வெளிச்சத்தின் நிழல்

Posted on ஓகஸ்ட் 1, 2010

2


அனைவருக்கும் நண்பர்கள் திருநாள் வாழ்த்துக்கள்!

நாள்காட்டியை மேய்ந்துக் கொண்டிருந்த ஆளவந்தானின் விரல்கள் கும்பம் என்ற கட்டத்திற்கு நேராக வந்து நின்றது!

கும்பம் – லாபம்

அளவில்லா மகிழ்ச்சி ஆளவந்தானுக்கு! கடந்த ஒரு ஆண்டாகவே கடையில் விற்பனை சரியில்லை. தடைப்பட்டுக் கொண்டிருக்கும் மகளின் திருமணமும், மகனின் கல்லூரி படிப்பும் கேள்விக்குறியாக இருந்தது. கோவில் பூசாரிக்குப்(அத்தன்) போன பணமும், ஒண்டிப்புலி சாமியார் மடத்துக்குப் போன பணமும் மகனின் கல்லூரி கட்டணத்தொகைக்கு ஈடாகியிருக்கும் என்பது இன்னொரு கூற்று.


நல்ல நேரம் – கா. 09:30 – 11:30 மா. 04:30 – 05:30

இப்பொழுது நேரம் சரியாக 09:07:45… இருந்த ஒரே வேலையாளின் மனைவி உடல்நிலை சரியில்லாததால், இன்று முதலாளியாகவும், வேலைக்காரானாகவும் பணியாற்றும் பொறுப்பில் அமர்ந்திருந்தார் ஆளவந்தான்.

ஆளவந்தான் சில்க்ஸ்
கைராசியான கடை

வாசலில் வைக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரப் பலகை அழுக்குக் கூட துடைக்கப் படாமல் இருந்தது.

கடைக்குள்ளே ஆளவந்தான் அமரும் இடத்திற்கு பின்னால் இருக்கும் சுவரில் தொங்கவிடப்பட்ட 6 சாமி படங்களும் சந்தனப்பொட்டு, மலர் ஒப்பனையுடன் பளீரென மின்னிக் கொண்டிருந்தது. ஊதுவத்தியின் மனம் நிறைந்திருந்தது கடை. ஆனால், நுகர்வோர் தான் யாரும் எட்டிக்கூட பார்க்கவில்லை.

ஒண்டிப்புலி சாமியார் விடுதலையானார்!

இரண்டு மாதங்களுக்கு முன் ‘வ’ எழுத்து நடிகையுடன் ஒண்டிப்புலி சாமியார் உல்லாசமாக இருந்த காணொளி மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த இரண்டு நாட்களில், தலைமறைவாயிருந்த ‘ஒண்டிப்புலி’ சாமியாரை காவல் துறையினர் நெல்லூரில் வைத்து பிடித்து கைது செய்தனர். கைதாகி இருந்த நாட்களில் அவர் தியானத்தில்* இருந்ததால் வழக்கு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இதனையடுத்து ஒரு வாரம் முன் நடந்த விசாரணையின்* போது, தன் மீது உள்ள குற்றச்சாட்டை மறுத்து, “நான் அவன் இல்லை!” என்று வாதாடினார் ஒண்டிப்புலி. “இதயே எத்தன தடவ ரீ-மேக்* பண்றது?” என்று நீதிபதி கோபப்பட்ட நிலையில், “நான் அவளும் இல்லை!” என்று வாக்குமூலம் கொடுத்தார் ஒண்டிப்புலி! “சில பல” சோதனைகள் அவர் பக்கம் இருந்ததால் அவர் எந்த நிபந்தனையுமின்றி* விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது. இதனால், ‘ஒண்டிப்புலி’ பக்தர்கள்*, அவர்கள் மேற்கொண்ட 3 நாள் உண்ணாவிரதத்தை* கைவிட்டனர்.

ஆளவந்தான் இந்தச் செய்தியைச் செய்தித்தாளில் படித்தார். மறுபடியும் மகிழ்ச்சி. நாளை ஒண்டிப்புலி சாமியாரின் ‘தியான பீடத்திற்கு'(ஆழ்நிலையில் அமருமிடம்) சென்று அவரை சந்தித்து ஆசி பெற்று மடத்திற்கு ஒரு ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும் என எண்ணினார். கல்லாப்பெட்டிக்குள் இருப்பது மொத்தமே நான்காயிரம் ரூபாய் தான்!

