எங்கேயோ இருக்கும் என்னைத் தேடி நான்!

Posted on ஓகஸ்ட் 30, 2010

17


அவன் மேலாடை எதுவும் இல்லாமல் நின்றுக்கொண்டிருந்தான். அவன் எதிரில் அப்படியே அவனைப் போலவே இன்னொருவன் அதே நிலையில் நின்றுக்கொண்டிருந்தது அவனுக்கு வியப்பாக இருந்தது.எந்த இடத்தில் அவன் நின்று கொண்டிருக்கிறான் என்று புரியாமல் இருக்கும் போதே திடீரென்று ஒருவன் வானத்திலிருந்து இருவருக்கும் நடுவில் வந்து தரையிறங்கினான். அவனும் அதே கோலத்தில் இருக்கும் அவன்!

“டே.. நன்னெறி.. இங்க இருக்கியா? இல்ல வேற எதோ ஒலகத்துல இருக்கியா?!”

வகுப்பறை முழுதும் சிரிப்பொலி.. அரைமணி நேரம் ஆசிரியை உரைத்தது எதுவும் நன்னெறியின் காதில் விழவில்லை.. இறுதியாகச் சொன்ன “வெளியே போ!” மட்டும் விழுந்தது. வெளியேச் சென்றான்.

அரசுக் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு உளவியல் படிக்கும் நன்னெறிக்கு அவனையே புரிந்துக்கொள்ள முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தான்.

இரவு 12:00 மணி…

விடுதியில் அவன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நன்னெறியை நான்கு பேர் போட்டு அடித்தனர். அவர்களுடன் போராடிக் கொண்டிருந்த பொழுதே அவன் தலையில் முட்டைகள் உடைக்கப்பட்டன, தக்காளிகள் முகத்தில் அப்பப்பட்டன..

“டே.. நன்னாரி நீ அலகா(அழகா) பொறந்துட்டியே.. டே.. நன்னாரி நீ அலகா பொறந்துட்டியே..”

“டே.. இதே மாதிரி.. அப்பிடியே இதே மாதிரி எனக்கு ஏற்கனவே நடந்த மாதிரி இருக்கு டா!”
“ம்ம்ம்.. அது போன வருஷம்.. இது இந்த வருஷம்..”
“போன வருஷம் நம்ம இந்த ரூம்லையா இருந்தோம்! நீ இதே சட்டையா போட்டிருந்த! போடா..”
“இவனுக்கு தேவையில்லாம கேக்(இனியப்பம்) வாங்கி காச வீணடிச்சுட்டீங்களே டா!”

நன்னெறி ஒரு சாயுங்கால நேரத்தில் தனது டுவிட்டர் கணக்கில் புகுந்து படித்துக் கொண்டிருந்தான்!

ssrk Remember you are unique, just like everyone else! 😛

(நினைவு கொள்! நீ தனித்துவம் பெற்றவன்.. எல்லாரையும் போல.. :P)

உடனே, நன்னெறி மனதில் பல ஐயங்கள் எழுந்தன. கணினியில் யாகூ தேடுபொறியின் உதவி மூலமாக கனவுகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல படித்தான். அது அப்படியே ஒரு விக்கிப்பீடியா பக்கத்தில் போய் முடிந்தது. இவனுடைய மனதில் தோன்றுவதும், அந்தப் பக்கத்தில் போட்டிருந்த கருத்துக்களுக்கும் ஏதோ ஒற்றுமை இருந்தது போல் தெரிந்தது அவனுக்கு.

