமிழோடு விளையாடுவோம் – 2

தமிழோடு விளையாடுவோம் – 3