“அடுத்த வாரம், மகனுக்கு கல்லூரியில் பணம் கட்ட வேண்டும், கல்யாணத் தரகருக்கு பணம் கொடுக்க வேண்டும். எல்லாம் இன்று வியாபாரம் (விற்பனை) ஆவதை பொறுத்து தான் இருக்கிறது.எல்லாம் நல்லபடியா நடக்கணும்…” – ஆளவந்தானின் எண்ண ஓட்டங்கள்…

“டிங் டிங் டிங் டிங்…” – பக்கத்துச் சிறுவர் பள்ளியில் மணியடித்தது!

அந்த மணிச் சத்தம் நிற்கும் அந்த நேரத்தில் (09:30) மூன்று பேர் ஆளவந்தானின் முன் வந்து நின்றனர். நடுவில் நின்று கொண்டிருந்தவர் கருப்பு நிறத்தவராய் ஆறடி உயரத்தில், அகலமான தோள்களுடனும், முறுக்கு மீசையுடன் மிரட்டலாய் இருந்தார்.

கழுகுக்கண் – அவர் கையில் பச்சைக்குத்தி இருந்தது!

கழுகுக்கண் உடன் இருந்தவரில் ஒருவர் அவரை விடச் சற்று மூத்தவராய்க் காட்சியளித்தார். இன்னொருவன், கல்லூரியில் படிக்கும் இளைஞன் போல இருந்தான், பரட்டைத் தலையுமாய், மடித்துவிட்டச் சட்டையுடன்…

“அண்ணாச்சி… என்னோட பொண்ணு கல்யாணத்துக்கு பட்டுப் பொடவ எடுக்கணும்.” – கழுகுக்கண்
“பொம்பளைங்க யாரும் வரலையா?!” – ஆளவந்தான்
“இது எங்க குடும்ப வழக்கங்க.. பொம்பளைங்களுக்கு குடும்பத்துல உள்ள ஆம்பளைங்களும், ஒரு மூத்தவரும் மட்டும் போய் எடுக்கணும், ஆம்பளைங்களுக்கு அவங்க எடுப்பாங்க!” – கழுகுக்கண்
“அப்டியா?! எந்த ஊரு நீங்க?”
“உள்ளூரு தாங்க… இவரு என்னோட மூத்த மச்சினரு.. சிங்கமுத்து.. இவன் என்னோட ரெண்டாவது பைய்யன்.. சிலம்பரசன்.. நான் கழுகுக்கண்..”
“சரி சரி… வாங்க.. உள்ள பொடவைங்கெல்லாம் பாருங்க..”
“என்ன அண்ணாச்சி கடைல ஒருத்தரையும் காணோம்?”
“இருந்த ஒருத்தனும் இன்னைக்கு லீவ்(விடுப்பு) போட்டாங்க… கல்யாணம் எங்க வச்சுருக்கீங்க?”
“எல்லாம் நம்ம காத்தமாரியம்மன் கோயில்ல தாங்க! என்னங்க நீங்க ஏதோ சோகமா இருக்கீங்க?”
“ம்ம்ம்… எனக்கும் கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கு.. ஜாதகத்துல ஒரு கொற இருக்கு.. அதனால, கல்யாணமும் தள்ளி போய்ட்டே இருக்கு!”

“ஜாதகத்துல(சாதகம்) கொறையா?!” – சிரித்தார் கழுகுக்கண்
தீவிரமாய் சேலைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த சிங்கமுத்துவும், சிலம்பரசனும் என்னப் பேசுகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தனர்.
“என்னோட பொண்ணு ஜாதகத்துல இல்லாத கொறையா?!” – தொடர்ந்தார் கழுகுக்கண்
“நான் பொய் சொல்லி கல்யாணம் நடத்த விரும்பலங்க.. நாளைக்கே கல்யாணம் ஆனப்பொரவு மாப்பிளைக்கு ஏதாவது ஆச்சுனா, என்னோட பொண்ணு வாழ்க்க தான வீணாகும்!” – ஆளவந்தான்
“அட.. ஒங்கள யாருங்க பொய் சொல்லச் சொன்னா? ஜாதகத்துல இருக்க கொறைய நிவர்த்தி(சரி செய்வது) பண்ணலாமுங்க!” – கழுகுக்கண்

