சுழியம்

Posted on பிப்ரவரி 23, 2010

14


எச்சரிக்கை: இந்த கதையில் வரும் குணக்கைகளும்(மன்னிக்கவும், இது நானே உருவாக்கிய சொல்! “Characters – கதாபாத்திரம்”) நிகழ்வுகளும் கற்பனையானதே! இது உயிரோடு இருப்பவர்களோடோ, இறந்தவர்களோடோ, மற்றவர்களின் கதையோடோ தொடர்பு கொண்டிருந்தால் அது தற்செயலானதே!
*****************

“வாங்க மிஸ்டர். இமயவரம்பன் – ப்ரொஃபசனல் ஹாக்கர்(Professional Hacker – கொந்தர்), நான் வியன் – டிடக்டிவ், சி.பி.ஐ, ஸ்பெசல் க்ரைம் சோன்(Detective -துப்பறிவாளர்,C.B.I, Special crime zone – சிறப்பு குற்ற பிரிவு), உட்காருங்க” என்றான் வியன் இமயவரம்பனிடம் கைகுலுக்கிவிட்டு.

“என்ன விஷயம்(செய்தி) சார்?” என்று கேட்டான் இமயவரம்பன் சற்று படபடப்புடன்.

“இன்னைக்கு நியூஸ்(செய்தி) பாத்தீங்களா?, பாத்தும் பலனில்ல. சுவாமிகள் நடிகையுடன் என்ன செய்தார்?, சானியா மிர்சா திருமணம் ரத்து, அஜித் நடிகர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்பாரா? – இப்டி தான் இருக்கும். பத்திரிக்கைல இதோட சேத்து கொஞ்சம் கிசு-கிசு இருக்கும். அது ஊடக சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம். நீங்க பாக்காத கேக்காத பெரிய நியூஸ் இருக்கு. கார்பரேட் தெஃப்ட்(Corporate theft – Information theft – தகவல் கடத்தல்). உங்களுக்கு அத பத்தி நிறையா தெரிஞ்சுருக்கும். நான் அதுல சீரோ(zero – சுழியம்)! அதான் உங்கள கூப்டேன்! கூகுள், டுவிட்டர் மாதிரி பெரிய நிறுவனத்துக்கே ஆப்பு வச்சுட்டு இருக்காங்க இவங்க! இதுல இந்தியர்களும் இருக்காங்கனு புகார் வந்துருக்கு. நாங்க அவங்கள கண்டுபிடிக்கணும்!” என்று பதிலளித்தான் வியன்.

“சைபர் க்ரைம்(cyber crime – மின்வெளி குற்றம்) ரொம்ப நாளாவே இருக்கு. ஏன்னா பொதுமக்களுக்கு இத பத்தி ஒன்னும் தெரியாது.. சீரோ. அது மட்டும் இல்ல. இதுக்கு மனித சாட்சி இருக்க முடியாது. தப்பு செய்யுறவன பத்தி ஒரு அடையாளமும் தெரியாது. அவன் பேரு, ஊரு எதுவும் கண்டுபிடிக்க முடியாது. ஏனா அத எல்லாத்தையும் அவன் மாத்திரலாம்! இப்ப எல்லாமே தகவலா தான் மாறி இருக்கு. பணம், சம்பளம் எல்லாம் கதவுக்குள்ள பூட்டிவைக்கிறதில்ல இப்போ, தகவளுக்குள்ள(Password – கடவுச்சொல்) தான் பூட்டி வைக்கிறோம்! ” என்றான் இமயவரம்பன்.

