வேகத்தடை

Posted on ஜூன் 13, 2010

13


இன்றோடு(ஜூன் 13) நான் இந்தப் பதிவைத் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவேறியது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்!!

“நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க போகிறது – தமிழ் நாட்டில் நடத்தப்படும் முதல் மாவட்டமிடை(Inter-District) தானுந்து போட்டி(Car race) இறுதியாட்டம்(Final Match)! இறுதியாட்டத்துக்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரு.அஜீத் குமாருக்கு எங்கள் நன்றிகள்!” – தொடர் விளக்கவுரை(Commentary) ஒலிபரப்பி மூலம் அரங்கம் எங்கும் ஒலித்து கொண்டிருந்தது!

8 கார்கள்(தானுந்துகள்) போட்டிக்கு தயாராக நின்று கொண்டிருந்தன…

வண்டி எண்கள் முதலாவது இடத்திலிருந்து எட்டாவது இடம் வரை —> 01,99,13,28,44,75,86,68

பச்சை கொடி அசைந்தது….

எல்லா கார்களும் வேகமாக நகர தொடங்கின… ஆனால், 5வது இடத்தில் இருந்த 44 (வண்டி எண்) மட்டும் மெதுவாக நகர்ந்தது…

அதனால், 44 8வது இடத்திற்கு தள்ளப்பட்டது… 8வது இடத்தில் இருந்த 68 இப்பொழுது 7வது இடத்திற்கு முன்னேறியது…

சாலை தொடங்கி சிறிது தொலைவு வரை நேராக சென்று உடனே ஒரு பெரிய திருப்பம் வரும்… அந்த திருப்பத்தில் எல்லா வண்டிகளும் வேகத்தை குறைத்து வளைத்துக் கொண்டிருந்தது… அப்பொழுது 44 மட்டும் வேகத்தை கூட்டியது… வளைந்து கொண்டிருந்த 68ஐ அடித்து தூக்கி எறிந்தது 44!!!

சேதம் அடைந்ததால் 68 வெளியேறியது…

நடந்தது என்ன??

44 -> அறிவழகன்

68 -> இன்பரசன்

இறுதியாட்டத்திற்கான தேர்வு ஆட்டங்களில் மூன்றாவது சுற்று(3rd Round) ஆட்டம் முடிந்த வேளை…

போட்டி முடிந்து தன்னுடைய பொருட்களை தனக்கு அளிக்கப்பட அறையில் இருந்து எடுப்பதற்காக போய்க் கொண்டிருந்தான் அறிவழகன்.

ஒரு இடத்தில் தன்னுடைய காலணியின் கயிறு(Shoe Lace) அவிழ்ந்திருப்பதை சரி செய்யவதற்கு ஒரு பிடிப்பிற்காக அருகிலிருந்த குட்டிச்சுவரை பிடித்தான். நறுக்கென்று உள்ளங்கையில் குத்தியது! என்னவென்று பார்த்தான் – ஒரு ஊசி இருந்தது!

அதை எடுத்துக்கொண்டு போய் தன் அறையில் வைத்து அணுக்க வில்லை (Zoom Lens) மூலம் பார்த்தான்! அந்த ஊசியோடு ஒரு சிறு கண்ணாடி(Glass) துண்டும் ஒட்டியிருந்தது! அவன் ஐயப்பட்டது போல் அது ஒரு பீர்ச்சியில்(Syringe) இருந்து உடைக்கப்பட்ட ஊசி தான்!!!

அவன் அந்த ஊசியை கண்டெடுத்த இடத்தின் அருகில் இருப்பது ஒரே அறை தான்! அது இன்பரசனுடையது ….
இன்பரசன் இடத்திற்கு சென்று அவனுடன் உரையாடினான் அறிவழகன்!