“தம்பி, நீ எனைய ஒரு டாக்டரா(மருத்துவர்) நினைக்காத.. ஒன்னோட ஃபிரண்டா நினச்சுக்கோ! நீயும் சைக்காலஜி(உளவியல்) தான படிக்குற?”
“என்ன சார்?! எனக்கு பைத்தியம் புடிச்சுருக்குன்னு என்னோட ரூம்மேட்ஸ்(அறைத் தோழர்கள்) சொன்னாங்களா?”
“அவங்க உனைய பத்தி எதுவும் சொல்லல? நீ ரூம்ல பேசுறது எதுவும் அவங்களுக்கு புரியலையாம்.. அதான், ஏன்ட்ட சொன்னா எனக்கு புரியும்னு உனைய இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க!”
“சார்.. இப்ப நான் உங்கட்ட பேசுறது கூட ஏற்கனவே நடந்த மாதிரி இருக்கு சார்.. அப்பறம் பல நேரம் கனவுல நடக்குறது பின்னாடி நடக்குற மாதிரி இருக்கு சார்”
“இது எல்லாருக்கும் இருக்குறது தான் பா! Precognitive Dreamsனு(முன்புலனுணர்வுக் கனவுகள்) சொல்லுவாங்க!”
“கனவு கருப்பு வெள்ளையா வருமா? கலரா வருமா? நம்ம பாக்குற மாதிரி வருமா? இல்ல நம்மளே அதுல தெரிவோமா? கனவ நம்ம உணர்றோம்.. கனவுலேயே பேசுறோம், கைய கால அசைக்கிறோம். இதெல்லாம் எப்புடி?”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? (தொடர்பு)”
“கனவ பத்தி முழுமையான அறிவியல் ஆய்வு இல்ல.. எனக்கென்னமோ கனவுக்குள்ள இருக்க ‘நான்’ வேற, கனவு காணுற ‘நான்’ வேறன்னு தோணுது.. இதுவரைக்கு நான் பாக்காத ஆளுங்களும், போகாத இடங்களும், கனவுக்குள்ள இருக்க எனக்கு நல்லா தெரியுது…”
“தம்பி.. நீ சாமி, பேய், போன ஜென்மம், மறு ஜென்மம்(பிறவி) இதெல்லாம் நம்புவியா?”
“நான் செய்யுறது எல்லாமே என்னோட கட்டுப்பாட்டுல இருக்குன்னு நம்புறேன் சார்..”

“டே, எங்க டா கிளம்பிட்ட? ‘எந்திரன்’ படத்துக்கு டிக்கட்(அனுமதிச்சீட்டு) வாங்கியாச்சு? இன்னைக்கு எல்லாரும் போறோம்..”
“நான் பெங்களூரு போறேன்.. ஒரு சைண்டிஸ்ட பாக்கப் போறேன்!”
“யாரு டா?”
“Dr.அண்ணாமலை(முனைவர்)”

“சார், உங்கட்ட கொஞ்சம் பேசலாமா?”
“யாருப்பா நீ? என்ன விஷயம்(செய்தி)?”
“நான் செக்கன்ட் இயர் சைக்காலஜி ஸ்டூடன்ட் சார்..(இரண்டாம் ஆண்டு உளவியல் மாணவன்).உங்களோட ரிசர்ச்(ஆய்வு) பத்தி படிச்சேன். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு சார். அதப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.”
“ம்ம்ம்.. பொதுவா இந்த உலகத்துல ரெண்டு வடிவம் இருக்கு! ஒன்னு Matter form(பொருள் வடிவம்), இன்னொன்னு Wave form(அலை வடிவம்). லைட்டுக்கு(ஒளி) ரெண்டு வடிவமும் இருக்கு. எங்களோட ஆய்வு என்னன்னா பொருள் வடிவத்துல இருக்க எல்லாத்தையும் அலை வடிவத்துக்கு மாத்த முடியும்னா transportation(போக்குவரத்து) ரொம்ப ஈசியாயிரும்(எளிதாயிரும்). Rocket launchingகு(எறிகணை அனுப்புதல்) கூட உதவலாம்!”
“ரொம்ப நல்ல ஐடியா(சிந்தனை) சார்!”
“அலையா மாறுன பொருள் atmospheric effectனால(வளிமண்டல விளைவுகள்) பாதிக்கப் படாது. ஒரு invisible optical fiber(கண்ணுக்குத் தெரியாத ஒளியிழை) அத சுத்தியிருக்கும் effect(விளைவு) இருக்கும். சூரியனோட ஈர்ப்புவிசைக்(attractive force) கூட இந்த அலைய திசைத் திருப்ப முடியாது!”
“அதுக்கப்பறம் நீங்க இத உயிருள்ள பொருளுக்கும் பண்ணலாம்னு ஆய்வு செஞ்சீங்களே? அது என்ன ஆச்சு?”
“ம்ம்ம்.. ஒரு கொரங்குக்கு பண்ணோம்! அது வெற்றிகரமா முடிஞ்சுச்சு… ஒரு மணிநேரம் ஒரு உயிருள்ள பொருள உயிரில்லாம ஆக்கி திரும்ப பழையபடி உயிர்க்கொடுத்து சாதன பண்ணியிருக்கோம்!”
“இத மனுஷங்களுக்கும்(மனிதர்களுக்கும்) பண்ண முடியுமா?”
“அதுக்கு தான் போராடிட்டு இருக்கோம்! ஒரு volunteer கெடச்சா போதும், நாங்க அத நிறைவேத்திருவோம்! இனிமே மனிதர்களும் ஒரு data(தரவு) மாதிரி தான்!”
“நான் உங்களுக்கு உதவுரேன் சார்.. நீங்க எனைய வச்சு test பண்ணிக்கோங்க!”

