அப்பா

Posted on ஜூலை 6, 2009

17


ஈகையரசும் அவரது மகன் இளந்தென்றலும் சொற்கள் எதுவும் பரிமாறிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

இருவருக்கும்  மோதல் ஏற்பட்டுவிடுமோ என்று படப்படத்த இளந்தென்றலின் தாய், வெண்பா, “சாப்பிடவாங்க..” என்று திசைதிருப்பினாள். ஆனால், வெண்பா நினைத்த திசையில் திரும்பவில்லை. “நான் இன்னும் என்ன செய்யனும்னு நினைக்குறீங்க… எனக்கு புரியல..” என்றான் இளந்தென்றல். அதற்கு அவன் அப்பா,”நீ என்ன செஞ்சுட்ட பெருசா?”என்றார். அதற்கு தென்றல்,”ஏன்.. நான் டூயல் ப்ளேஸ்மண்ட் (இரட்டைபணியமர்த்தம்) வாங்கியிருக்கேன்…ரெண்டு தடவ கேட்( GATE) எக்ஸாம் க்ளியர்(தேர்வாகுதல்) பண்ணியிருக்கேன்… ஐ.ஐ.டிலயும், ஐ.ஐ.எஸ்.சிலயும் (IIT & IISC) இண்டர்வியு(நேர்முகத்தேர்வு) அட்டெண்ட் பண்ணியிருக்கேன்..இதெல்லாம் உங்களுக்கு பெருசா தெரியாதே?” என்று புயலாய் மாறினான். அதற்கு ஈகையரசு,”என்ன அவுட்புட்(பயன்,விளைவு) கிடைச்சுச்சு? இன்னும் கம்பனில இருந்து ஆர்டர்(கட்டளை) வரல.. ஐ.ஐ.டிலயும், ஐ.ஐ.எஸ்.சி’லயும் கிடைக்கல… இதுவரைக்கும் பெருசா எதாவது சாதுச்சிருக்கயா?” என்று வினவினார். கோபம் கொண்டதென்றல், “இதெல்லாம் நான் செஞ்சனால ஒங்களுக்கு பெருசாத்தெரில… பக்கத்து வீட்டுப்பையன் செஞ்சிருந்தாஅவனபத்தி பெருமயா ஏண்டயே வந்து சொல்லியிருப்பீங்க…” என்று கூறிவிட்டு, வீட்டை விட்டு வெளியே சென்றான்.
தாய், வெண்பா,”டேய்! எங்கடாபோற? சாப்டுபோடா..” என்று கூவியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் வேகமாக வெளியே சென்றான் தென்றல்.
மனதில் இருக்கும் கோபத்தை – தாழ்வுமனப்பான்மையை – வாய் பேசமுடியாத சுவர்களிடம் காட்டினான். அமைதியான சுற்றுசூழல், அசைந்தாடும் தென்னைமரங்கள், வரப்போகும் மழைக்கு முன்னோடியாய் வந்து நிற்கும் வானவில்அவன் மனதை அமைதிப்படுத்தியது.

கோபத்தையெல்லாம் வெளியே கொட்டிய தென்றல் வீட்டிற்கு வந்தான். வீட்டுவாசலில் இருந்த புதுக்காலணிகள் அவனுக்கு உறவினர்கள் வரவை உணர்த்தியது. கதவை திறந்து உள்ளே சென்றான். அவனது அப்பாவும், மாமாவும் கையில் காபி டம்பிளரோடு(குவளை) பேசிக்கொண்டிருந்தனர். தென்றலின் மாமா அவனிடம்,” இப்ப என்னடா பண்ற?” என்று கேட்டார். “ப்ளேஸ் ஆயிருக்கேன் மாமா.. இன்னும் டேட் வரல… அதுக்கு தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.” என்றான் தென்றல்.

என்றும் பாதுகாப்பாக அப்பா!!

உடனே ஈகையரசு,”அவன் ரெண்டு கம்பெனில பிளேஸ் ஆயிருக்கான்.. ரெண்டும் பெரிய கம்பெனி.. அதுபோக அவன் கேட் எக்ஸாம் ரெண்டு தடவ எழுதினான்.. ரெண்டுதடவையும் 90க்கு மேல எடுத்து க்ளியர் பண்ணான்.. பெரிய இன்ஸ்டிடியூசன்ல (கல்விக்கூடம்) எல்லாம் இண்டெர்வியு அட்டெண்ட் பண்ணான்.. அங்கயும் டெஸ்ட் க்ளியர் பண்ணிதான் இண்டெர்வியு போனான்… ரிஸல்ட்சுல(முடிவுகள்) கொஞ்சம் ஏமாத்திட்டாங்க.. இல்லன்னா இவனுக்கு உறுதியா கிடச்சுருக்கும்.. இப்ப ஆஃப்-கேம்பஸ்(கல்லூரிதொடர்பில்லாமல்) இண்டெர்வியு அட்டெண்ட் பண்றதா சொல்லிட்டு இருக்கான்.. பாப்போம்.. அவனும் அவன்னால முடிஞ்சதெல்லாம் செஞ்சுட்டுதான் இருக்கான்..” என்று தென்றலின் மாமாவிடம் அடுக்கினார்.
தன்முன் குறைத்துக்கூறுவதயும், பிறரிடம் பெருமையாகக்கூறுவதையும் பார்த்த தென்றலுக்கு அவன் தந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. அது அப்பாக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை! மகன்களுக்கு எளிதில் புரியாது!!

 

தொடர்புடைய கதைகள்:

அண்ணன்
அம்மா