“சரி… பொதுவா சைபர் க்ரைம் எப்புடி பண்ணுவாங்க? இவங்கள எப்புடி கண்டுபிடிக்கலாம்னு கொஞ்சம் யோசனை சொல்லுங்க!” என்று கேட்டான் வியன். “பல விதமா பண்ணுவாங்க! ஸ்பாம் மெயில்ல(Spam mail – அழையாமடல்) நீங்க இந்த லாட்டரி(Lottery – குலுக்கல் பரிசு) வின்(வெற்றி) பண்ணியிருக்கீங்கன்னு சொல்லி, பான்க்(வங்கி) டீடய்ல்ஸ்(Details – தகவல்) கேட்பாங்க! DNSனு ஒரு செர்வர்(server – வழங்கி) இருக்கு! அது தான் ஒரு தளத்தோட பிணைய முகவரியை(Network address) சுட்டும்! பிரபல வங்கிகளோட DNSஅ கண்டுபிடிச்சு அது மூலமா அந்த வங்கிகளோட தளத்துக்கு போறவங்கள எல்லாம், இவங்களோட பொய் தளத்துக்கு போக வச்சுருவாங்க(Redirect to wrong website)! சிலர் கடத்தல்ல இறங்காம ஸ்பூஃப் மெயில்(spoof mail – பொய்மடல்) அனுப்பி இத பத்து பேருக்கு அனுப்புங்கனு சொல்லிருவாங்க! எல்லாரும் அத பத்து பத்து பேருக்கு அனுப்ப ஆரம்பிச்சுருவாங்க, நெட்வொர்க்(பிணையம்) டவுன்(Down) ஆயிரும்! Denial of Service attackனு ஒரு வகை இருக்கு! அது ஒரு ஸ்க்ரிப்ட(Script – நிரற்றொடர் வடிவத்தை ) ஓட விட்டிரும், அது ஒரு தளத்துக்கு தொடர்ந்து ரெக்வெஸ்ட்(Request – விண்ணப்பம்) அனுப்பிட்டே இருக்கும், அதனால அந்த தளத்த யாரும் பாக்க முடியாது!” என்றான் இமயவரம்பன்.

வியன் : நீங்க சொல்றத பாத்தா இதப் பண்ண அவங்களுக்கு இன்டர்நெட்(இணையம்) தேவை! இத செய்யுறதுக்கு எவ்ளோ நேரம் தேவைப்படும்? ப்ரௌசிங் செண்டர்ல(Browsing Center – உலாவு மையம்) பண்ண முடியுமா? இல்ல ஆபிஸ்ல பண்ண முடியுமா?

வரம்பன் : கண்டிப்பா இன்டர்நெட் தேவை! பொதுவா கோர் இன்பர்மேசன (Core information – உள்ளகம்) ஹாக் பண்ண ட்ரையல் அன்ட் எர்ரர் மெதட் (trial and error method – பட்டறி முறை) தான்! அதுக்கு நிறையா நேரம் எடுக்கும்! கண்டிப்பா வீட்ல தான் செய்வாங்க! ஏன்னா அவங்க எங்கயும் வொர்க்(பணி) பண்றவங்களா இருக்க முடியாது!

வியன் : நிறையா விஷயம்(செய்தி) சொன்னீங்க! ரொம்ப நன்றி! உங்கட்ட கேட்காம நம்ம பேசுனதெல்லாம் கேமரால (நிழற்படக் கருவி) ரெக்கார்ட்(பதிவு) பண்ணிட்டேன்! என்னோட மூள மறந்தாலும் அது மறக்காது!

வரம்பன் : ஓ.கே சார்! இந்த கேஸ்ல(வழக்கு) என்ன ஹெல்ப்னாலும்(உதவி) பண்றேன்! வர்ரேன் சார்!

Cyber-crime

மின்வெளி குற்றங்கள்!

சிறிது நேரம் கழித்து..

“கருப்பையா, இங்க வாங்க! எனக்கு இன்னும் ரெண்டே நாள்ல இந்தியால இருக்க எல்லா இன்டர்நெட் சர்விஸ் ப்ரொவைடர்ஸ்(Internet Service Providers – BSNL,Airtel….) இருந்து அதிகமா பில்(கட்டணச்சீட்டு) வந்த கஸ்டமேர்ஸ் (நுகர்வோர்) டீடயில்ஸ் வேணும்! ஒவ்வொரு மாநிலத்துல இருந்தும் முதல்லா வர்ற நூறு பேர நம்ம டீம(குழு) வச்சு இன்டர்வியு பண்ணுங்க!” என்று உதவியாளருக்கு கட்டளை இட்டான் வியன். சொன்னது சொன்ன படி நடந்தது! நிழற்படக் கருவியில் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்முகத்தேர்வு நிகழ்படத்தை(video) பார்த்து ஆராய்ந்தான் வியன்.