“ம்ம்ம்… ஏற்கனவே சாதிக்குள்ள பொண்ணு எடுக்கணும், நல்லா நிறமாயிருக்கணும், நல்லா படிச்சுருக்கணும், குடும்பத்துக்கு நல்ல பேர் இருக்கணும், அப்டி இப்டின்னு இந்த காலத்து பசங்களுக்கு பொண்ணுங்க கிடைக்குரதே குதுரக்கொம்பாயிருக்கு! இதுல ஜாதகம் வேறையா?! உங்க காலத்துல நெறையா வாய்ப்பு இருந்துச்சு.. இப்போ ஒவ்வொரு குடும்பத்துலயும், ஒன்னோ ரெண்டோ தான இருக்கு!” – என்று தன் ஆதங்கத்தைத் தீர்த்தான் சிலம்பரசன்!

“கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா…
இல்ல ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கில்லாமா..”
– சிலம்பரசன் கைபேசி அழைப்புமணி சத்தமாக ஒலித்தது

“ஹலோ.. சொல்லு டா…” – என்று முணுமுணுத்துக் கொண்டே தள்ளிச் சென்றான் சிலம்பரசன்.

“இவன் பேச்செல்லாம் நம்ம கேட்க வேண்டியிருக்கு…” – கழுகுக்கண் ஆளவந்தானிடம்!
“அப்பா.. ஒங்க ஃபோன குடுங்கப்பா.. என்னோடதுல டவர் கெடைக்கல…” – என்று மறுபடியும் உள்ளே வந்தான் சிலம்பரசன் .

“நானும் ஏர்ட்டல் தானடா வச்சுருக்கேன்…” – கழுகுக்கண்
“தம்பி… இந்தாங்க… இதுல பேசுங்க.. இது டொகொமோ” – ஆளவந்தான்
“பரவாயில்ல அங்கிள்..” – தயங்கினான் சிலம்பரசன்
“அட.. சும்மா பேசுப்பா.. கட வாசல்ல நின்னு பேசு, அப்டினா தான் நல்லா டவர்(அலைப்பரப்பியின் அலை) கெடைக்கும்…” – என்று ‘துரத்தி’ வழியனுப்பி வைத்தார் ஆளவந்தான்!

“இந்த இளவட்டம் அப்டி என்ன தான் பேசுவானுங்களோ? அவனுங்க வாய்க்கு பக்கத்துல போய் காத வச்சு கேட்டாலும் கேக்கமாட்டீங்குது!” – கழுகுக்கண்

“சரி, அத விடுங்க… ஜாதகத்துல இருக்க கொறைய எப்டி நிவர்த்தி பண்றது?!” – ஆளவந்தான்
“அது எங்க மச்சினருக்கு தான் நல்லா தெரியும்…” – கழுகுக்கண் சிங்கமுத்துவை பார்த்தார்!
“கொடைக்கானல் பக்கத்துல பண்ணைக்காடுல ஓலைச்சுவடி சாமியாருன்னு ஒருத்தர் இருக்கார்… அவர் ஜாதகக் கொறைய தீக்குறது மட்டுமில்ல, பிடிச்ச பேய்கள ஓட்டுறது, எந்த நோய்னாலும் சரி செய்யுறதுன்னு எல்லாமே செய்வாரு!” – சிங்கமுத்து
“ம்ம்ம்… நல்ல நேரம் தவறிரக் கூடாதுன்னு அவ அம்மாவுக்கு வலி வர்றதுக்கு முன்னாலயே பிரசவம் பாத்து நல்ல நேரத்துல பொறந்தா என் மவ.. பேர் ராசி பாத்து தான் பேர் வச்சோம்… குல தெய்வத்துக்கு எல்லா வேண்டுதலையும் நிறைவேத்துனோம்.. அப்டி இருந்தும் பாத்தீங்களா?!” – ஆளவந்தான்
“விடுங்கையா… இதுக்கு ஏதாவது காவு கொடுத்தா எல்லாம் சரியாயிரும்.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க!” – சிங்கமுத்து

பொருள் ** அளவு ** விலை

பட்டுப்புடவைகள் ** 10 ** 15,000

மொத்தம் ********* 15,0000

கட்டணச்சீட்டு அச்சாகி வந்துக்கொண்டிருந்தது. சிங்கமுத்து ஆளவந்தானிடம் தொகையை கொடுத்துவிட்டு பத்து சேலையும் ஈகநார்ப் பையில்/மழைக் காகிதத்தில்(Polythene Bag) பெற்றுக்கொண்டார்.

