காதலில் எழுந்தேன்!

Posted on திசெம்பர் 25, 2009

36


என் பெயர் அன்புச்செல்வன். நான் இப்பொழுது காரில் (car – தானுந்து) சென்றுகொண்டிருக்கிறேன். வெளியே நன்றாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. நாலைந்து நாட்களாகவே பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் தான் எப்பொழுதும் பேருந்தில் கல்லூரிக்கு செல்லும் நான் இன்று தானுந்தில் செல்கிறேன். தானுந்தில் நானும் ஓட்டுனரும் மட்டும் தான் போய்க்கொண்டிருக்கிறோம். என் மனது லேசாக படபடத்து கொண்டிருப்பதை நான் வெளியே காட்டவில்லை. “அண்ணே!, ரேடியோ(வானொலி) வால்யும(ஒலி அளவு) கொஞ்சம் கூட்டுங்க” என்று சொன்னேன் ஓட்டுனரிடம். ஒரு நல்ல காதல் பாட்டுபாடிக்கொண்டிருந்தது.
“உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே..” என்று ‘காதல் மன்னன்’ அஜீத் பாடிய பாட்டு.

2 வருடங்களுக்கு முன்பு…

நான் கல்லூரியில் சேர்ந்து, முதல் நாள் என் வகுப்புக்குள் நுழைந்தேன். என் உடன்பயில்பவர்கள் (Classmates) யாருமே எனக்கு தெரியாது. முதல் வகுப்பில் வருகைப்பதிவு (Attendance) எடுத்தபொழுது தான் நான் யாழினியை பார்த்தேன். பார்த்ததுமே கவிழ்ந்து விட்டேன். அழகான பெரிய இரண்டு கண்களும், சிறிய சிவந்த உதடுகளும், அடர்ந்த கருங்கூந்தலும், மெல்லிடையும், வெண்ணிற மேனியும், மென்மையான குரலும் என்னை சுண்டி இழுத்தது.
“இனிமே இவதாண்டா என்னோட காதலி!” என்று என் மனசுக்குள்ளேயேசொல்லிக்கொண்டேன்.

இப்பொழுது…

ஆனால் அது அவ்வளவு எளிதில்லை. கல்லூரிக்கு வந்தால் காதல் தானாக வந்துவிடும். ஆனால் அந்த பெண்ணின் மனதிற்குள் புகுவதற்கு எவ்வளவு “உழைக்க” வேண்டும் என்பது “அப்பாவி” ஆண்களுக்கு மட்டும் தான் தெரியும். கல்லூரிக்கு செல்லும் வழியில் தான் அவள் தினமும் வந்து கல்லூரி பேருந்தில் ஏறும் நிறுத்தம் உள்ளது. அங்கு சென்று அவளையும் தானுந்தில் ஏற்றிக்கொண்டு செல்வது தான் என் கனவு. அப்படி அவள் வந்துவிட்டால் இதற்கு முன்பு சொதப்பியது போலில்லாமல் இன்றே என் காதலை சொல்லி விடுவேன்.
ம்ம்ம்ம்… இன்னும் சிறிது தூரம் இருக்கிறது….

காதல்

ஒரு வருடத்திற்கு முன்பு…

இந்த நேரத்திற்குள் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். அதுபோக, நானும் அவளை பற்றி நிறைய அறிந்து கொண்டேன். அவள் மென்மையானவள், நல்ல பண்புகள் கொண்டவள், வீட்டிற்கு அடங்கியவள், அமைதியானவள், மிகவும் பயந்தவள்! எல்லா விதத்திலும் எனக்கு நேர்மாறாக இருப்பதாலோ என்னவோ எனக்கு அவளை இன்னும் பிடித்தது.