அறிவழகன் : “ஹலோ பாஸ்… உங்கட்ட நான் கொஞ்சம் பேசலாமா?!”
இன்பரசன் : “ம்ம்ம்… பேசலாமே!”
“நீங்க ஸ்டீராய்டு இன்ஜக்சன்(ஊக்கமருந்து) போட்டு ஓட்டிருக்கீங்க! கரக்டா(சரியா)?”
“ஆமா.. அதுக்கென்ன இப்போ? என்ன கேஸ்(வழக்கு) போடப் போறேளா? நல்ல வக்கீல் வேணுமா? என் மாமா பெரிய வக்கீல் தான்!”
“ஓ… அப்டியா?! தெரிஞ்சே தப்பு பண்றவைங்களுக்கு எல்லாம் நாங்க கேஸ் போட மாட்டோம்.. அவிங்களுக்கெல்லாம் வேற ட்ரீட்மன்ட்டு (கவனிப்பு)!”
“இது என்ன பெரிய தப்பு ஓய்??! நம்ம ஆளுங்களையே கொன்னுட்டு நம்ம நாட்டுல வந்து அவா பேச்சுவார்த்த நடத்துவா, அவாளெல்லாம் விட்டிருங்கோ… இத மட்டும் கேளுங்கோ!”
“நீ சொல்றியா அத?! டேய்… தப்பு பண்றவன் என்னைக்கு டா ஒத்துருக்கான்! அடுத்தவன கைகாட்டுறது தான தெரியும்!”
“ஆமா.. நான் இப்டி தான் பண்ணுவேன்… நீ என்ன பண்ணுவ?!”
“ம்ம்ம்… பண்றேன்…குறுக்கு வழில போறவனுக்கு குறுக்கு வலினா என்னன்னு தெரிய வேணாமா?!”,என்றவன் கையில் சொடுக்கு போட்டு ஆள்காட்டி விரலை அவன் முகத்துக்கு நேராக நீட்டிய படி தொடர்ந்தான் ,” நீ இன்னைக்கே போய் ஒன்னோட டைரீல(சரடு/கையேடு) எழுதிக்கோ, ‘இனிமே மதுரக்காரன வம்பிழுக்க கூடாது’னு!”

இதைக் கூறிவிட்டு இன்பரசனை பார்த்து கண்ணடித்து புன்னகைத்து விட்டு வெளியேறினான் அறிவழகன்!

போட்டிக்குள்ளே…

முதல் சுற்றிலே(Lap) நடந்த இந்த நிகழ்வை பார்த்து பார்வையாளர்கள் மிரண்டு போனார்கள்! அரங்கத்தில் கம்பி தொடர்பில்லா இணையம்(Wireless Internet) பயன்படுத்திக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அந்த போட்டிக்கான தளத்தில் உள்ள ‘அரட்டை'(‘RaceChat’ – designed for viewers) பகுதியில் 44 மீதான கோபங்களை வெளிப்படுத்தினர். இந்த போட்டியை நடத்தும் தொழில்முனைவர்(தொழிலதிபர்) Bluetooth (தொடர்பில்லா குருந்தொலைவு பிணையம்) Headset(ஒலியூட்டு கருவி) பயன்படுத்தி யாரிடமோ பேசிக்கொண்டே இருந்தார்.

அதற்கடுத்த 7 சுற்றுகள் எந்த கலவரமும் இல்லாமல் நடந்தது…. நிறைய ஏற்ற இரங்கலும், போட்டியும் நிலவியது 86, 99 மற்றும் 44 நடுவில்… 13,01ம் முறையே 4வது 5வது இடத்தில் போய்க்கொண்டிருந்தது… 6வது 7வது இடத்தில் சென்று கொண்டிருந்த 75 மற்றும் 28 குள் உரசல்கள் தொடங்கியது… இவர்கள் இறுதி இடத்திற்கு பின்தள்ளப்பட்டதே அவ்வப்பொழுது நிலவிய இந்த உரசல்களால் தான்!

8/12 சுற்று…

நேர் சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது, 75 வேகத்தை உயர்த்தி அப்படியே 28க்கு இணையாக(Parallel) வந்தது! அப்படியே அருகில் இருந்த 28ஐ இடித்தது… இந்த மோதல் இரண்டு கார்களையும் பாதித்தது… இரண்டு கார்களும் வலப்புறம் ஒன்று இடப்புறம் ஒன்றாக காற்றில் சுழன்று சுழன்று பறந்தது…

சேதம் அடைந்ததால் 28 & 75 வெளியேறியது…

நடந்தது என்ன??

75 -> இயல்பரசன்

28 -> மதிவேந்தன்

சில வாரங்களுக்கு முன்பு…

இயல்பரசன் தன் நண்பனுக்கு அலைபேசியில் அழைத்து பேசினான்…

இவன் : “மச்சி… ‘வேலூர் சிங்கம்’ கார் ரேஸ் ரவுண்ட்-1கு செலெக்ட் ஆயிருச்சு டா! நம்ம ரேஸ்ல மீட் பண்ணுவோம்(சந்திப்போம்)!”
அவன் : “ரொம்ப சந்தோசம் டா மாமு.. ஆனா நான் வரலடா..”
இவன் : “இன்னாத்துக்கு டா.. நீ தான் ஏற்கனவே ஒங்க டிஸ்ட்ரிக்ட் செலேக்சன் ரவுண்டுல(தகுதிச்சுற்று) வெரல வுட்டு ஆட்டுனியே! அப்றம் இன்னா?!”
அவன் : “மச்சி.. நான் டைப்பாயிடு(Typhoid) வந்து படுத்துகினேன் டா.. இந்த வருஷம் ஊத்திக்கிச்சு!”
இவன் : “அய்யயோ…! சரி விடு மச்சி… ஒடம்ப நல்லா பாத்துக்கோ!”

