சமுதாய மயக்கங்கள்

Posted on ஜனவரி 8, 2010

19


தலைப்பின் பொருள் – Social Illusions

நான் சிறிது காலமாக பெங்களூரில் தான் வசித்து வருகிறேன். இந்த இடமும் நான் பிறந்து வளர்ந்த சோழவந்தான் போலவே நல்ல மிதமான வானிலையில் தான் உள்ளது. இதுவும் காடாக தான் இருந்தது!! ஆனால் மரங்கள் முழுவதையும் வெட்டித் தீர்த்துவிட்டு அந்த இடங்களை நாம் உடைமையாக்கிக் கொண்டோம்! சரி… அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது??!!

ஒரு நாள் நான் அலுவலகத்துக்கு செல்வதற்காக 10 மணிக்கே கிளம்பி பேருந்து நிறுத்தத்திற்கு வந்துக் காத்துக்கொண்டிருந்தேன்! அப்பொழுது பார்க்கவே மிகப் பயங்கரமாக இருக்கும் ஒருவர் என் அருகில் வந்து நின்றார்! முள்ளமன்றியின் முடியைப் போல இருந்த தனது முடியை காண்டாமிருகத்தின் கொம்பு போல நடுவில் மட்டும் நிறுத்தி இருந்தார்(Center Spike)! ஆளும் சிறிது காண்டாமிருகம் போல தான் இருந்தார்! நெற்றியிலிருந்து வாய் வரை மறைக்கும் அளவுக்கு ஒரு கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தார்! அவர் வாய் எதையோ அசைப்போட்டுக் கொண்டிருந்தது(பசையூது மிட்டாய் – Bubble gum)! பிச்சைக்காரனிடம் இருந்து கால் சட்டையை(Pant) திருடி வந்திருப்பார் என்று நினைக்கிறேன்! கிழிந்து நூல் நூலாக இருந்தது அவரின் சாக்கு கால் சட்டை(Jeans)! அவர் நாடியில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்! மிக கூர்மையாக கவனித்த பிறகு அது குறுந்தாடி(NOT french-beard, french bee like “Majaa” Vikram) என்பதைக் கண்டுபிடித்தேன்!மிக கடுமையாக நாற்றமருந்து(deo-spray) போட்டிருந்தார்! என்னால் மூச்சு கூட விட முடியவில்லை!

கொஞ்சம் தலைக்கு எண்ணெய் வைக்ககூடாதா?

இது போதாதென்று தனியாக ஏதோ பேச ஆரம்பித்தார்! “ஆகா! காலையிலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா?!” என்று நான் சிறிது அவரிடம் இருந்து விலகி நின்றேன்! மெதுவாக பேசிக்கொண்டிருந்தவன், திடீரென சத்தமாக பேச ஆரம்பித்தான். “மனச இரும்பாக்கிக்கோடா!” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்! அவன் காதில் கருப்பாக ஏதோ ஒரு குச்சி போன்ற ஒன்றை அணிந்திருந்தான்! இப்பொழுது தான் எனக்கு விளங்கியது. அவன் Bluetooth(குருந்தொலைவு இணைப்பில்லா பிணையம்) Headset(காதில் அணியும் ஒலிக்கருவி/ஒலியூட்டுக்கருவி) பயன்படுத்தி கைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறான் என்று! அதை வண்டியில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்த வேண்டியது! ஏன் இப்படி குழப்புகிறீர்கள்?? போக போக எனக்கு இது பழகிவிட்டது!

