அண்ணன்

Posted on நவம்பர் 8, 2010

26


அர்ப்பணிப்புகள்: இன்று ( நவம்பர் 8 ) பிறந்தநாள் கொண்டாடும் என் (இன்னொரு) அண்ணனுக்கு பிறந்தநாள் பரிசாக இந்தக் கதையை அர்ப்பணிக்கின்றேன்!

மதியவேளை… மலரவனின் கைபேசியில் அழைப்புமணி ஒலித்தது…

“சார்… மணிமாறன் பேசுறேன் சார். இன்னைக்கு சாயந்திரம், எங்க ஸ்கூல்ல(பள்ளி) நடக்குற ஆண்டு விழால உங்க ஸ்பீச்(பேச்சு) இருக்கு. மறந்துராதீங்க சார்.”
“மறக்கல மிஸ்டர் மணிமாறன். நான் அங்க வர்றதுக்கு தான் கிளம்பிட்டிருக்கேன்…”

மலரவன் – மிகப்பெரிய தொழில்முனைவர்(Entrepreneur). நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சராசரியான கல்வி பெற்று, வியக்கத்தகும் சாதனைகளைச் செய்யும் எளிமையானவன். அவனுக்கு வெளியே இருக்கும் உலகத்திற்கு அவனைப் பற்றித் தெரிந்தது இது தான்.

மலரவன் தானுந்தில் பின் அமர்ந்துக் கொண்டு வணிகயிதழில் வந்த அவனைப் பற்றியச் செய்தியை படித்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தான்.

அதில் அவனைப் பற்றி ‘தெளிவாக முடிவெடுக்கக் கூடிய, பயமில்லாத இளம் தொழில்முனைவர்’ என்று குறிப்பிட்டிருந்தது.

தானுந்து சாலையை முன்நோக்கி கடந்துக் கொண்டிருந்தது. ஆனால், இவன் மனம் பின்நோக்கி கடந்தது…

*****************************************

“அண்ணே.. பயமாயிருக்குனே.. விட்றாத..”
“நீ நேரா பாத்து போடா.. ஒலட்டாத…”

மிதிவண்டியிலிருந்து மலரவன் கீழே விழுந்தான். அண்ணன் கையை விட்டக் கோபமும், கீழே விழுந்த வலியும், மலரவன் கண்களில் நீராய் உருவெடுத்தது.

“டே.. கால நல்லா ஒதறுடா.. எதுக்குடா அழுகுர?” – மிதிவண்டியை தூக்கி நிறுத்தியபடியே பைஞ்செழியன்
“போ நீ.. எதுக்கு கைய விட்ட…” – சத்தமாக அழுதுக் கொண்டே மலரவன்
“டே… கீழ விழுகாம யாரும் பழக முடியாது டா.. நான் பழகும் போது அப்பா இப்டி கைய விட்டு நானும் விழுந்திருக்கேன்.. இதுக்கு போய் அழுகலாமா.. சரி, வந்து அழுத்து…”
“இன்னைக்கு போதும், எனக்கு பயமாயிருக்கு…”
“ச்சீ.. சைக்கிள்ள விழுகுறதுக்கெல்லாம் பயப்படலாமா?! சரி, வீடு வரைக்கும் நான் கை எடுக்காம புடிச்சுட்டே வர்ரேன், வண்டிய எடு..”

இப்படியே மலரவனும் ஒரு வழியாக மிதிவண்டி பழகியாயிற்று.

பேய் படங்கள் ஏதாவது பார்த்து பயங்கர கனவுகள் கண்டு விழித்தெழும் மலரவன் பலமுறை பைஞ்செழியன் அருகிலிருப்பதைக் கண்டு பயமில்லாமல் உறங்குவதுண்டு.

*****************************************

“சார்.. சார்… ஸ்கூல் வந்துருச்சு சார்..” – என்று மலரவன் நினைவோட்டங்களை தடுத்தவாறு ஓட்டுனர் சொன்னான்.

