அம்மா

Posted on ஜனவரி 27, 2010

45


அர்ப்பணிப்புகள்:
இந்தச் சிறுகதையை உலகத்தில் வாழும் அனைத்து அம்மாக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்!
இன்று (ஜனவரி 27) பிறந்தநாள் கொண்டாடும் என் அன்புத்தோழிக்கு இந்தச் சிறுகதையை பிறந்தநாள் பரிசாக அர்ப்பணிக்கின்றேன்!

களஞ்சியன் கல்லூரி படிப்பு முடியும் காலம் வந்தது! அவன் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான். களஞ்சியனும், அவனது நண்பன், வினையூக்கனும் மேற்படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு தீவிரமாக படிக்கத் தொடங்கினர். களஞ்சியனின் தாய் வெண்பா, ஒவ்வொரு நாளும் அவன் தூங்கும் வரை விழித்திருந்து, தேநீர் கொடுத்து அவன் படிப்பதை ஊக்கப்படித்தினார்கள்! அடுத்த நாள் தேர்வு….

வெண்பா, களஞ்சியனிடம், ” டே! வாடா! இன்னைக்கு கோயிலுக்கு போவோம்” என்றார்கள். களஞ்சியன், “எதுக்கு மா கோயிலுக்கு கூப்பிடுற?.. நாளைக்கு டெஸ்டு, படிச்சதெல்லாம் ஒரு வாட்டி ரிவைஸ் பண்ண வேணாமா?!!” என்றான் கோயிலுக்கு போவதை தவிர்க்க சாக்காக! அதற்கு, அவன் அம்மா, ” நீ படிச்சதெல்லாம் போதும்! வந்து மிச்செத்தேல்லாம் படிச்சுக்கல்லாம்! ஒடனே கிளம்பி வா” என்று செல்லக் கட்டளையிட்டார்கள்!

கோயிலுக்கும் சென்றாயிற்று… இருந்தாலும் களஞ்சியன் விடுவதாக இல்லை. “இப்ப நான் கோயிலுக்கு வர்றதுக்கும், நாளைக்கு நான் டெஸ்டு நல்லா பண்றதுக்கும் என்ன தொடர்பிருக்கு? இது மூட நம்பிக்கை இல்லையா?” என்று நறுக்குன்னு கேட்டான். அதற்கு அவன் அம்மா, ” கடவுள நம்பாதவங்க எல்லாம் பகுத்தறிவாளர்கள், நம்புரவங்கெல்லாம் மூடர்கள்னு நிறைய பேரு சொல்றாங்க. அந்த பாதிப்பு தான் ஒனக்கும் இருக்குன்னு நினைக்குறேன்! உன் வயசுல எல்லாம் இப்டி தான் பேசுவாங்க, எங்க வயசு வந்த பின்னாடித்தான் இது எல்லாம் புரியும்!”.

“நீங்க சுத்தி வளைக்காம பதில சொல்லுங்கம்மா!” என்றான் அழுத்தமாக! அதற்கு அவன் அம்மா,” சரி.. சொல்றேன்! நீ கோயிலுக்குள்ள வரும்போது செருப்ப கழட்டி போடுறேல.. வெறும் காலோட பாறை மேல நடந்தா அக்கு பன்ச்சர் எப்பெக்ட் (Accupuncture effect – நுண்துளை மருத்துவம்) கிடைக்கும். இந்த மணியின் சத்தத்துல வர்ற பிரீகுவென்ஷி(Frequency – அதிர்வுகள்) மூளையின் நிரம்புகளை உற்சாகப் படுத்தும்! நீ நெற்றியில் வைக்கும் விபூதி கான்சன்ட்ரேசனை(செறிவு) வளர்க்கும்! தீபாராதனை கண்களில் ஒத்துவதால் கண் வலி குறையும்! துளசி, வில்வம் போன்ற மூலிகைகளிலிருந்து செய்யப்படுற தீர்த்தம் உடல் நலத்தைப் பார்த்துக்கொள்ளும்! நீ கை கூப்பி வணங்குவதும், தரையில் விழுந்து கும்பிடுவதும் யோகா பயிற்சி! போதுமா விளக்கம்??!!” என்றார்கள். வாயை பிளந்த படி நின்று கேட்டு கொண்டிருந்தான் களஞ்சியன். “உனைய சின்ன வயசுல இருந்து எத்தன தடவ ஏமாத்தியிருப்பேன்!” என்று எண்ணிக் கொண்டிருந்தது அவன் தாயின் மனம். “எனக்கு இன்னும் ஒரே ஒரு டவுட்டு மா!” என்றான் மீண்டும், “இத்தனை நாளா நீங்களும் கோயிலுக்கு வர்றீங்களே, ஆனா ஒங்கட்ட ஒரு இம்புரூவ்மண்டும் இல்லையே!” என்றான் நக்கலாக. “ஒழுங்கா நீ சாமிய கும்பிடு!” என்று செல்லமாக அதட்டினார்கள் வெண்பா.