உடம்பு சரியில்லையா? இல்லை மனது சரியில்லையா? என்பதை அலைபேசி காட்டி கொடுக்காவிட்டாலும் நண்பன் கண்டுபிடித்து விடுவான்!

அந்த அலைபேசி அழைப்பை துண்டித்தவுடன் இயல்பரசன் இன்னொரு நண்பனுக்கு அழைத்தான்…

இவன் : “டே… நம்ம மாணிக்கத்துக்கு டைப்பாயிடா டா?”
அவன் : “மாமு.. நான் சொன்னேன்னு அவனாண்ட சொல்லீராத! அவனுக்கு டைப்பாயிடு இல்ல டா!”
இவன் : “அப்றம் இன்னாத்துக்கு அவன் ரேஸ்கு வரல?? என்னான்டையும் பொய் சொல்றான்!”
அவன் : “அவன் ரேசுக்கு செலெக்ட் ஆகல மச்சி…”
இவன் : “இன்னா டா ஒளர்ற?? அவன் தான டா செலக்சன் ரவுண்ட்ல ஃபர்ஸ்ட்(முதலாவதாக) வந்தான்!”
அவன் : “நம்ம நாட்டுல பெர்ஃபார்மன்ஸ்கு(Performance – செயல்திறன்) எங்க டா வால்யூ(Value – மதிப்பு) இருக்கு? ரெக்கமன்டேஷன்(பரிந்துரை) தான் டா!”
இவன் : “அப்ப சென்னைக்கு எந்த வெ___ டா செலக்ட் ஆனான்??”
அவன் : “மதிவேந்தன்… MLAகு தூரத்து சொந்தமா… ஒங்க ஊரு MLA சொந்தக்காரனுங்க எவனும் வராதனால தான் நீயே செலக்ட் ஆயிருக்க மச்சி…”
இவன் : “ம்ம்ம்ம்….”
அவன் : “மச்சி… நீயாவது ஜெயச்சுட்டு வா டா!”
இவன் : “சரி டா… தூக்கிர்ரேன்… கோப்பைய…”

போட்டிக்குள்ளே…

10/12 சுற்று…

நான்காவது இடத்தில் போய்க் கொண்டிருந்த 13 திடீரென வளைந்து தானுந்து சேவை இடத்திற்கு(Pit stop) சென்றது… மொத்தமே 12 சுற்றுகள்(Laps) மட்டுமே கொண்ட இந்த போட்டியில் எந்த ஒரு சேதமும் அடையாத நிலையில் 13 அங்கே போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

நடந்தது என்ன??

13 -> சிந்தனைச்செல்வன்

இறுதியாட்டத்திற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு கொண்டிருந்த வேளை….

“செல்வா, தோல்விக்கு பயப்படாதவனும், வெற்றிக்கு பணியாதவனும் தான் உண்மையான வீரன்… நீ வீரனா இருக்கணும்!” – சிந்தனைச்செல்வனின் தந்தை!
“நான் உங்க பையன் பா…” – வழக்கமாக எல்லாரும் சொல்வதை சொன்னான் செல்வன்!
“ம்ம்ம்… அது மட்டுமில்லப்பா பொறுமை ரொம்ப முக்கியம்(அவசியம்)!”
“என்னப்பா?! வாழ்க்கைக்கு வேணும்னா பொறுமை அவசியம்… ஆனா ரேசுக்கு…”
“என்ன?! எனக்கு ரேசு தான் வாழ்க்கைன்னு சொன்ன… இப்ப ரெண்டும் வேற வேற ஆயிருச்சா?!” – செல்வனின் தங்கை!

பதில் சொல்லத் தெரியாமல் சிரித்து சமாளித்தான் செல்வன்…

“வேகம் வேணாம்னு சொல்லல… பொறுமையான வேகம் வேணும்னு சொல்றேன்!” – செல்வனின் தந்தை!

“சரிப்பா…” என்று கூறிவிட்டு அன்னை-தந்தை காலில் விழுந்து வணங்கி விட்டு கிளம்பினான் செல்வன்!

