??????

Posted on ஜூன் 25, 2010

19


நான் இசுலாமியனா?
(உங்கள் கடையில் வந்து தினம் ஏதாவது தின்பண்டம் வாங்குவதற்கு இதை நான் சொல்லியே ஆக வேண்டுமா?)
நான் பார்பனனா?
(பலருக்கு : வெள்ளையாய் இருப்பதால் இப்படி ஒரு ஐயம் உங்களுக்கு தேவை தானா?)
நான் மலையாளியா?
(உடற்பயிற்சி மையத்தில்(Gym) வேறு வேறு மூலையில் நின்று கொண்டு ஒரு மணி நேரம் கூட இருக்கும் உங்களுக்கு இது அவசியமா? என் மூக்கு எப்படி இருந்தால் என்ன?)
நான் தேவரா?
(ஒரே ஒரு இரவு தொடர்வண்டியில்(ரயிலில்) ஒன்றாக பயணித்த உங்களுக்கு இது எதற்கு? என் மீசை எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன?)
நான் வட இந்தியனா?
(குர்கானில்(Gurgaon) நான் பழக வேண்டியிருந்த பலருக்கு : மீசையை எடுத்தால் உடனே நான் வட இந்தியனா? வட இந்தியன் தென்னிந்தியன் என்ற பிரிவு எதற்கு?)

பத்து நிமிடங்கள் உரையாடுவதற்கோ, நட்பு வளர்த்துக் கொள்வதற்கோ இந்த கேள்விகள் தேவை தானா?

நான் என்னுடைய சாதியால் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?
நான் பேசும் மொழியால் பெரியவனா? சிறியவனா?
நான் என்னுடைய நிறத்தால் மேல்தரமா? கீழ்த்தரமா?
நான் என் மதத்தால் நல்லவனா? கெட்டவனா?

என்னுடைய தாய்மொழி இது என்பதனால் இன்னொரு தாய்மொழியை கொண்டவனால் நான் வெறுக்கப்படவேண்டுமா?
என்னுடைய மதம் இது என்பதனால் இன்னொரு மதத்தினருக்கு நான் எதிரியாய் இருக்க வேண்டுமா?

நான் வேற்று மொழி குடியில் பிறந்திருந்தால் அந்த மொழியை நான் விரும்பியிருக்க மாட்டேனா?

ஒரு பிரிவினரை மட்டும் நான் வெறுத்தால் என் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து விடுமா?

என்னுடைய குடி, குலம், இனம், மொழி தான் என்னுடைய குணங்களை தீர்மானிக்கிறதா?

என் மதத்தினர், என் சாதியினர், என் மொழி பேசுபவர்கள் மட்டும் தான் எனக்கு சொந்தமா? இந்த உலகத்திற்கே நான் சொந்தமா?

என்னை கண்டிப்பாக ஒரு குறுகிய பிரிவுக்குள் திணிக்க வேண்டுமா?

நான் ‘நானாக’ இருக்க எனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும்?