“வெள்ளிக்கெழம கோயிலுக்கு வந்தா நல்லாத்தாம்மா இருக்கு!” என்று ஒரு புதிர் எழுப்பினான் களஞ்சியன். “என்னது ??” என்றார்கள் வியப்புடன் வெண்பா! “பெண்கள் தான்!” என்றான் சிரித்துக் கொண்டே! “என்ன?” என்று அதிர்ச்சியானார்கள் வெண்பா! “ச்சீ.. பொங்கல்.. நாக்கு உளறிடித்தும்மா!” என்றான் சமாளித்த படி! “ம்ம்ம்ம்.. வீட்டுக்கு வா!” என்றார்கள் அவனை முறைத்துக் கொண்டே! “இப்படி உங்கள சும்மா கோவப்படவச்சுப் பாக்குறது எவ்ளோ நல்லா இருக்கு!!” என்று மனதிற்குள் நினைத்த படியே நடந்தான்!

அரவணைக்கும் அம்மா

அடுத்த நாள் வந்தது. தேர்வை எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பினான் களஞ்சியன். “என்னப்பா நல்லா பண்ணியா?” என்று வெண்பா கேட்டார்கள். “நல்லா பண்ணியிருக்கேன் மா!” என்றான் முகமலர்ச்சியுடன். ஒரு வாரம் நகர்ந்தது. களஞ்சியனின் நண்பன் வினையூக்கன் களஞ்சியனை தொலைபேசியில் அழைத்தான். 5 நிமிடம் வாடிப்போன முகத்துடன் அமைதியாக பேசினான் களஞ்சியன். “என்னப்பா ஆச்சு?” என்று தளர்ந்த குரலுடன் கேட்டார்கள் வெண்பா. தயங்கியபடியே “அம்மா!” என்று இழுத்தான் களஞ்சியன். “நானும் வினையும் 98.7 பெர்சென்டைல்(Percentile – நூற்றுமானம்) எடுத்துருக்கோம்மா! மாவட்டதுலையே முதல் மார்காம்மா!” என்றான். வெண்பா,”அடப்பாவி! நான் கூட ஏதோ கெட்ட விஷயமோன்னு பயந்துட்டேன்! எல்லாம் அந்த பாலமுருகனோட அருள் தான் டா!” என்றார்கள் நிம்மதியாய்.”ஏம்மா! பாலமுருகன் மட்டும் தான் அருள் தருவாரா??!! இந்த லட்சுமி நாராயணன், பலராமன் எல்லாம் அருள் தர மாட்டாங்களா??!!” என்றான் களஞ்சியன். “சரிப்பா, எல்லா சாமியோட அருளும் ஒனக்கு இருக்கு! அப்ப நீ நினச்ச இன்ச்டிட்யுசன்(Institution) கிடைக்கும்மா பா?” என்று கேட்டார்கள்.”கிடைக்கும் மா. ஒரு இன்ச்டிட்யுசன்ல இருந்து கால் வந்துருக்கு, ஒரு வாரத்துல இண்டர்வியு(Interview) இருக்கு மும்பையில.” என்றான். “மும்பைலையா?” என்று சிந்தித்த படி கேட்டார்கள்.