“கருப்பையா, இது ஒரு ஆள் செய்யுற விஷயம் இல்ல! நாலு பேராவது வேணும்! அப்ப அந்த நாலு பேருக்குள்ள ஏதாவது கனக்சன்(தொடர்பு) இருக்கணும்! ஆனா இந்த வீடியோல எனக்கு அப்டி யாரும் சிக்கல! திருடன் எப்பவும் குறுக்கு வழில தான் போவான்! அதிகமா பில் வர்றதா கம்ப்லயிண்ட்ஸ்(புகார்) கொடுத்த கஸ்டமேர்ஸ் லிஸ்ட்(பட்டியல்) எடுங்க! அவங்களையும் இண்டர்வியு பண்ணுங்க!” என்றான் வியன். “எதுக்கு சார்? எனக்கு புரியல!” என்றான் கருப்பையா! “ம்ம்ம்… நான் இமயவரம்பன் சார்ட திரும்ப பேசுனேன்! ஒருத்தனுக்கு தெரியாமலேயே அவனோட இன்டர்நெட் கன்னக்சன இன்னொருத்தன் தவறா பயன்படுத்த முடியுமான்னு? அது ஹாகர்ஸ்கு ரொம்ப ஈசின்னாரு(எளிது)! அதான்…” என்று எடுத்துரைத்தான் வியன்!

அதுவும் நடந்தாயிற்று… வழக்கம் போல் நிகழ்படம் புலனாய்வும் முடிந்தது…

வியன், “கருப்பையா, இதுல எனக்கு சந்தேகம்(ஐயம்) வந்த ஒரு 15 பேரோட முகவரி இருக்கு! இந்த முகவரிக்கு ரொம்ப பக்கத்துல இருக்க எல்லார் வீட்லயும் சின்ன விசாரணை பண்ணுங்க.. வழக்கம் போல.. கேமரா ரெகார்டிங்… இன்னும் 5 நாள்ல அவங்கள பிடிக்குரேன் பாருங்க!” என்று கருப்பையாவிடம் கூறினான்.

எல்லாம் நடந்து முடிந்தது… 5 நாட்கள் ஓடியது…
ஆய்வு(விசாரணை) செய்வதற்கு நான்கு பேர்கள் அழைக்கபட்டார்கள்…
*குர்பால் சிங் – பஞ்சாப்
*பவன் – ஆந்த்ரா
*எலிசபெத் – கேரளா
*ரபிந்தர் – மேற்கு வங்காளம்

ஆங்கிலத்தில் நடந்த உரையாடல், தமிழில்….

வியன் : நீங்க நாலு பேரும் இதுக்கு முன்னால ஒருத்தர ஒருத்தர் பாத்திருக்கீங்களா?
நாலு பேரும் : பாத்ததில்லை…!!!!
வியன்: அப்டியா?! அப்ப இந்த திரைல வர ஒளிபடங்கள பாருங்க!
திரைப்படவீழ்த்தியை(projector) இயக்கினார்கள்.
அந்த படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது நான்கு பேருக்கும் கண் கலங்கியது!

