மூன்றாம் உலகப்போர்

Posted on நவம்பர் 7, 2009

13


இலக்கியன் தன் வீட்டில் இருந்து இரண்டு மைல்கல் தொலைவில் இருக்கும் நண்பன் கரியன் வீட்டுக்கு கிளம்பினான். இப்பொழுதெல்லாம் இலக்கியன் நடந்து செல்வதை ஒரு உடற்பயிற்சியாக செய்கிறான். ஆமாம், படிகள் நகர ஆரம்பித்துவிட்டன (Escalator). மனிதன் இயந்திரங்களால் ஆளப்படுகிறான். பின்பு, முட்டாள்த்தனமாக அறையினுள்ளே குறுக்கும் நெடுக்கும் நடப்பது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவைகளை கஞ்சியாக (OATS) குடிப்பது என்றெல்லாம் செய்வது ஒரு வழக்கம் ஆயிற்றே!!

                அவன் தன் நண்பன் வழக்குரைஞர் வீட்டிற்கு செல்லும் வழியில் இரண்டு சிறுவர்கள் சண்டைப்போட்டு கொண்டிருந்ததை கவனித்தான். இருவரும் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீட்டில் வசிப்பவர்கள்!! ஒரே பள்ளியில் பயில்பவர்கள்!! இலக்கியன் அந்தச் சிறுவர்களிடம் சென்று என்னவென்று உசாவினான் (enquired). அதற்கு சிறுவர்கள் ஒருவனுடைய எழுதுகோலை இன்னொருவன் அவனுக்கு தெரியாமல் பயன்படுத்தி மையை தீர்த்துவிட்டான் என்பதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறினர். இலக்கியன் அவர்களைப் பார்த்து சிரித்தான். இலக்கியன் அவர்களிடம்,”பக்கத்தில் இருப்பவர்கள் நல்ல நண்பர்களாக பழக வேண்டும். இது போன்ற சிறிய சிக்கல்களுக்கெல்லாம் சண்டை போடக்கூடாது. எப்பொழுதும் நமது விடுதலை அடுத்தவர்களை இடையூறு செய்யக்கூடாது. புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.”, என்றுரைத்தான்.

ஒரு வழியாக இலக்கியன் கரியன் வீட்டை சென்றடைந்தான். விவாதம் தொடங்கியது…

    இலக்கியன் கரியனிடம்,”சிறுவர்களுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?? பக்கத்து பக்கத்துக்கு ஊர்களுக்கும், மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சண்டை இல்லாமலா இருக்கிறது?” என்றான். கரியன்,”இப்பொழுது நீ என்ன சொல்ல வருகிறாய்??” என்று வினவினான். அதற்கு, இலக்கியன் “இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மிருக்காக சண்டை போடுகிறது, இஸ்ரேலும் பாலஸ்தீனும் ஜெருசேலத்திற்கு சண்டைப் போடுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் எல்லைக்கோடு யார் தீர்மானித்தது??” என்று பொங்கினான்.

Terrorist Attacks

கரியன்,” இது நீ கூறுவது போல இல்லை… நீ வீடு கட்டுவதற்கு வாங்கிய இடத்தில் இன்னொருத்தவன் சுவர் கட்டினால் உன் இடத்தை அவனுடன் பகிர்ந்துக் கொள்வாயா?? அந்த நிலத்துக்கு எல்லைக்கோடு நீ எப்படி தீர்மானிக்கலாம்??” என்று விவாதித்தான். இலக்கியன்,”ஒன்றாக இருந்த பாரதம் தான் இப்ப இந்தியா, பாகிஸ்தான், வங்காளம் என்று பிரிந்திருக்கிறது.. பிரித்துவிட்டு போனவர்கள் யாரோ?? இதே தான் வட கொரியா தென் கொரியா சிக்கல்.. பாலஸ்தீன் நாட்டுக்குள் இஸ்ரேலை உருவாக்கியது செருமனி தான். யாரோ எப்பவோ தீர்மானித்துவிட்டு போனதை இன்னும் ஏன் கடைபிடிக்கணும்??”. கரியன்,” ஓ!! அப்படிஎன்றால் இந்தியாவையும் பாகிஸ்தானையும் மறுபடியும் பாரதமா ஆக்கிடலாம் என்று சொல்கிறாயா? இல்லையென்றால் இந்தியா,பாகிஸ்தான்,காஷ்மீர் என்று மூன்று நாடாகப் பிரிக்கலாம் என்கிறாயா?” என்றான்.