நாட்கள் ஓடிவிட்டது. களஞ்சியன் மும்பைக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது வெண்பா,” இந்த தடவ கோயிலுக்கு போக முடியாம போச்சேப்பா!” என்றார்கள் வருத்தத்துடன். “அம்மா! நேரமில்லாதானால தான போக முடியல… கடவுள் ஒன்னும் கோச்சுக்க மாட்டார்!! கவலைப்படாதீங்க” என்று தேற்றினான் . பின் மும்பைக்கும் சென்றுவிட்டான்.

மும்பையில்…
நேர்முகத்தேர்வுக்கு முன்தினம் இரவு…

“டே வினை! தூக்கமே வரல டா… அம்மா நினைப்பா இருக்கு டா. எனக்கு நீயாவது கூட இருக்க. அங்க அம்மா தனியா இருப்பாங்க டா.” என்று புலம்ப ஆரம்பித்தான். “டே! ரொம்ப யோசிக்காத! 3 நாள் தான டா. எதையாவது நினச்சு மனச கொழப்பிக்காம தூங்கு. நல்லதே நடக்கும்” என்று சொல்லி விட்டு வினையூக்கன் தூங்கிவிட்டான்.

நேர்முகத்தேர்வை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான் களஞ்சியன். “வாப்பா! ஆளே மெலிஞ்சு போய் எதோ மாதிரி இருக்கயே பா!! உனக்கு ரசஞ்சாதம் தான் பிடிக்கும். அது அங்க கிடைக்காதுல. பாவம், சும்மா சப்பாத்தியும் வரட்டியும் தின்னு அலுத்து போயிருக்கும்” என்று கூறிக்கொண்டே களஞ்சியனிடம் இருந்து பைகளை வாங்கி வைத்துக்கொண்டிருந்தார்கள். “அம்மா, வினை செலெக்ட் ஆயிட்டான் மா! எனக்கு சீட்டு கிடைக்கலம்மா!” என்று கூறி கண் கலங்கினான். “நான் தோத்துட்டேன் மா!!” என்று அழ ஆரம்பித்துவிட்டான்.

அவன் தலையை கோதிய படி மெல்ல சிரித்துக் கொண்டே, “இது தோல்வி இல்லப்பா! வெற்றியோட தாமதம்! நீ என்னைக்கும் தோக்கமாட்ட பா! ஆம்பிள அழுக கூடாது, கண்ணை தொட!” என்றார்கள் வெண்பா. அவன் மனதிற்கு கேட்கவில்லை. அமைதியாக அதே இடத்தில் தலையை குனிந்த படி நின்று கொண்டிருந்தான். அவன் நாடியை பிடித்து தலையை நிமிர்த்தினார்கள் வெண்பா. “இங்க பார்! ஒரு விஷயம் நம்ம நினச்ச படி இப்ப நடக்கலைன்னா அது அத விட சிறப்பா பின்னாடி நடக்க போகுதுன்னு அர்த்தம். எனக்கும் நீ மும்பையில படிக்கறத விட சென்னையில படிக்குறது தான் நல்லதுன்னு நினைக்குறேன். எது நடந்தாலும் நல்லதுக்கு தான்.” என்றார்கள் வெண்பா.

“சரி… இப்ப ரெஸ்ட் எடு.. அப்புறம் குளிச்சுட்டு சாயங்காலம் கோயிலுக்கு போகலாம்!” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார்கள் வெண்பா.இப்பொழுது களஞ்சியனிடம் ஒரு மாற்றம் வந்தது. கண்களை துடைத்தான்.” இனிமேல் நான் தோக்கமாட்டேன் மா! எனக்கு கோயிலும் நீங்க தான், அங்க இருக்க கடவுளும் நீங்க தான்! நீங்க என்னோட இருந்தா நான் எதையும் வெல்லுவேன் மா!” என்று மனதிற்குள் நினைத்த படியே நிம்மதி அடைந்தான் களஞ்சியன்.

தொடர்புடைய கதைகள்:

அண்ணன்
அப்பா