ஆளவந்தானின் தலைக்குப் பின்னாடி சுவரில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, “இது எங்க எடுத்தது?!” என்று கேட்டார் கழுகுக்கண்.
“அதுவா?! காசிக்கு நான் போயிருந்தப்ப எடுத்தது!” – பெருமிதத்துடன் ஆளவந்தான்

அங்கே இருந்த மற்ற புகைப்படங்கள் பற்றியும் தொடர்ந்து உசாவினார் கழுகுக்கண்.

எல்லாம் கேட்டவுடன் கழுகுக்கண் ஆளவந்தானுக்கு கைகொடுத்துக் கொண்டே பேசியது…
“ஒங்க கடைக்கு வந்தது ரொம்ப சந்தோசமுங்க… என் மவ கல்யாணம் முடிஞ்ச கையோட என் மச்சினரு பேத்திக்கு காத்து குத்துறோம்… உங்க கட ராசி(கோள் நிலை) எப்டி இருக்குன்னு பாப்போம்!”
“நல்ல ராசியான கடங்க இது..” – ஆளவந்தான்
“ம்ம்ம்… தெரியுது… ஒங்க ராசி என்ன?”
“கும்பம்”
“அட… நீங்களும் நம்ம ராசி(கோள் நிலை) தானா!! அப்பச் சரி…”

ஒரு நிமிட கைக்குலுக்கல்-உரையாடல் முடிந்தது.

கழுகுக்கண் கடையை விட்டு வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஆளவந்தானின் மனதில் சிந்தனை ஓடியது.

ஆளவந்தானின் மூளை : ” நமக்கும் அவருக்கும் ஒரே ராசி. இந்த வியாபாரத்துல நமக்கு லாபம்னா (பேறு)அவருக்கு நஷ்டம்(இழப்பு) தான? ”

ஆளவந்தானின் மனது : ” சரி… இன்னைக்கு சாயுங்காலத்துக்குள்ள அவருக்கு வேற எப்டியாவது லாபம் வந்து சேரும்! காலண்டர்ல போட்டிருக்குறது பொய்யாகுமா?! “

ஒண்டிப்புலி சாமியார் மடத்திற்கு பணத்தை எடுத்து வைப்பதற்கு குனிந்து பார்த்தார் ஆளவந்தான்….

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கல்லாப்பெட்டியைக் காணவில்லை!

உடனே வேகமாகச் சென்று கடைக்கு வெளியில் பார்த்தார். மூவரையும் காணவில்லை. தலையில் அடித்துக் கொண்டார்…

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கையில் அணிந்திருந்த ராசிக்கல் மோதிரம் காணவில்லை!

உடனே கடைக்குள் வேகமாக சென்று காவலர்களை அழைக்கப் போனார்….

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கைபேசியைக் காணவில்லை!

* குறியிட்ட சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்கள்

தியானத்தில் – ஆழ்நிலையில்
நிபந்தனை – கட்டுப்பாடு
ரீ-மேக் – மறுபடைப்பு
பக்தர்கள் – இறையன்பர்கள்
உண்ணாவிரதத்தை – உண்ணாநிலையை

குறிப்பு:

உலகத்தில் நடக்கும் அனைத்தையும் அறிவியல் கூற்றுகளால் விவரிக்க முடியாதவரை எதையும் மூட நம்பிக்கை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. காட்டாக : கனவுகள். ஆனால், நாம் நம்பும் படியாக இருக்கும் சிலவற்றை நம்பாமல்(தன்னம்பிக்கை), ஏன் நம்புகிறோம் என்று தெரியாமலேயே வேறொன்றை நம்புவது ‘மூட் நம்பிக்கை’ தான்!

இந்த அருமையான ஆய்வைப் படியுங்கள்.