“இப்ப நான் தமிழ்லயே பேசலாம்னு நினைக்குறேன்! என்ன சொல்றீங்க? வெயிலுகந்தன், நஞ்சுண்டன், வானதி, வல்லவரையன்… ம்ம்ம்…” என்றான் வியன். நால்வரும் அமைதியாக இருந்தனர். (இனி தமிழில்…)

“வெயிலுகந்தன், உன்னால தான் நாலு பேரையும் பிடிச்சோம்! இன்டர்நெட் பில் அதிகமா வருதுன்னு கம்ப்ளயின்ட் பண்ணவங்கள்ல சிலர் ரொம்ப அதிகமா பில் வருதுன்னு பொலம்புனாங்க! அதுல ஒருத்தன் ஒன்னோட பக்கத்து வீட்டுக்காரன்! எங்க டீம்ல இருந்து ஓன்ட்ட கூட ஒரு சின்ன விசாரணை பண்ணாங்க, ஞாபகம் இருக்கும்னு நினைக்குறேன்! குர்பால் சிங் – அதுக்கும் உனக்கும் நிறையா வேறுபாடு இருந்துச்சு! நீ தடுமாறி ஹிந்தி பேசுனது எனக்கு சந்தேகத்த கூட்டுச்சு! நீ வீட்ல இல்லாதப்ப உன்னோட வீட்ல சோதனை பண்ணோம்! அப்ப உன்னோட Tenth Certificate(பத்தாம் வகுப்பு சான்றிதழ்) இருந்துச்சு! பேரு – வெயிலுகந்தன், ஸ்கூலு(பள்ளி) – தூத்துக்குடி! அந்த ஸ்கூலுக்கு போய் ஒன்னோட வீட்டு முகவரி வாங்கி, அங்க போனோம்! உங்க அப்பா அம்மாட்ட உன்ன பத்தி விசாரிச்சோம், அவங்க உன் மேல ரொம்ப கோவமா இருந்தாங்க, நீ என்ன பண்றன்னே தெரியாதுன்னு சொன்னாங்க! நீ கடைசியா ஐ.ஐ.டி கான்பூருக்கு படிக்க போன, அதுக்கு அப்பறம் தகவலே இல்லன்னு சொன்னாங்க! ஐ.ஐ.டி கான்பூருக்கு போனோம்! நல்ல வேளை, ஐ.ஐ.டி கான்பூர் ஹிஸ்டரிலையே(வரலாறு) ஒரே ஒரு வெயிலுகந்தன் தான், அது நீ தான்! அங்க ஒரு டெக்னிகல் ஈவண்டுக்கு(நிகழ்ச்சி) எடுத்த ஒளிபடங்கள்(photo) இருந்துச்சு! அத தான் இப்ப நீங்க பாத்தீங்க! அதுல நீ ஓரமா நிக்குற,கூடவே மூணு பேரு ஒட்டி நின்னாங்க! பேர பாத்தா அந்த நாலு பேர் மட்டும் தமிழ்! நீங்க நாலு பேரும் ட்ராப்பவுட்ஸ்னு(Dropouts – இடைநிறுத்தியவர்கள்) சொன்னாங்க! அப்பறம் உன்னோட செல்ல(அலைபேசி) ட்ரேஸ்(trace – ஒட்டறிந்து) மத்த மூணு பேரு எடத்தையும் கண்டுபிடிச்சோம்! ஏன்டா? கஜட்ல(Gazette – அரசிதழ்) பேர நாலு பேரும் மாத்திட்டு, வேற வேற எடத்துல இருந்துட்டு, பக்கத்து வீட்டுக்காரன் வயர்லெஸ் நெட்ட (wireless net – கம்பிதொடர்பில்லா பிணையம்) பயன்படுத்தி தப்பு பண்ணா, கண்டுபிடிக்க முடியாதா?” என்றான் வியன்.

“நான் சொல்ல வேண்டியது சொல்லிட்டேன்! நீங்க சொல்ல வேண்டியது சொல்லுங்க! கதைய முடிப்போம்!” என்றான் வியன். “சார், நாங்க நாலு பேருமே மிடில் கிளாஸ் ஃபாமிலி(நடுத்தர வகைக் குடும்பம்) கஷ்ட(கடின)ப்பட்டு படிச்சு ஐ.ஐ.டி, கான்பூர்ல சேர்ந்தோம்! அதுக்கு முன்னால நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்தது கூட கிடையாது! எல்லாரையும் போல நிறைய சாதிக்கனும்ற கனவோட உள்ள வந்தோம்! ஐ.ஐ.டி உள்ள வந்த பிறகு எங்களுக்கு டெக்னிகல் ஃப்ரீடம்(தொழில்நுட்ப விடுதலை – புதுமையாக படைத்தல்/சிந்தித்தல்) போச்சு! ப்ரொஃபசர் (பேராசிரியர்) சொல்றத தான் நாங்க செய்யனும்! அது மட்டும் இல்ல… அவங்க நார்த் இந்தியன்ஸ்(வட இந்தியர்கள்), நாங்க தமிழர்கள்!” என்றான் வெயிலுகந்தன்.