அவள் பார்வை என் மீது பட வேண்டும். இதற்காகவே நான் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன். அவளும் என்னை அடிக்கடி பார்ப்பாள், சிரிப்பாள். நான் எதிலும் திறமை இல்லாதவனாய் பெருத்த உடல் கொண்டு அழகற்றவனாய் இருந்தேன். அவளை கவர்வதற்காகவே வெறி கொண்டு 2 மணிநேரம் உடற்பயிற்சி செய்வது, உணவை குறைப்பது என்று ஒரு வழியாக உடம்பை குறைத்துவிட்டேன்! தாடி வைப்பது, மீசை எடுப்பது, ஒவ்வொரு நாளும் வேற முகத்தோற்றத்துடன் போவது என்று “கதாநாயகன்” போல ஆகிவிட்டேன். படம் வரைதல், ஆட்டம், பாட்டம் என எல்லாவற்றிலும் நாட்டம் கூடியது. அவ்வளவு ஏன் ?? கவிதையும் எழுத ஆரம்பித்து விட்டேன். விக்ரமன் படத்தில் ஒரே பாட்டில் முன்னேறுவது போல, நான் ஒரே வருடத்தில் மொத்தமாக மாறினேன். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அதிகம் உதவ ஆரம்பித்தேன். பொறுப்பாக நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன்.

யாழினிக்கு பிடிக்கும் படி மாறினேன். அவளுக்கும் என்னை பிடித்திருந்தது. என்னை ரசித்து பார்ப்பாள், சிரிப்பாள். ஆனால், என்னிடம் பேச மட்டும் தயங்குவாள்.
அது சரி.. நமக்கே இங்க உதருதே!!

இப்பொழுது…

யாழினி எப்போதும் வந்து நிற்கும் நிறுத்தம் வந்தது. நான், ஓட்டுனரிடம், ” கொஞ்சம் தள்ளி போய் அந்த மரத்துக்கிட்ட நிப்பாட்டுங்க.. ஒரு நண்பன கூட்டிட்டு போகணும்.” என்று சொன்னேன். அப்படியே நிறுத்தியாயிற்று.

இப்பொழுது எனக்கு படபடப்பு அதிகரித்தது. “காதல் மன்னன்” பாட்டை முனுமுனுத்துக்கொண்டே காத்துக்கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், யாழினியின் அப்பா, அவளை பின்னால் உட்காரவைத்து வண்டியில் கொண்டு வந்து பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் நிழற்க்குடைக்குள்ளே இறக்கி விட்டார். அவள், அவள் அப்பாவுக்கு, “சின்ன கவுண்டர்” போல குடை பிடித்துக்கொண்டே வண்டியில் வந்ததை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. அவளை இறக்கி விட்டு, அவளின் அப்பா ஒரு மைல் கல் தொலைவு சென்ற பிறகு தான் நான் தானுந்தை விட்டு இறங்கினேன். அவளைப்போலவே ஒரு குடையை மடக்கி பிடித்த படி மழையில் நனைந்து கொண்டே அவளை நோக்கி நடந்தேன்.

அவள், அவளுடைய தோழிகளுடன் பேசி சிரித்து கொண்டிருந்தாள். என்னை கவனிக்கவில்லை. திடீரென்று அவள் பக்கம் சென்று, “யாழினி…” என்று அழைத்தேன். சற்றும் என்னை எதிர்பார்க்காத அவளின் கண்ணில் அவ்வளவு பயம் கலந்த கிளர்ச்சியை பார்த்தேன்.

இன்றாவது என் காதலை அவளிடம் சொல்லிவிடுவேன் என்று தான் நினைக்கிறேன்!!

குறிப்பு: உண்மையான தூய காதலுக்கு தோல்வியே கிடையாது. அந்த காதலை உங்கள் காதலியோ/காதலனோ ஏற்காவிட்டாலும் அந்த காதல் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றம் நிலையாக இருக்கும். அது என்றும் வாழும்!!
“காதல் தோல்வி” என்று நொந்து கொண்டிருப்பவர்கள் தயவு செய்து மாறவும். அந்த காதல் உங்களைவிட்டு எங்கும் போகாது.

குறிச்சொற்கள்: , ,