தக்கன பிழைத்து வாழ்தல்!!

Posted on ஜூன் 23, 2009

8


தலைப்பின் பொருள் – Survival of the fittest

“நிதிலன்” என்பதை “நித்திலன்” என்று படிக்கவும். (நித்திலன் – முத்து போன்றவன்)

இப்பொழுது…

 நித்திலன், ஆட்டோக்காரனிடம் (மூவுருளி உந்து ஓட்டுனர்) ” இந்தாப்பா.. மீட்டருக்கு(நாணயமானி) மேலயே பத்து ரூபா வச்சுத் தாரேன்.. மொத்தமா முப்பது ரூபாய புடிதேவையில்லாம நேரத்த வீணடிக்காத..” என்றான். ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற ஆட்டோக்காரன், ” சார்.. மீட்டர் தப்பா காட்டுது சார்.. இந்த தூரத்துக்கு 50 ரூபா வரும் சார்..” என்றான்.

22 நிமிடங்களுக்கு முன்

நித்திலன் அலுவலகத்துக்கு செல்லும் அவசரத்தில் அரைகுறையாய் குளித்து, என்ன உண்கிறோம் என்று தெரியாமலே உண்டு, தலைப்புச்செய்திகளை மட்டும் பார்த்து விட்டு, காலணிகளை அணியச் சென்றான். திடீரென்று ஞாபகம் வந்த வண்ணமாய் சாமியறை உள்ளே சென்று இறைவனிடம் ஒரு வருகைப்பதிவு செய்துவிட்டு நெற்றியில் திருநீரிற்று கிளம்பினான். கைக்கடிகாரத்தின் முட்கள் சுட்டிய நேரத்தை கவனித்தான். நேரமாகிவிட்டதே என்று படபடத்தான்.

இப்பொழுது…

 

நீ ஏறும்போது என்ன சொன்ன? மீட்டர்ல வர்ர காச கொடுத்தா போதும் சார்னு சொன்னைல..” என்றான் நித்திலன். “ஆமா சார்.. எப்பயும் யார்ட்டயும் நான் அதிகமா வாங்குனதில்ல சார்.. மீட்டர்ல வர்ரத தான் கேட்பேன் சார்.” என்று பதிலளித்தான் ஆட்டோக்காரன். “அப்புறம் இப்ப ஏன்யா பஞ்சாயத்து பண்ற..” என்று தொடர்ந்தான் நித்திலன்.

 

18 நிமிடங்களுக்கு முன்

 நேரமாகிவிட்டது. இனிமேல் பேருந்து கூட்டதில் ஏறிச்சென்றால் அலுவலகத்தை அடைவதில் தாமதமாகிவிடும் என்று சிந்தித்த நித்திலன் அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு (மூவுருளி உந்து நிலையம்) நடந்தான். ஒரு ஆட்டோக்காரனிடம் பேரம் பேசத் தொடங்கினான். ” 40 ரூபா சார்.. அதுக்கு கீழ வர முடியாது சார்.. கூட்டநேரத்துல வந்துட்டு முப்பது ரூபா தான், முப்பது பைசா தான்றீங்க..” என்றான் அவன். நித்திலன் அருகில் இருந்த ஆட்டோக்காரனிடம் கேட்க,” சார்! இங்க பேரம் பேசுர பேச்சே கிடையாது சார்!! மீட்டர்ல வர்ர காசு தான் சார்! அதுக்கு மேல கேட்க மாட்டேன். ” என்றான் அவன். “சரி வா!” என்று வேகமாய் ஏறினான் நித்திலன்.

இப்பொழுது…

 

இங்க பாரு.. எனக்கு ஆபிஸுக்கு நேரமாயிட்டுருக்குஓண்ட பேசிட்டு இருக்க முடியாது.. மீட்டருக்கு மேல பத்து ரூபா வச்சுத் தாறேன்.. இந்தா 30 ரூபாய புடி..” என்று நித்திலன் ஆட்டோக்காரனிடம் 30 ரூபாயைக் கொடுத்துவிட்டு அலுவலகத்துக்குள் சென்றான். ஆட்டோக்காரனுக்கு என்ன நடக்கிறது என்றே புரியாமல் நின்றான்.
 
 
மூவுருளி உந்து

மூவுருளி உந்து

 

14 நிமிடங்களுக்கு முன்கிளம்பிய ஆட்டோ நடுவில் ஒரு சிக்னலில் (போக்குவரவு இயக்கச் சுட்டுக்குறி) வந்து மாட்டிக்கொண்டது. அதுவரை வெளியே அலைபாய்ந்துக் கொண்டிருந்த நித்திலனின் கண்கள் ஆட்டோ மீட்டரை கவனித்தது. மூன்று ரூபாய் வரவேண்டிய இடத்தில் 5 ரூபாய் காட்டியது மீட்டர். அப்படியென்றால், உண்மையாக 30 ரூபாய் வரவேண்டியதற்கு 50 ரூபாய் வருமே என்று கணக்கிட்டது நித்திலனின் மூளை. பச்சை நிரம் காட்டியது சிக்னல். ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோக்காரன் கவனிக்காத நிலையில் மீட்டரில் இணைந்திருக்கும் காப்புறையை(இன்சுலேசன் கவர்) நீக்கியது நித்திலனின் கைகள். ஆட்டோ டயரின்(உருளிப்பட்டை) சுழற்சியை பின்னூட்டமாக (ஃபீட்பேக்) கொடுக்கும் ஒரு கம்பி(வயர்) அந்த காப்புறையின் உள்ளே சுழன்று கொண்டிருந்தது. அந்த கம்பியின் சுழற்சியை நிருத்தினால் மீட்டர் ஓடாது என்று அறிந்த நித்திலன் அந்த கம்பியை அமுக்கி பிடித்துக் கொண்டான். அலுவலகத்தை அடைந்தது ஆட்டோ. “என்ன? 50 ரூபாய் வரவேண்டியதற்கு வெறும் 20 ரூபாய் தான் வந்திருக்கிறதே!” என்று திகைத்துப் போனான் ஆட்டோக்காரன்.
இப்பொழுது… 
 

 

கணினி முன்பு அமர்ந்து வேலைப் பார்க்க தொடங்கிய நித்திலனின் மனதில்,” ஏமாற்றுபவர்களை ஏமாற்றினால் தானே பிழைக்க முடியும்என்று தோன்றியது.