“அதனால…” என்று வினாவினான் வியன். “அவங்களுக்கு எங்கள சுத்தமா பிடிக்காது! அவமானப்படுத்திட்டே இருப்பாங்க! நடுவண் அரசாங்கமே நடுவுல இல்ல, வடக்குல தான் இருக்கு! எல்லாமே வட இந்தியர்களுக்கு தான் போய் சேருது! அவ்வளவு ஏன்? ஐ.ஐ.டி கூட தென்னிந்தியாவ விட வடக்குல தான் அதிகமா இருக்கு! நாங்க நினச்சத எதுவும் சாதிக்க முடியாதுன்னு தெரிஞ்சது! அதான் நாலு பேரும் பாதிலயே டிச்கண்டிநியு(நிறுத்துதல்) பண்ணிட்டோம். நாங்க சொந்த நாட்டுலே இன வெறிக்கு ஆளானோம் சார்!” என்று வெறித்தனமாகக் கூறினான் நஞ்சுண்டன்.

“அதுக்கும் இப்ப நீங்க பண்ற கார்பரேட் தெஃப்டுக்கும்(Corporate Theft – நிறுவன தகவல் கடத்தல்) என்ன தொடர்பு?” என்றான் வியன் ஒன்றும் புரியாதவனாய். “நாங்க டிஸ்கண்டினியு பண்ணதுக்கப்பறம் ஒரு ஸ்டார்டப் கம்பனி(தொடக்க நிலை நிறுவனம்) ஆரம்பிக்கணும்னு நினைச்சோம். எங்கட்ட அதுக்கு பணமில்ல. இன்வஸ்டாருக்கு(Investor – முதலீட்டாளர்) தேடி அலைஞ்சோம்! தென்னிந்தியாவும் எங்கள கவுத்திருச்சு! வெளிநாட்டுக்காரன் தான் கை கொடுத்தான்! நாங்களும் முழு முயற்சியோட உள்ள இறங்கி ஒரு அருமையான ப்ராடக்ட்(product – பொருள்) உருவாக்கினோம்!” என்றாள் வானதி.

“ம்ம்ம்ம்… யாரு கை கொடுத்தா என்ன? நம்ம நாடு கை கொடுக்கலன்னு நம்ம நாட்டு மானத்த வாங்க இப்டி செய்யுறீங்களா?” என்றான் வியன். “கை கொடுத்தான், ஆனா கால வாரிவிட்டுட்டான் சார்! டர்ம்ஸ்(terms – நிபந்தனைகள்), கண்டிசன்ஸ்னு(Conditions – கட்டளைகள்) ஏதேதோ பேப்பர(Paper – காகிதம்) காட்டி அந்த ப்ராடக்ட அவனுக்கு சொந்தமாக்கிட்டான்(உரிமையாக்கினான்) சார். எல்லாரும் எங்கள ஏமாத்திட்டாங்க. ஆனா எங்க கனவுலகத்த திருடுன அந்த வெளிநாட்டுக்காரனுங்கள மன்னிக்கவே முடியல சார். எங்கட்ட இருந்து எப்படி எல்லாத்தையும் கொள்ளை அடிச்சாங்களோ, அதையே நாங்க பேப்பர்,கண்டிசன்,டர்ம்ஸ் இல்லாம செஞ்சுட்டு இருக்கோம் சார்” என்று கதையை சொல்லி முடித்தான் வல்லவரையன்.