பூமாலைகள் கழுத்தில் விழ, இசைக் கருவிகள் முழங்க, தானுந்தை விட்டு கீழே இறங்கினான் மலரவன். சிறுவர்கள் நடிக்கும் நாடகங்கள் ஓடிக்கொண்டிருந்தது அவ்வேளையில். அதைக் கண்டதும் தனது பள்ளி ஆண்டு விழா மலரவனுக்கு ஞாபகம் வந்தது!

*****************************************

“அண்ணே.. பசங்கெல்லாம் சிரிக்குறாங்கண்ணே.. மேடைல ஏற கூச்சமா இருக்குண்ணே!” – முதல் முறை மேடையில் ஏறத் தயங்கிய மலரவன்
“தம்பி… யாரு மேடைல ஏறிப் பேசுனாலும் கீழ கிண்டலடிக்குறதுக்குன்னே நாலு பேரு உக்காந்துருப்பான். அவன் அவன் வேலைய பாக்கட்டும், நீ உன் வேலையைப் பாரு.” – பைஞ்செழியன்
“அண்ணே, எனக்கு வெட்கமா இருக்குண்ணே!”
“பயப்பட வேண்டியதுக்கு தான் பயப்படனும். வெட்கப் பட வேண்டியதுக்குத்தான் வெட்கப்படனும்!”
“நீ முன்னாடி உட்காந்தனா, நான் உனயப் பாத்தே பேசிருவேண்ணே..”

அண்ணன் பதில் சொல்றதுக்கு முன்னாடியே அடுத்த நிகழ்ச்சியான பேச்சுப் போட்டிக்கான போட்டியாளர்களை மேடைக்கு அழைத்தனர். அவசர அவசரமாக மேடைக்கு ஓடிவிட்டான் மலரவன்.

அண்ணன் உட்கார்ந்திருக்கும் இடத்தை அலசிய படியே பேசிக் கொண்டிருந்தான் மலரவன். பேச்சுப் போட்டி முடியும் வரையில் அண்ணன் அவன் கண்ணுக்கு கிட்டவில்லை. பேச்சுப் போட்டி முடிந்ததும் எழுந்த கைத்தட்டல் ஓசையில் முதல் ஒலி அவன் அண்ணனுடையது என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது.

கீழே வந்ததும் அண்ணனைப் பார்த்தான். ‘ஏண்ணே, முன்னாடி ஒக்காரச் சொன்னா உனைய ஆளையேக் காணோம்?!’ என்று உரிமையோடு கோபப்பட்டான்.
“நான் முன்னாடி ஒக்காந்திருன்தேன்னா நீ எனைய மட்டும் தான் பாத்திருப்ப… இப்ப எல்லாரையும் பாத்து பேசி கலக்கிட்ட… பாத்தியா கைத்தட்ட?!” – பைஞ்செழியன்.

*****************************************

கைத்தட்டல் ஒலி இவனை மீண்டும் தன்னுணர்வுக்கு கொண்டு வந்தது.
“என்ன, நிகழ்ச்சி உங்களுக்கு பிடிச்சுருக்கா?” – தலைமை ஆசிரியர் மணிமாறன்
“ம்ம்.. நல்லா இருக்கு. அந்த பொண்ணு நல்லா நடிச்சுச்சு” – என்று தடுமாறிய படி சமாளித்தான் மலரவன்.
“ஓ.. அந்தப் பொண்ணா… அந்தப் பொண்ணு பேரு நிலா.. நல்லத் தெறமையான பொண்ணு…” – இன்னும் பேசிக் கொண்டே போனார் மணிமாறன்.

ஆனால், ‘நிலா’ என்ற பெயரைக் கேட்டதும் மலரவன் வேறு எங்கோ சென்றுவிட்டான்….

*****************************************

மலரவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வேளை அது. சனி, ஞாயிறு விடுமுறைக்காக அண்ணனும் வீட்டிற்கு வந்திருந்தான். இரண்டு பேரும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க வண்டியில் சென்றனர்.