ஆண்கள் அணியும் ஆடைகளை விட பெண்கள் அணியும் ஆடைகள்… வெளியே சொல்ல முடியவில்லை..(ஒருவேளை அவர்களுக்கு குளிராதோ?!!).. அதுகூட பரவாயில்லை.. ஒரு பெண் படியில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஏதோ, சாணியை மிதித்தது போல் நடந்து கொண்டிருந்தாள்! நன்றாக பார்த்தால், படிக்கட்டு உயரத்திற்கு இருக்கிறது அவளின் காலனி(Heels)! நான் பணி பயிற்சிகாலத்தில் இருக்கும் பொழுது குர்கானில் (Gurgaon) இருந்தேன்! அங்கே நாங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வரும் சாலை மழை பொழிந்தால் சகதியாய் மாறிவிடும். யாரும் நடக்கவே முடியாது. மிகவும் திறமைசாலிகள் மட்டுமே அதை கடக்க முடியும்! அங்கேயும் ஒரு பெண் நாற்காலி உயரத்திற்கு காலனி அணிந்து வந்தாள். “என்ன செய்கிறாள் , பார்ப்போம்!” என்று நின்று வேடிக்கைப் பார்த்தேன். தன் காலணிகளை கழற்றிவிட்டு வெறும் காலில் சகதியைக் கடந்து பின் தேங்கியிருந்த தண்ணீரில் காலை கழுவிவிட்டு அப்புறம் காலணிகளை அணிந்து சென்றாள்!(தேவையா இந்த பந்தா!!)

ஒருமுறை ஒரு நேர்முகத்தேர்வில்(interview) கலந்துகொள்வதற்காக பூனேவில் (Pune) இருக்கும் ஒரு கல்வி நிலையத்திற்கு ( DIAT – Defence Institute of Advanced Technology) சென்றிருந்தேன். அதற்கு ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கும் வசதியும், உணவு வசதியும் செய்து கொடுத்திருந்தார்கள். இரவு உண்பதற்காக நானும், என் தந்தையும் அங்கே இருக்கும் உணவகத்திற்கு(Mess) சென்றிருந்தோம்! அட, நம்முடைய தோசை தான் அங்கேயும்! மன நிறைவோடு உண்ண அமர்ந்தேன்! எனக்கு எதிரே ஒரு வட இந்தியர் அமர்ந்திருந்தார்! அவர் ஒரு சிறு கரண்டியையும்(Spoon), ஒரு முட்கரண்டியையும்(Fork) வைத்துக்கொண்டு அந்த தோசையோடு சண்டைப் போட்டு கொண்டிருந்தார்! அதுமட்டுமல்லாமல், தோசை துண்டுகளை இரண்டு கைகளையும் பயன்படுத்தி சுருட்டி சாம்பாரில் முக்கி எடுத்து தின்றார்! அவர் ஒரு தோசையை உண்பதற்குள் நான் என் இரவு உணவு முழுவதையும் முடித்துவிட்டேன்!

“சரி.. இவ்வளவு கூறுகிறாயே, நீ எப்படி?” என்று நீங்கள் வினவலாம். நானும் என் பாணியை மாற்றிக்கொள்வதை வழக்கமாக தான் வைத்திருந்தேன், கல்லூரியில் பயிலும் போது! ஒரு நாள் எனக்கு குறுந்தாடி(French-beard) வைக்க வேண்டும் என்று ஆசை வந்தது! சோழவந்தானில் வீட்டில் தனியாக இருந்தேன். அம்மா, அப்பா வீட்டுக்கு வர ஒரு வாரம் ஆகும் என்று கூறி இருந்தார்கள். இது தான் நல்ல நேரம் என்று குறுந்தாடியும் வைத்துவிட்டேன்! அதை கண்ணாடியில் பார்த்து பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தேன்! அப்பொழுது பக்கத்து வீட்டில் இருந்து வந்து கதவை தட்டினார்கள். நான் கதவைத் திறந்தேன்! “சாரிப்பா! உன்ன பாதி ஷேவ்லையே டிஸ்டர்ப் பண்ணிட்டேன்!”, என்றார்கள். நான், “ம்ம்ம்ம்.. பரவாயில்லை” என்று சிரித்து சமாளித்தேன்! உடனே சென்று வைத்த குறுந்தாடியை எடுத்துவிட்டேன்!

பாணி(Fashion) என்னும் மயர்வுக்கு(illusion) பலர் மயங்கி கிடக்கிறார்கள்! எனவே பாணி என்ற எண்ணத்தில் பல கோமாளித்தனங்களைச் செய்கிறார்கள்!

இதற்கு யார் காரணம்??