“உம்ம்ம்… நாலு பேரும் நல்லா கத சொல்றீங்க! ஆமா, நடுவண் அரசு நார்த்துல இருக்கு அதனால சவுத்துக்கு எந்த பலனும் இல்லன்னு யாரு சொன்னது? நலத்திட்டங்களுக்கு அதிகபட்ச கடன்தொகை தமிழகத்துக்கு தான் வந்துருக்கு தெரியுமா? நமக்கு யாருக்கும் ஹிந்தி தெரியாது. நம்ம அங்க போனா அவங்களுக்கு கேலியா தான் இருக்கும். தப்பித்தவறி நார்த் இந்தியன்ஸ் யாராவது தமிழ்நாட்டுக்கு வந்தா அவங்கள நம்ம தமிழ்ல கிண்டலடிக்கவே மாட்டோம், என்ன?” என்று நறுக்குன்னு கேட்டான் வியன். நான்கு பேருமே தலைகுனிந்தனர்.

“நம்ம தினமும் குடிக்கிற டீயே அஸ்ஸாம்ல இருந்து தான் டா பெரும்பாலும் வருது. நமக்கு அவங்களும், அவங்களுக்கு நம்மளும் தேவை டா. தமிழ்நாடு தான் தமிழனுக்கு உலகம். அத தாண்டி வெளிய போனா எல்லாரும் எதிரி. அப்பறம் ஏண்டா வெளிய போறீங்க? அங்க மும்பைல தீவிரவாத தாக்குதல்ல நூறு பேரு செத்தாலும், குஜராத்ல பூகம்பத்துல நூறு பேரு செத்தாலும், சென்னைல சுனாமில எக்கச்சக்கமா செத்தாலும் ஒரே உணர்ச்சி தான் டா வரணும்! உங்கள நீங்களே குறுகிய வட்டத்துல சேத்துட்டு அடுத்தவன எதிர்வட்டம்னு சொல்லி சண்ட போட்டுக்குட்டே இருக்கீங்க! நீ இந்தியனா இருந்தா பாகிஸ்தானியோட சண்ட போடணும், தமிழனா இருந்தா வட இந்தியர்களோட, சிங்கள மக்களோட சண்ட போடணும், ஆம்பளையா இருந்தா பொம்பளையோட சண்ட போடணும், “தல” ரசிகனா இருந்தா “தளபதி” ரசிகனோட சண்ட போடணும், “இசைஞானி” ரசிகரா இருந்தா “இசைப்புயல்” ரசிகனோட சண்ட போடணும்! சண்ட போட்டு சண்ட போட்டு அலுத்து போகலையாடா உங்களுக்கு!” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்தான் வியன்.

“அர்ரஸ்ட் தீஸ் ஃபோர் இடியட்ஸ்!(Arrest these four idiots – இந்த நான்கு முட்டாள்களையும் கைது செய்ங்க)” என்று கருப்பையாவிடம் கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்றான் வியன்.

இந்த கதையின் தலைப்பை “எதிர்வட்டம்” என்று மாற்றுகிறேன் !

****************

குறிப்பு :
சூழ்ச்சிகள் எல்லாத் திசைகளில் இருந்தும் நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கிறது! ஏமாற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேபோகிறது! ஏமாற்றுபவர்கள் திருந்த மாட்டார்கள்! ஏமாறுபவர்கள் தான் மாற வேண்டும் !

நீங்களும் இது போன்ற தகவல்கள் அறியாமல் சுழியமாக இருந்தால் கீழிருக்கும் சுட்டிகளில் சொடுக்கவும்!

மின்வெளி குற்றங்கள்

கடனட்டை(Credit card) திருட்டு

என் வீட்டை திருடு!

மின்னஞ்சலை கொந்துதல்!(Hack email)

கொந்தரிடம் அரட்டை!

வேண்டுகோள்: தயவுசெய்து, இதில் போடப்பட்டிருக்கும் தகவல்களை தவறாக பயன்படுத்தாதீர்கள்!