“யாரு டா நிலா?” – வண்டி ஒட்டிக் கொண்டிருந்தபடியே பைஞ்செழியன்
“என்ன?” – கேட்காதது போல் மலரவன்
“யாரு டா நிலா?” – கொஞ்சம் அழுத்தமாய்
“என்னோட கிளாஸ்மேட்ணே(உடன்பயிலும் மாணவி)…”
“கிளாஸ்மேட் தானா??”
“ஃபிரண்டுணே(தோழி)”
வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு மலரவனை கீழே இறங்கச் சொன்னான் பைஞ்செழியன்.

“ஒன்னோட ஃபோன எடுத்து பாத்தேனே.. ஒரு நாளைக்கு மூணு நாலு தடவ பேசுற?!!” – பைஞ்செழியன்
“அண்ணே… அது…”
“அது எப்புடி டா? எவ்வளவு செலவு பண்ணி படிக்க வச்சாலும், உடனே அப்பா அம்மாவ மறந்துட்டு காலேஜுல பொண்ணுக்கு பின்னாடி சுத்துறீங்க?! நீ இத்தன தடவ ஒரு பொண்ணுட்ட பேசுற அப்புடின்னு அப்பாட்ட சொன்னாலும் ஏதாவது படிப்பு சம்பந்தமா(தொடர்பா) டவுட்ஸ்(ஐயங்கள்) கேட்டுருப்பான்னு சொல்லுவாங்கடா நம்ம அப்பா! அந்த நம்பிக்கைய கெடுத்துறாத…”
“அண்ணே… அவ தான் ஃபோன் பண்ணா…”
“இந்த நேரத்துல எல்லாருக்குமே வர்றது தான் இந்த infatuation(இனக்கவர்ச்சி). நானும் உன்னோட வயச கடந்து வந்தவன் தான். தப்பான வழில போய் கஷ்ட(துயர) படுற ஆளுங்கள நான் நேர்லயே பாத்திருக்கேன்! உனக்கு அப்புடி எதுவும் ஆகக்கூடாதுன்னு தான் சொல்றேன்… வண்டியில ஏறு..” – என்று சொல்லி வண்டியை எடுத்து நகரத் தொடங்கினான் பைஞ்செழியன்.

*****************************************

“இப்பொழுது நமது சிறப்பு விருந்தினரான திரு.மலரவன் சிறப்புரை கொடுத்து விழாவை நிறைவு செய்வார்!” என்று மேடையில் ஒலிபரப்பப்பட்டது.

50 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கிவிட்டு பேச்சைத் தொடங்கினான் மலரவன்…

“எல்லாருக்கும் வணக்கம். வர்ற வழியில நியூஸ்பேப்பர்(செய்தித்தாள்) படிச்சுட்டு வந்தேன்… ‘IIT மாணவன் தற்கொலை!’ அப்டின்னு போட்டிருந்துச்சு.. ரொம்ப வருத்தமா ஆயிருச்சு எனக்கு! இது மட்டும் இல்ல, 10வது 12வது படிக்கும் மாணவர்களும் தற்கொலை செஞ்சுக்குறாங்க! வாழுற எல்லாரும் பயப்படுற ஒரே விஷயம் (இந்த இடத்தில் – ‘கூறு (எ) நிகழ்வு’) சாவு! அதையே தைரியமா(துணிவா) சந்திச்சவங்க வாழவா முடியாது?!”

அமைதி நிலவியது… அந்த அமைதியில் அவனுக்கு பழைய சிந்தனைகள் வந்துவிட்டது!

*****************************************

மலரவன் மேற்படிப்புக்கான தேர்வில் தோற்றுப்போன நேரம் அது. அன்று இரவு தனியாக அறையில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய இறுதியான மடலை எழுதிக்கொண்டிருந்தான். ஆம், அன்று இரவு தற்கொலை செய்துக்கொள்வதே அவன் திட்டம்.