பெருமிதமும் மகிழ்ச்சியும் கலந்த கண்ணீருடன் அவன் தெருமுனையில் திரும்பும் வரை அவன் தங்கையும், அன்னையும், தந்தையும் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

போட்டிக்குள்ளே….

5வது இடத்தில் சென்றுக்கொண்டிருந்த 01 4வது இடத்திற்கு முன்னேறியது, 13 சேவை இடத்திற்கு சென்றதனால்!

11/12 சுற்று…

முதல் மூன்று இடங்களை மாறி மாறி ஏற்றுக்கொண்டிருந்த 86,99,44 ஆகியவைக்குள் ஒரு கலவரம் ஏற்பட்டது! இதில் மூன்று கார்களும் சிதறி விழுந்தது! 44 தீ பிடித்து எரிந்தது! தணிவி(Extinguisher) பயன்படுத்தி உள்ளே இருந்த அறிவழகனை எப்படியோ காப்பாற்றிவிட்டனர்! அந்த கலவரம் நடந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த 01 மோதலை(Collision) தவிர்பதற்காக திரும்பிய பொழுது புல்லில் இறங்கி உருளி(Tyre) சிக்கிக்கொண்டது!

86,99,44 மூன்றும் போட்டியை விட்டு வெளியேறியது… 01 பயணத்தை தொடருவதில் தடங்கல் ஏற்பட்டது!

நடந்தது என்ன??

86 -> இன்சொல்லன்
99 -> நித்திலன்
44 -> அறிவழகன்

இறுதி போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு…

இந்த போட்டியை நடத்தும் தொழிலதிபரின்(தொழில்முனைவர்) அழைப்பின் படி இந்த மூவரும் அவரை சந்திக்க சென்றனர்…

“வாங்க… நேரா விஷயத்துக்கு வர்ரேன்… ஃபைனல் மாட்ச்ல(இறுதியாட்டம்) நீங்க தோக்கனும்!” – தொழிலதிபர்

இதை கேட்டவுடன் மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்து போயினர்!

அந்த அமைதியை கலைத்த படி தொழிலதிபர் தொடர்ந்தார், “முதல் பரிசே 5 லட்சம் தான்! நான் உங்க மூணு பேருக்கும் 10 லட்சம் தர்ரேன்… நீங்க நான் சொல்றத செய்ங்க!”. இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர்கள் பணத்தை பற்றி பேசியதும் தன்னுடைய ‘கேள்வி-கேட்கும்-உரிமை’யையும் மறந்தனர். அவர்கள் வாயை திறப்பதற்குள்ளே அவர் மீண்டும் தொடர்ந்தார்,” 11வது லாப்(Lap) வரைக்கும் நீங்க மூணு பேரும் தான் மொதல்ல வரணும். 11வது லாப்ல நீங்களே ஒரு ஆக்சிடன்ட்(விபத்து) பண்ணி எல்லாரும் போட்டிய விட்டு வெளியேறனும்! ஆளுக்கு முன்பணமா 2 லட்சம் பெட்டில வச்சுருக்கேன் எடுத்துக்கோங்க! போட்டி முடிஞ்சதும், மிச்சம் 8 இலட்சத்த வாங்கிக்கோங்க!”

மூவரும் ஒன்றும் மறுத்து பேசாமல் அவர்களுக்கான பெட்டியை தூக்கி சென்றனர்.

அவர்கள் மூவரும் சென்ற பின்பு அந்த தொழிலதிபருக்கும் அவருடைய ஆலோசகருக்கும்(பழைய நண்பரும் கூட! ) நடந்த உரையாடல்…

ஆலோசகர் : “ஏனுங்க சார்?!! கிரிக்கட்(மட்டைப்பந்து) இந்தியா முழுக்க ஃபேமஸ் (பெயர்பெற்றது). அவுங்க பந்தையம் கட்டலாம், IPL நடத்தலாம், அரசியல் பண்ணலாம்! ஆனா கார் ரேஸ் டிவில பாக்குற ஜனங்களே தமிழ்நாட்டுல கொறவு… இவுங்கள நம்பி பந்தயம்(bet) கட்டுறது வேணாமுங்க சார்!”

தொழிலதிபர் : “கிரிக்கட் சாச்சுரேட் ஆயிருச்சு…(தெவிட்டிவிட்டது) நம்ம புதுசா ஒன்னு உருவாக்கணும், அதுக்கு தான் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடில பெரிய எடத்த வாங்கி போட்டு இதுவரைக்கும் தமிழ் நாட்டுல இல்லாத அளவுக்கு ரேஸ் சர்கியூட்(சுற்றுத்தளம்) அமச்சுருக்கேன்! மத்த மாட்சுக்கு கூட்டம் அவ்வளவா வரல… ஆனா ஃபைனல் மாட்சுக்கு வருவாங்க! ரேச பாக்க வராட்டியும் அஜித் சார பாக்க வருவாங்க! நம்ம பந்தயம் வீண் போகாது!”