நன்னெறிக்கு தான் செய்வது எல்லாமும் புதிதாக செய்வது போல் இல்லை. ஏற்கனவே செய்தது போல் இருந்தது! முனைவர் அண்ணாமலை அவர்களின் ஆராய்ச்சி நன்னெறியால் முழுமை அடைந்தது. அதன் பின் மீண்டும், நன்னெறி அவரைச் சந்திக்கச் சென்றான்!

“சார், எனைய திரும்ப அலைவடிவத்துக்கு மாத்துங்க சார்! நான் இந்த உலகத்த தாண்டிப் போகணும்!”
“தம்பி, அங்க எங்களோட கட்டுப்பாடு இருக்காதுப்பா.. அப்பறம், ஒன்னத் திரும்பிக் கொண்டுவர முடியாதுப்பா!”
“அதப் பத்தி நீங்க கவலைப் பட வேணாம் சார்!”

அவர் தொடர்ந்து மறுத்துக் கொண்டே இருந்ததும், நன்னெறி ‘தற்கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டினான். யாருக்கும் தெரியாதவாறு ஒரு சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நன்னெறியை அலைவடிவத்துக்கு மாற்றி விண்ணில் ஏவிவிட்டார்!

அந்த ‘நன்னெறி’ அலை பரவிப் போய்க் கொண்டேயிருந்தது! ஒரு நிலையில், அந்த அலை சில மாறுதல்களை அடைந்தது. அந்த அலை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சின்ன சின்ன துகள்களாக விரிந்தன.. அந்த துகள்கள் எல்லாம் அப்படியே ஒன்று சேர்ந்தன – ஒரு மனிதன்!

அந்த மனிதன் அப்படியே அங்கிருந்து ஒரு ஈர்ப்பு விசையில் ஒரு நிலத்தில் விழுந்தான். மெதுவாக கண் விழித்துப் பார்த்தான். எதுவுமே புரியவில்லை. மெதுவாக எழுந்தான்!

அவன் மேலாடை எதுவும் இல்லாமல் நின்றுக்கொண்டிருந்தான். அவன் எதிரில் அப்படியே அவனைப் போலவே இன்னொருவன் அதே நிலையில் நின்றுக்கொண்டிருந்தது அவனுக்கு வியப்பாக இருந்தது.எந்த இடத்தில் அவன் நின்று கொண்டிருக்கிறான் என்று புரியாமல் இருக்கும் போதே திடீரென்று ஒருவன் வானத்திலிருந்து இருவருக்கும் நடுவில் வந்து தரையிறங்கினான். அவனும் அதே கோலத்தில் இருக்கும் அவன்!

பின்குறிப்பு: நன்னெறி செய்வதெல்லாம் ஏற்கனவே செய்தது போல் இருந்தது எப்படி? அவன் கனவுக்குள் வந்த இன்னொரு ‘நன்னெறி’ யார்? அவன் இப்பொழுது இருக்கும் இடம் என்ன? அவன் முன் நிற்கும் அவன் யார்? இந்த விடைக்கெல்லாம் நன்னெறி அன்று படித்த விக்கிப்பீடியா பக்கம் – Multiverse விடையளிக்கும்.