தமிழோடு விளையாடுவோம் – 3

Posted on ஜூலை 22, 2010

20


“செம்மொழியான தமிழ் மொழியாம்!”

சுருக்கச் செய்தி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த மாநாட்டில், நேரிணையாக பல அரங்கங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேறின. தமிழ் இணைய மாநாடும் இதனுள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கவியரங்கம், கலை நிகழ்சிகளும் நடந்தன.

அங்கே தமிழ் தகவல்நுட்ப பொருட்காட்சியில்(Tamil IT Exhibition) ஏராளமான தமிழ் மென்பொருள் குறுந்தகடுகள்(Software CDs) மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்(Tamil Virtual University) படைத்த ஆறு தொகுதிகள் கொண்ட தொழில்நுட்ப சொற்களஞ்சியம் (Six-Volume Technical Glossary) விக்சனரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

தமிழ் விக்கிபீடியா நடத்திய கட்டுரைப் போட்டிக்கான பரிசுகள் ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டது(மொத்தமாக ரூ.67,500). அது போக ஒரு அரசு ஊழியருக்கும், ஒரு இணைய உருவாக்குனருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

இந்திய முதன்மை அதிபர் திரு.பிரத்தீபா பாட்டில் தொடக்கி வைத்த இந்த மாபெரும் மாநாட்டில் தமிழ் மேம்பாட்டிற்காக பல கோடிகள் ஒதுக்கப்படுமென தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி தெரிவித்தார். தமிழ் வழியில் பயிலும் மாணாவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த தமிழ் விழாவை சிறப்பித்த சில பெரியோர்களின் பெயர்கள்…
(யார் பெயரையாவது மறந்திருந்தால் மறுமொழியில் தெரிவிக்கவும்.)
பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி
பேரா. ஆஸ்கோ பார்போலா(Prof.Asko Parpola)
பேரா. ஜியார்ஜ் ஹார்ட்(Prof.George Hart)
பேரா. உள்க்ரைன் நிக்லஸ்(Prof.Ulrike Niklas)

விளையாட்டுகள்:
நிகரொலி சொற்கள்:

* சரியாக கேட்கவில்லையா? தொலைகாட்சியின் ______ (ஒளியை/ஒலியை) கூட்டிவிடுகிறேன்!

* அலுவலகத்தில் ______ (பனி/பணி) நிறைய இருந்தாலே தலை வலி வருகின்றது!

*ஆற்றில் துவைத்தாலும் ______(கரை/கறை) துணியை விட்டு அகலவில்லை!

* அனைவரும் நுகரும் ______(வழியில்/வலியில்/வளியில்) புகை போன்ற மாசுப்பொருள்கள் கலக்கக்கூடாது!

* ஒரு பெண்ணின் _____(மனம்/மணம்) இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும்!

* முட்டாள்தனமான கோபத்துக்கு _____(இறை/இரை) பொறுமை!

ஒரு வரிசை சொற்கள்:

ஒரு மெய்யெழுத்தின் பதிமூன்று(மெய்யெழுத்தையும் சேர்த்து) வேறுபாடுகளை(உயிரெழுத்து புணர்வுகளை) மட்டுமே வைத்து வரும் சொல்லை பட்டியலிடுக!

காட்டாக: குகை (க்), தாத்தா (த்), மாமா (ம்)
(விளையாட்டின் விதியை புரிந்து கொள்வதற்கு தான் இந்த காட்டு. மேலும் உள்ள விதிகளை பார்க்கவும்)

விதிகள்:

*ஓரெழுத்து சொற்கள் எழுதக்கூடாது!
காட்டாக: கோ ,வா ,போ , தா

* பிற மொழி சொற்களை தவிர்க்கவும்!
காட்டாக: லீலை, டாட்

*பேச்சுவழக்கு சொற்களை தவிர்க்கவும்.
காட்டாக: மாமா, தாத்தா, பாப்பா

*ஒரே போன்று ஒலி தந்தாலும் வேறு வரிசையில் இருக்கும் எழுத்து வரக்கூடாது.
காட்டாக: நான், நுனி

மதிப்பீடு:

8 சொற்களுக்கு மேல் – அருமை!
5 – 8 சொற்கள் – நல்ல முயற்சி!
5 சொற்களுக்கு கீழே – தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்!

எத்தனை எழுத்துக்கள்?

தமிழில் துணைக்கால்(‘ஆ’ புணர்வு உயிர்மெய் நெடிலோடு வரும் எழுத்து) எழுத்தின் உருவத்தை நடுவாக/மையமாக கொண்டு தமிழில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன? அவை யாவை?

ஒரு வரிசையில் ஒரு எழுத்து மட்டும் தான் விடையாக கருதப்பட வேண்டும்!
காட்டாக: ‘க’ என்பது விடை என்றால், ‘கி’,’கூ’ போன்ற எழுத்துக்களை சேர்க்க வேண்டாம்!

முந்தைய விளையாட்டுகள்:

தமிழோடு விளையாடுவோம் – 1

தமிழோடு விளையாடுவோம் – 2