கருவறையா? கல்லறையா?

Posted on மார்ச் 31, 2010

10


கொப்பூழ்நாண்
காய்ந்து வறண்டு கிடக்கிறது…
அவ்வப்பொழுது கிடைக்கும் உணவு
இப்பொழுது கிடைக்காதா?
உணவோ என்னுள் புகவில்லை
தண்ணீரோ என் தாகத்தை தீர்க்கவில்லை!

உறக்கமில்லை
நான் சிரிப்பொலியை கேட்டதில்லை…
கேட்பதெல்லாம் உயிரெடுக்கும்
வெடிகுண்டு ஒலிகள்
மக்களை இழந்து தவிக்கும்
வருத்தமிகு அழுகைக் குரல்கள்!

நறுமணம்
நான் உணர்ந்ததில்லை…
எனக்கு தெரிந்ததெல்லாம்
குருதியின் நாற்றமும்
பிணங்களின் நாற்றமும் தான்!

உயிர்வளி
என் குருதியில் பாயவில்லை….
உயிரெடுக்கும் வளி தான்
புகையினுள் கலந்து
பின் அன்னையின் குருதியில் கலந்து
பின் என்னுள்ளும் கலந்துவிட்டது!

உள்ளிருக்கும்
எனக்கு ஒரு ஐயம்…
நான் தற்போதைக்கு குடியிருப்பது
அன்னையின் கருவறையிலா?
இல்லை கல்லறையிலா?!

குறிப்பு :
முதலில் வருவது பகலா? இரவா? – முதலில் வந்தது முட்டையா? கோழியா? – நீங்க நல்லவரா? கெட்டவரா?
இந்த கேள்விகளுக்கு ஏறத்தாழ எல்லா விடையுமே சரி தான்! அது போல தான் நாடுகளுக்குள்ளே இருக்கும் கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும்! தீர்வுகளைக் காண ஆராய்ந்தால் யார் பக்கம் நீதி (‘நிதி’ அல்ல!) இருக்கிறது என்பது தென்படுவதே இல்லை!