மலரவன் தூக்குக்கயிறை மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது தற்செயலாக பைஞ்செழியன் கதவைத் தட்டினான். இவன் பதிலளிக்காமல் வேகமாக கயிறைக் கட்டிக்கொண்டிருந்தான். கதவைத் திறக்க நேரம் ஆனதும் பைஞ்செழியனுக்கு ஐயம் வந்தது. உடனே கதவை உடைத்தான் பைஞ்செழியன்.

தூக்கில் தொங்க முயற்சி செய்துகொண்டிருந்த தம்பியைப் பார்த்ததும் அதிர்ந்து போய் வேகமாக அதைத் தடுத்தான். மலரவனுக்கு பளாரென்று ஒரு அரை கொடுத்தான் அண்ணன்.

“என்னடா பண்ற? லூசா நீ?”
“அண்ணன், நான் தோத்துட்டேண்ணே… அப்பா அம்மாவுக்கு இதுவரைக்கும் பாரமாவே இருந்துட்டு இருக்கேன். எதுவும் சாதிக்கல. நான் இருந்து என்ன பண்ணப்போறேன்?!”
“என்ன ஆச்சு இப்ப? உனக்கு recessionன்னால(பொருளாதாரப் பின்னடைவு) வேலை கிடைக்கல. Hiher studiesக்கு (மேற்படிப்புக்கு) முயற்சி பண்ண, அதுவும் கிடைக்கல. அவ்ளோதான?”
“வேற என்ன நடக்கணும்?”
“நான் இப்ப வேலைல தான் இருக்கேன். அப்பா அம்மாவும் சம்பாதிச்சிட்டு தான் இருக்காங்க. Meritல (மதிப்பெண் மூலமா) உனக்கு சீட் (இடம்) கிடைக்கலன்னா என்ன?! கொஞ்சம் செலவு பண்ணி ஒனைய நல்ல எடத்துல படிக்கிறதுக்கு சேத்துவுடுறேன். அங்க போய் நீ நல்லா படிச்சீனா ஒனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கப்போகுது.”
“சரி அண்ணே..,”
“மொதல்ல அழுகுறத நிறுத்து. இனிமே இப்படி ஒரு முடிவ எடுக்க மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணு(வாக்கு கொடு)!”

*****************************************
“சார்… சார்… என்னாச்சு சார்!” என்று மணிமாறனின் குரல் கேட்டது!
“ஒண்ணுமில்ல…” என்று சொல்லிவிட்டு மலரவன் பேச்சைத் தொடர்ந்தான்…

“இன்னைக்கு உச்சில இருக்க எல்லாரும் ஒரு நாள் அவமானப் பட்டிருக்காங்க, தோத்துருக்காங்க! மாணவர்கள் தற்கொலைய குறைக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு தேவ… 1000 மதிப்பெண்கள விட அவன் உயிர் பெருசுன்னு அவனுக்குத் தெரியனும்! இதுக்காக என்னால முடிஞ்ச ஒண்ண செய்யப் போறேன்! எந்த நிலைல இருக்கவங்களா இருந்தாலும் தேர்வுலத் தோத்துட்டாங்கன்னா அதுக்கான மாற்றுப் படிப்பு குறைந்த கட்டணத்துல வழங்குற மாதிரி ஒரு கல்வி நிலையம் ஆரம்பிக்கப் போறேன்! என் நிறுவனத்திலேயே அவங்களுக்கு அதிக வேலை வாய்ப்பும் கொடுப்பேன்!”

கைத்தட்டல்…

தொடர்ந்து பேசிய மலரவன்,”உங்களுக்கு என்ன பிரச்சனனாலும்(சிக்கல்), என்ன உதவி தேவப் பட்டாலும் என்கிட்ட வந்து கேளுங்க… நான் உங்க அண்ணன் மாதிரி…” என்று சொல்லி முடிக்கும் போது அவன் கண்களில் இருந்து நீர் அரும்பியதை அவனால் தடுக்க முடியவில்லை!

தொடர்புடைய கதைகள்:

அம்மா
அப்பா