ஆலோசகர் : “முக்கியமான ஊருகளுக்குள்ள பெரிய எடத்த வாங்கி போட்டு இப்டி ரேஸ் சர்கியூட் கட்டி வீணடிச்சுட்டீங்களே!!”

தொழிலதிபர் : “கணக்குல வராத கருப்பு பணத்த செலவழிக்கனும்ல… இந்த போட்டி நான் நடத்துறது மூலமா எனக்கு எத்தன அரசியல் நண்பர்கள், தொலைக்காட்சி அலைவரிசை நண்பர்கள், விளம்பரதாரர் நண்பர்கள், பத்திரிகை நண்பர்கள் கிடைச்சுருக்காங்க தெரியுமா? புதுசா ஒரு ஸ்போர்ட(விளையாட்ட) தமிழ்நாட்டுல வளத்துவிட்டதுக்கு எத்தன க்ளப்(மன்றம்) எனக்கு அவார்ட்(விருது) குடுக்க காத்திருக்காங்க தெரியுமா?!”

ஆலோசகர் : ” சரிங்க சார்… அவுங்க தோக்கோனும்னு சொன்னது பரவாயில்ல சார்… அவுங்க எதுக்கு ஆக்சிடன்ட் பண்ணோனும்?!”

தொழிலதிபர் : “ம்ம்ம்… மக்கள் உண்மையா நடக்கறத பாக்குறத விட எதிர்பாக்காததா நடக்குறத நிறைய பாப்பாங்க! இதுக்கு இங்க்லீஷ்ல Reality Showனு பேரு! இந்த Wrestling, TV Reality shows எல்லாமே இப்டி தான் ஃபேமஸ்!”

போட்டிக்குள்ளே….

இப்பொழுது 01ம் 13ம் மட்டும் தான் போட்டிக்குள்ளே உள்ளன…01இன் உருளிப்பட்டை சிக்கியதால் ஏற்பட்ட தாமதத்தில் 13 முதல் இடத்திற்கு முன்னேறியது!

12/12 சுற்று…

13க்கு பின்னாலேயே துரத்தி வந்துகொண்டிருந்தது 01! இருப்பினும், 13 முதலாவதாக வந்து சேர்ந்தது. 2 நொடிக்கு பின் 01 இரண்டாவதாக வந்து சேர்ந்தது!

13 10வது சுற்றில் சேவையிடத்திற்குள் செல்வதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னால்….

இரண்டு ‘விபத்துகள்’ நடந்த காணொளி(Video) அரங்கத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்தன. இதை பார்த்த செல்வன்(13) ‘அவைகள்’ வேண்டுமென்றே செய்யப்பட்டவை என்பதை உணர்ந்தான்! 11வது சுற்றிலும் இதே போல் ஒரு ‘விபத்து’ நடக்கும் என்று அவனுக்கு தோன்றியது! எனவே சேவையிடத்திற்கு உள்ளே சென்றான்! மற்றவர்களுக்கும் அவனுக்கும் உள்ள தொலைவை வளர்த்தான்!

பரிசு பெரும் நிகழ்ச்சி முடிந்த பின் 01கும் 13கும் இடையே நடந்த உரையாடல்…

13 -> சிந்தனைச்செல்வன்
01 -> நோய்தீர்வன்

13 : “ஏங்க நம்ம ஒருத்தருக்குள்ள ஒருத்தர் அடிச்சுக்கணும்?? இந்த உள்பூசல் தாங்க குடும்பத்த, அரசியல.. ஏன் நம்ம நாட்டையே கெடுக்குது!!”

01 : “ஏல… போட்டில ஜெயிச்ச எகத்தாளத்துல பேசுதயால??!… ஒனைய அடுத்த வருஷம் ரேஸ்ல பாத்துக்குறேன்ல..”

செல்வனின் மனதில் அவன் தந்தை கூறியது எதிரொலித்தது!

>> வேகம் வேணாம்னு சொல்லல… பொறுமையான வேகம் வேணும்னு சொல்றேன்! <<

பரிசுக்கேள்வி: இந்த சிறுகதையில் பெயர் குறிப்பிடப்பட்டும், குறிப்பிடப்படாமலும் மொத்தம் எத்தனை குணக்கைகள்(கதாபாத்திரங்கள்) இடம்பெற்றுள்ளன? 😉