இலக்கியன் அதற்கு,” நான் சொன்னதே வேற… இது உலக அரசியல்.. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தருகிறது.. ஏனென்றால் யூதர்கள் தான் அமெரிக்கா முன்னேற்றத்துக்கு காரணமாய் அமைந்தவர்கள்.. இந்தியா-பாகிஸ்தான் சிக்கலுக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பதும் வளர்ந்த நாடுகளுக்கு தேவையானது..” என்றான். கரியன்,”என்ன சொல்கிறாய்?? எனக்கு புரியவில்லை..” என்றான். இலக்கியன்,” எந்த சிக்கலாவது இரண்டு வல்லரசுகளுக்கு நடுவில் உள்ளதா?? இந்தியாவோ சீனாவோ வேறு எந்த நாடோ வல்லரசாவது மற்ற வல்லரசு நாடுகளுக்கு பிடிக்கவில்லை.. வன்முறையாளர்களின் (தீவிரவாதிகள்) குறி இந்தியா மேல் தான் இருக்கிறது.. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளை அழிக்கும் அளவுக்கு ஆயுதம் செய்து அணு ஆராய்ச்சி ஏன் செய்கிறார்கள்?? இந்தியாவையும் சேர்த்துத்தான்.. இதற்கு மட்டும் கோடிக்கணக்கான கோடிகள் செலவாகின்றன..” என்று விரிவுரைத்தான்.

கரியன்,”அது தீவிரவாதிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக…” என்றான். இலக்கியன்,” தீவிரவாதிகள் வைத்திருக்கும் அனைத்து ஆயுதங்களும் கடத்தப்பட்டவைகள் தானா?? அல்-கொய்தா, லக்ஷர-தொய்பா, தாலிபான் எல்லாம் எந்த நாடுகளுடைய உதவியும் இல்லாமல் தொடங்கப்பட்டது தானா?? மும்பை தாக்குதலுக்கு பின்னால் வேற யாரும் இருந்திருக்க முடியாதா??” என்றான்.

  கரியன்,” ஏன் உனக்கு முஸ்லீம்கள் மீது கோபமா??” என்றான்.  இலக்கியன்,”முஸ்லீம்கள் மீது கோபப்பட எனக்கு உரிமை இல்லை. மனிதர்கள் மீது தான் கோபப்பட முடியும். எனக்கு ‘ஜிகாதும்’ பிடிக்காது,’புலிகளும்’ பிடிக்காது.. வன்முறையாளர்களை பிடிக்காது.. அவ்வளவு தான்.. அவர்கள் முஸ்லீமோ?, இந்துவோ?.. எந்த மதத்தின் வேதமும் இன்னொரு மதத்தை எதிரியாகச் சாடுவதில்லை.. மதக்கொள்கைகளை பின்பற்றினால் அதையும் பின்பற்ற வேண்டியது தானே.. இஸ்லாமியர்க்கு மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் எதிரிகள் என்றால், முஸ்லீம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சிக்கல்கள் ஏற்படவில்லையே.. ஏன்?” என்று வினவினான்.

கரியன்,”ஓ! அப்படியென்றால் எல்லாவற்றுக்கும் வல்லரசு நாடுகள் தான் காரணம் என்கிறாயா?” என்றான். இலக்கியன்,”அப்படி இருக்க நிறைய வாய்ப்புண்டு. மாநில அரசியல் தான் காவிரி சிக்கலுக்கு காரணம். தேர்தல் பரப்புரையில் (campaign) சுட்டிக்காட்டி வாக்குகளைப் பெற வேண்டாமா?? “. கரியன்,”அடப்பாவி..எங்களை விட மோசமாக சிந்திக்கிறாயேடா!” என்று சிரித்தான். இலக்கியன்,”ஒவ்வொரு நாடுகளிலும் அமைதி குறைந்துகொண்டே போகிறது.. ஆஸ்த்ரேலியா இந்தியர்களை தாக்குவதும், சீனா அருணாச்சல் பிரதேசம் அவர்களுடையது என்று கூறுவதும் இந்தியாவிற்கு இன்னும் சிக்கல்களை அதிகப்படுத்துகிறது.. மூன்றாம் உலகப்போர் பக்கத்து பக்கத்து வீடுகளில் இருந்தே தொடங்குகிறது..”என்றான்.

கரியன், “நீ கூறுவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. நீ குறிப்பிட்டு சிலரை தாக்குவது போல் பேசுகிறாய்..” என்றான். இலக்கியன்,”யார் சொன்னதைத் தான் எல்லோரும் கேட்டிருக்கிறார்கள்? காசுக்காக மதம் மாறுபவர்களைப் பற்றியும், ஒதுக்கீடுக்காக (Quota) சாதி மாறுபவர்களைப் பற்றியும் எனக்கு கவலை இல்லை.”என்று கோபமாக கூறினான்.

அவர்களின் ‘தீவிர’ வாதம் தொடர்ந்துகொண்டே இருந்தது…

பின்குறிப்பு:
தமிழீழம் போராடும் முறை தவறென்று நான் இங்கு உரைத்திருந்தாலும், அவர்கள் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை நான் அறிவேன். பொதுமக்களைக் கொன்று குவித்த இலங்கைப்படையை விட இலங்கைப்படையிடம் மட்டுமே போராட்டத்தை நிகழ்த்திய தமிழீழத்தின் போராட்டம் சிறந்தது என்பேன். இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

குறிச்சொற்கள்: , ,